Published:Updated:

புகைப்பட ஆர்வலர்கள் வாங்க வேண்டிய முதல் கேமரா... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

‘தடி எடுத்த எல்லோரும் தண்டல்காரன் ஆகிவிட முடியாது’ என்பார்கள். ஆனால், கேமரா வைத்திருக்கிற எல்லோரும் புகைப்படக்காரர் ஆகிவிடுகிறார்கள். திருமணம் போன்ற விசேஷ வீடுகளில் யார் புகைப்படம் எடுப்பவர் என்பதைக் கண்டுபிடிக்கவே சிரமமாய் இருக்கிறது. புகைப்படக்கலையைப் பொறுத்தவரை பிலிம் ரோலில் இருந்து டிஜிட்டலுக்கு மாறியதே மிகப் பெரிய புரட்சிதான். இப்போது 15 ஆயிரத்தில் இருந்து DSLR கேமராக்கள் சந்தையில் கிடைக்க ஆரம்பித்து விட்டன. ஊட்டிக்கோ கொடைக்கானலுக்கோ சுற்றுலா என முடிவெடுத்துவிட்டால் முதலில் லிஸ்ட்டில் வருவது கேமராதான். இன்றயை காலத்தில் எல்லோர் வீடுகளிலும் ஒரு DSLR  கேமரா இருக்கிறது. புகைப்படத் துறையில் அடியெடுத்து வைக்கிறவர்கள் ஆரம்பத்தில் செய்ய வேண்டியது என்ன, வாங்க வேண்டிய கேமராக்கள் என்ன என்பது பற்றிய அலசல் இது.

புகைப்படத்துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவரும், புகைப்படம் பற்றிய பயிற்சி வகுப்பு எடுப்பவருமான திரு.சாய் ரகுநாத்திடம் பேசிய போது  "நான் போகிற இடங்களில் எல்லாம் வலியுறுத்துகின்ற ஒரே விஷயம், கேமராவுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்காதீங்க, எப்போதும் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் பழகுங்க. காரணம் நமக்காகத்தான் கேமராவே தவிர கேமராவுக்காக நாம இல்ல. உலக அளவில் பல விருதுகளைப் பெற்ற  புகைப்படங்கள் சாதாரண மொபைல் போனில் எடுக்கப்பட்டதுதான், அதற்கான சான்றுகள் கூட இருக்கு. வியட்நாம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த புகைப்படத்தைப் பற்றித்தான் இப்போது வரை நாம் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர அந்தப் புகைப்படத்தை எடுத்த  கேமராவைப் பற்றி அல்ல.

விருதுக்குப் படத்தைத் தேர்ந்தெடுப்பவங்க எந்த கேமராவுல எடுத்தது, எந்த லென்ஸில் எடுத்தது என்றெல்லாம் பார்க்க மாட்டாங்க. படத்தோட அழகு, ஃப்ரேமிங், உள்ளடக்கம் மட்டும்தான் பாப்பாங்க. புதுசா புகைப்படத்துறைக்கு வருகிற எல்லோருக்கும் நான் சொல்வது எல்லாவற்றையும் விஷுவலா பாருங்க. ஒரு ஃப்ரேம்க்குள்ள என்ன இருக்கு, அதைத் தாண்டி வெளிய என்ன இருக்குனு பாருங்க. கேமரா பற்றிய புரிதல்களோட இருங்க. புகைப்படம் சார்ந்த பயிற்சி வகுப்புகளுக்கு போங்க. சும்மா இருக்குற நேரத்துல கேமரா சார்ந்து இயங்கிக் கொண்டே இருங்க. எப்போதும் புகைப்படம் சார்ந்த நமது ரசனைக்கும், காட்சி அமைப்பிற்கும் முக்கியத்துவம் குடுங்க. கேமரா என்பது என்னைப் பொறுத்தவரை இரண்டாம்பட்சமே, நம்பிக்கையோடு செயல்பட்டால் செல்போனில் கூட அழகான படங்களை எடுக்கலாம். இன்றைய நவீன காலத்தில் அடிப்படையான கேமராக்கள் எல்லாமே அதிக வசதிகளைக் கொண்ட கேமராக்களாகத்தான் இருக்கின்றன. மோசமான புகைப்படக்காரர்கள்தான் இருக்கிறார்கள். மோசமான கேமரா என்ற ஒன்றே இப்போது அரிதுதான். அதனால், உங்கள் தேவை எது என்பதை அறிந்து அதற்கேற்ற கேமரா வாங்குங்கள்” என்கிறார்.

தொழில்முறை புகைப்படக்காரர்களுக்குப் பல லட்சங்களில் கேமரா என்பது தேவையான ஒன்றுதான். ஆனால் புதிதாக போட்டோகிராபி உலகத்திற்குள் வருகிறவர்கள் எந்த கேமரா வாங்குவது, எப்படிக் கற்றுக்கொள்வது என்பதைப் பற்றி கேமரா உபகரணங்கள் சார்ந்த கடை நடத்தி வரும் சென்னை கேமரா வினோத்திடம் கேட்டோம்.

“ஆரம்ப நிலையில் இந்தத் துறைக்குள் வருகிறவர்கள் கெனான் 1300D அல்லது நிக்கான் D 3300 வாங்கலாம். அதனோடு சேர்ந்து கிட் லென்சும் தருகிறார்கள். சில சலுகைகளாக டெலி லென்ஸும்  தருகிறார்கள். முதலில் கிட் லென்ஸில் பழகுவதே சிறந்தது. கேமரா பற்றிய நுணுக்கங்கள் தெரிந்தபிறகு அடுத்தக் கட்ட அப்டேட்டுகளுக்குப் போகலாம். ஆரம்ப நிலையில் 5D போன்ற விலை உயர்ந்த கேமராக்களை வாங்கி பயன்படுத்துவது என்பது ஆடி காரை வாங்கி டிரைவிங் பழகுவதற்கு ஒப்பானது. எல்லா ஊர்களிலும் இப்போது வீக் எண்ட் க்ளிக்கர்ஸ் என்கிற பெயரில்  புகைப்படம் சார்ந்து இயங்குகிறவர்கள் நிகழ்வுகள் நடத்துகிறார்கள். அதில் கலந்துகொள்ளலாம்.  அவர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுப்பது பற்றிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம்” என்கிறார்.

ஒளிப்பதிவின் வேத நூலாகப் பார்க்கப்படும் 5C என்ற நூலை புகைப்படத்துறை சார்ந்த எல்லோருமே பரிந்துரைக்கிறார்கள். இவைத் தவிர்த்து கேமரா சார்ந்த பல  நூல்களை வாங்கிப் படிக்கலாம். 30 ஆயிரம் விலையுள்ள கேமராவில் புகைப்படம் பற்றிய அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்டு தொழில்முறை புகைப்படக்காரராக மாறும் போது 5D போன்ற கேமராக்களை வாங்கலாம். மாறாக நான் பொழுது போக்கிற்காகத்தான் கேமரா வாங்குகிறேன் என்றால் 50 ஆயிரத்திற்குள் இருக்கிற கேமராக்கள் போதும் என்கிறார்கள் கேமரா நிபுணர்கள். கேமரா என்பது இன்றைய காலத்தில் மனிதனின் ஆறாவது புலன். அதை எப்படி கையாள்கிறோம் என்பதில் இருக்கிறது நமது நலன்.