Published:Updated:

டி.ஆர்.எஸ் முதல் ட்ரோன் அனாலிசஸ் வரை... இது ‘டெக்னாலஜி’ கிரிக்கெட்!

டி.ஆர்.எஸ் முதல் ட்ரோன் அனாலிசஸ் வரை... இது ‘டெக்னாலஜி’ கிரிக்கெட்!
டி.ஆர்.எஸ் முதல் ட்ரோன் அனாலிசஸ் வரை... இது ‘டெக்னாலஜி’ கிரிக்கெட்!

ஆறிலிருந்து அறுபது வரை மட்டுமல்ல, தள்ளாடும் தாத்தாக்கள் வரை கிரிக்கெட் பார்க்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். உலக கிரிக்கெட் அரங்கிலேயே மிகவும் செல்வாக்குடைய, மிகுந்த செல்வம் கொழிக்கும் கிரிக்கெட் போர்டு இந்தியாவினுடையது என்றால் அதற்கு இந்திய ரசிகர்கள் தரும் பேராதரவு தான் காரணம். ஆனால் பெரும்பாலும் கிரிக்கெட்டில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வீரர்களின் ஆட்டத்திறன் மட்டுமல்ல, நடுவர்கள் தரும் தீர்ப்புகளும் தான் என்றால் மறுப்பதற்கில்லை. நடுவர்கள் தரும் தவறான தீர்ப்புகள் பலமுறை ஆட்டத்தின் முடிவையே மாற்றி இருக்கின்றது! இது இயல்புதான் என்றாலும், இந்த தவிர்க்க முடியாத மனிதப் பிழைகளை சரிக்கட்ட டெக்னாலஜியிடம் தஞ்சம் புகுந்திருக்கிறது கிரிக்கெட்டை நிர்வகிக்கும் அமைப்பான ஐ.சி.சி.! டிவி ரீப்லேக்கள் கொண்டு ஆரம்பத்திலேயே ரன் அவுட் தீர்ப்புகளின் பிழைகளை ஓரளவு நிவர்த்தி செய்துவிட்டாலும், LBW விக்கெட்களும், கீப்பர் கேட்ச்களும், ஏன் சில சமயம் சாதாரண கேட்ச்களும் கூட நடுவர்களை குழப்பி எடுத்துவிடும்! இதில் எதை எல்லாம், எப்படி எல்லாம் சரி செய்ய உதவுகிறது டெக்னாலஜி? பார்த்துவிடுவோமா?

டெசிஷன் ரெவியூ சிஸ்டம் (DRS)

முன்னரெல்லாம், நடுவர் அவுட் கொடுத்துவிட்டால், அது தவறான தீர்ப்பாகவே இருந்தாலும், எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் நடையை கட்ட வேண்டியதுதான். அதே போல், சரியான அவுட்டை கொடுக்கவில்லை என்றாலும் பவுலர் அடுத்த பந்தை வீச சென்றுவிடுவார். ஆனால் DRS வந்தப்பின்னர், பேட்ஸ்மேன்னுக்கோ, பவுலருக்கோ நடுவரின் தீர்ப்பில் சந்தேகம் இருப்பின், மேல் முறையீடு செய்யலாம். ஒன் டே மற்றும் டி20 ஆட்டங்களுக்கு, ஒரு இன்னிங்ஸிற்கு இவ்வளவு முறை மேல் முறையீடு செய்யலாம் எனவும், டெஸ்ட் போட்டிகளுக்கு, இவ்வளவு ஓவர்களுக்கு இவ்வளவு முறை மேல் முறையீடு செய்யலாம் என்றும் வகுத்திருக்கிறார்கள். இந்த DRS முறையில் ஆட்டக்காரரின் மேல் முறையீட்டை அலச, மூன்று முக்கிய டெக்னாலஜிகளை பயன்படுத்துகிறார்கள்.

ஸ்னிக்கோமீட்டர் (Snickometer)

ஒளி ஏமாற்றினாலும் ஒலியை வைத்து துல்லியமாக ஒரு நிகழ்வை கணித்துக்கொள்ளலாம். பெரும்பாலான கேட்ச்களில், பந்து பேட்டில் பட்டதா இல்லையா என்பதை இந்த சித்தாந்தம் கொண்டே அறிகிறார்கள். ஆலன் பிலஸ்கெட் என்னும் பிரிட்டிஷ் கணினி விஞ்ஞானியால் 90-களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஸ்னிக்கோமீட்டர், இப்பொழுது பந்து பேட்டில் பட்டதா இல்லையா என்று கண்டறிய உதவும் முக்கிய தொழில்நுட்பமாக விளங்குகிறது. ஸ்டம்ப்கள் ஒன்றினுள், மிகவும் சக்திவாய்ந்த மைக் ஒன்று பொறுத்தப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே! அதன் ஆடியோ பீட்டை (Audio Feed) வைத்துக்கொண்டு, ஸ்லொ-மோஷனாக விடியோவை ஓடவைத்து மேட்ச் செய்து, உண்மையை கண்டுபிடிக்கிறார்கள். பந்து பேட்டில் பட்டுவிட்டது என்றால் ஸ்னிக்கோமீட்டரில் அதிர்வலைகள் உண்டாகும். இதன்மூலம் நடுவர் ஒரு முடிவிற்கு வர முடியும்.

ஹாட் ஸ்பாட் (Hot Spot)

ஸ்னிக்கோமீட்டர் சில சமயம் சொதப்பிவிட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, நடுவர்கள் நாடுவது இந்த ஹாட் ஸ்பாட் டெக்னாலஜியை தான்! கேமரா புட்டேஜை (Footage) இன்பிரா-ரெட் இமேஜிங் அமைப்பு (Infra-red Imaging System) மூலம் பார்க்கும்பொழுது (மோனோக்ரோம் நெகடிவ் பிரேம்கள்), பந்து பேட்டில் பட்டிருந்தால் அதனால் ஏற்படும் வெப்ப உராய்வு, ஒரு வெள்ளை நிற அச்சை பேட்டில் ஏற்படுத்தும். இதை வைத்து பந்து பேட்டில் பட்டதா, எந்த இடத்தில் பட்டது என்பதை சுலபமாக அறிந்துக்கொள்ள முடியும்.

ஹாக்-ஐய் (Hawk-Eye) டெக்னாலஜி

பந்துவீச்சாளர் வீசிய பந்தின் திசையை ட்ராக் செய்யும் தொழில்நுட்பமான இந்த ஹாக்-ஐய் டெக்னாலஜி, பெரும்பாலும் LBW அப்பீல்களை ஆராய்ந்து முடிவளிக்க உதவுகிறது. DRSஇல் இறுதியாக, முடிவை துல்லியமாக தர இது உதவுவதாக கூறுகிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள். கடந்த 2001-ம் ஆண்டு நடந்த ஆஷஸ் போட்டிகளில் முதலில் பயன்படுத்தப்பட்ட இது, அதன் பிறகு, கிரிக்கெட் போட்டிகளின் முக்கியமான அங்கமாகிப்போனது.

ஸ்பைடர்-கேம்

இன்றைய காலகட்டத்தில், பல்வேறு தொழில்நுட்பங்கள் கிரிக்கெட்டை டிவியில் பார்ப்பவர்களுக்கு கூட, நிஜமாக நேரில் பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. அதற்கு முக்கியமான காரணம் இந்த ஸ்பைடர்-கேம்! மைதானத்தின் நடுவே இருக்கும் ஆட்டக்களத்தின் உச்சியில் கட்டப்படும் இது, நேராகவும், பக்கவாட்டிலும் கேமராவை நகர வைக்கிறது. இதன் மூலம் பல கோணங்களில் ஒரு நிகழ்வை பார்த்துவிட முடியும். ஸ்டம்ப்ட் மற்றும் ரன்-அவுட் அப்பீல்களை ஆராய நடுவர்களுக்கு இந்த கேமரா ஒரு வரப்பிரசாதம்!

LED பெயில்ஸ் (LED Bails)

பெரும்பாலான ஸ்டம்ப்ட் மற்றும் ரன்-அவுட் தருணங்களில், என்னதான் கேமரா சுற்றி-சுற்றி எடுத்தாலும், பெயில்ஸ் எப்பொழுது ஸ்டம்ப்பை விட்டு வெளியேறியது என்று அறிவது கடினமாகிவிடும். இதை சரிக்கட்டவே இந்த LED பெயில்ஸ்! பெயில்ஸ்கள் ஸ்டம்ப்களை விட்டு வெளியேறியதும், அதில் சிவப்பு நிற LED பல்புகள் ஒளிரும். இதன் மூலம் ஒரு பேட்ஸ்மேன் அவுட்டா இல்லையா என்பதை மேலும் துல்லியமாய் அறியமுடியும். பெயில்ஸ்களில் இருக்கும் மைக்ரோ-ப்ரோஸெசர், சென்சார்கள் மற்றும் குறைந்த-மின்னழுத்ததில் இயங்கும் பேட்டரிகள் இதற்கு உதுவுகிறது!

இவை ஒருபுறமிருக்க, தற்போது நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபித் தொடரில், நம்மை திகைக்கவைக்கும் வண்ணம் மூன்று புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது! இத்தொடரின் 'Innovation partner'-ஆக செயல்பட்ட அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான INTEL இதை சாதித்துள்ளது! அவை என்னென்ன?

ட்ரோன் அனாலிசிஸ் (Drone Analysis)

Intel Falcon 8 ட்ரொனானது, இன்பிரா-ரெட் மற்றும் HD காமெராக்களை உள்ளடக்கியது. இதை மைதானத்தின் மூலம் பறக்கவைப்பதன் மூலம் மைதானத்தில் இருக்கும் புற்களின் நிலை, அதன் கட்டமைப்பு, ஆடுகளத்தின் தன்மை, போன்றவற்றை நொடிகளில் பெற்றுவிடமுடியும்! பிட்ச் ரிப்போர்ட்டர்கள், வர்ணனையாளர்கள், வல்லுனர்கள் என அனைவருக்கும் உதவும் விதமாக இது செயல்படுகிறது. அதுமட்டுமின்றி, அன்றைய ஆட்டத்தின் போக்கை தீர்மானிப்பதில் ஆடுகளம் முக்கியமான பங்கு வகிப்பதால், இந்த ட்ரோன் அனாலிசிஸ் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!

பேட்-சென்சார் (Bat-Sensor)

ஒரு 2 ருபாய் நாணயத்தின் அளவே இருக்கும், இந்த பேட்-சென்சார் Speculur BatSense என்று அழைக்கப்படுகிறது. இதை கிரிக்கெட் பேட்களின் கைப்பிடி உச்சியில் பொருத்திவிட்டால் போதும். பேக் -லிப்ட், பேட்-ஸ்பீட், பேட் வீசப்படும் கோணம், பந்து படும் தருணத்தில் பேட்டின் வேகம் என்று அனைத்து விதமான தகவல்களையும் நொடிகளில் அளித்துவிடுகிறது! இதன் மூலம் ஒரு பேட்ஸ்மேனின் ஆட்டத்திறனை நன்கு அறிந்துக்கொள்ள முடியும்.

பரவசமூட்டும் VR அனுபவம்

இதைத்தவிர கூடுதல் போனஸாக விளையாட்டை பார்க்க மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கென்று பிரத்யேக virtual reality அனுபவம் வழங்கி அசத்தி இருக்கிறது INTEL. வளர்ந்து வரும் இந்த VR டெக் மூலம், ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை தாங்களே விளையாட முடியும். தங்கள் ஆட்டத்திறனை இதன் மூலம் அவர்கள் அறிந்துக்கொள்ள முடியும். முத்தாய்ப்பாக இந்த ஆட்டத்திலும் பேட்களில் சென்சார் பொருத்தி, ரசிகர்களின் பேட்டிங் திறனை புள்ளிவிவரத்துடன் வழங்கி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் இதைப்போல் நன்மைகளும், மகிழ்ச்சியும் கிடைக்கும் வரை, மேலும் பல புதிய தேடல்கள் விஞ்ஞானிகளுக்கும், பெரும் நிறுவனுங்களுக்கும் இருந்து கொண்டே தான் இருக்கும்! அதுவும் கிரிக்கெட் போன்ற கோடிகள் குவியும் விளையாட்டில், இன்னும் பல அடுத்தக்கட்ட தொழில்நுட்பங்கள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை!