Published:Updated:

தமிழகத் தியேட்டர்களில் எந்திரன் 2.0-வுக்கு டெக்னாலஜி போதாது என்கிறார் தயாரிப்பாளர்!

தமிழகத் தியேட்டர்களில் எந்திரன் 2.0-வுக்கு டெக்னாலஜி போதாது என்கிறார் தயாரிப்பாளர்!
தமிழகத் தியேட்டர்களில் எந்திரன் 2.0-வுக்கு டெக்னாலஜி போதாது என்கிறார் தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவிற்கு இது போதாத காலம்தான்! திரையரங்குகள் மூடப்பட்டன. இரட்டை வரியால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமே கவலையடைந்துள்ளது. தமிழக முதல்வரிடம் கூடுதல் வரியைக் குறைக்கச் சொல்லி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ரீலீஸ் தேதியை ஜூலை முதல் வாரம், இரண்டாம் வாரம் என்று முன்னரே அறிவித்த பல திரைப்படங்கள் "இப்போதைக்கு இல்லைங்க" என்று அறிவித்துவிட்டன.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், ரஜினிகாந்தின் பிரம்மாண்ட '2.0' திரைப்படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் புதன்கிழமை அன்று தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது. இதில் 2.0 படம் ஜனவரி 25, 2018 அன்று வெளியாவதற்குள் தமிழக தியேட்டர்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அந்த நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜு மகாலிங்கம் பேசுகையில், "இது 400 கோடி செலவில், நவீன 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் பிரம்மாண்டமான படம்! ஆனால் இது மட்டும் போதுமா? இந்தத் திரைப்படம் கொடுக்கப்போகும் அனுபவத்தை மக்கள் முழுமையாக ரசிக்க திரையரங்குகளின் தரத்தை உயர்த்த வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

இப்போது நிலவும் அசாதாரண சூழல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ராஜு மகாலிங்கம் "வரிகள் குறித்து தெளிவு ஏற்படாத வரை புதுப் படங்கள் எதையும் தொடங்க வேண்டாமென எங்கள் லண்டன் தலைமையகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. தமிழக அரசு தமிழ் திரையுலகின் வேண்டுகோளை ஏற்று, 30% கூடுதல் வரியை நீக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும், பெரும் நகரங்களில் இருக்கும் திரையரங்குகள் தவிர, பெரும்பாலான திரையரங்குகளில் 3D தொழில்நுட்பம் என்பது யாருமே கண்டிராத ஒன்றாகத்தான் இன்றும் இருக்கிறது. தமிழில் ஏற்கெனவே 3D படங்கள் ஒன்றிரண்டு வந்திருந்தாலும் அவை இங்கே சாதாரண 2D தொழில்நுட்பத்தில்தான் வெளியாகின. இந்நிலையில் 2.0 என்ற ஒரே ஒரு 3D படத்திற்காக அங்கே அடிப்படையிலிருந்து மொத்த தொழில்நுட்பத்தையும் மாற்ற வேண்டுமென்றால் நிறைய செலவாகும். அந்தச் செலவு எவ்வளவு என்றால், கிராமங்களில் 2.0 படம் வசூலிக்கும் லாபத்தை விடவும் அதிகமாக இருக்கலாம்! அதனால் இந்தத் தொழில்நுட்ப மாற்றம் கிராமங்களில் எந்தளவு சாத்தியம் என்பது தெரியவில்லை.

இன்னொரு புறம், கிராமங்களில் திரையரங்குகளில் தொழில்நுட்பம் வளராவிட்டாலும், மக்கள் அதிவேகமாக தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். டிஜிட்டல் டவுன்லோடு காலத்தில் நின்று கொண்டிருக்கும் நாம், ஒரு திரைப்படம் வெளியாகி முதல் நாளே அதன் காப்பியைத் தரவிறக்கம் செய்து நம் மொபைலிலேயே பார்க்கும் அளவிற்கு வந்து விட்டோம். எனவே திருட்டு விசிடிக்கள், சட்டவிரோதமாகத் தரவிறக்கம் செய்து படம் பார்ப்பது போன்ற விஷயங்களைத் தாண்டி மக்களைத் திரையரங்கங்களுக்கு வரவைக்க 3D போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்டு மாயாஜாலம் காட்டினால் மட்டுமே முடியும் என்பதுதான் உண்மை!

அடுத்த கட்டுரைக்கு