Published:Updated:

இந்த மாதம் வெளியாகிறதா ரெட்மி நோட் 5... இவைதாம் ஸ்பெக்ஸ்! #RedmiNote5

இந்த மாதம் வெளியாகிறதா ரெட்மி நோட் 5... இவைதாம் ஸ்பெக்ஸ்! #RedmiNote5
இந்த மாதம் வெளியாகிறதா ரெட்மி நோட் 5... இவைதாம் ஸ்பெக்ஸ்! #RedmiNote5

இந்தியாவின் மொபைல் சந்தையில் ஒவ்வொரு முறையும் புதிய புதிய மொபைல் தொழில்நுட்பங்கள் ஆக்கிரமிப்பது வழக்கமான ஒன்றுதான். ஒவ்வொரு மொபைல் நிறுவனங்களும் பயனாளர்களிடம் அந்தத் தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதில் கடும் போட்டி போடும். அதில் வாசகர்களின் தேவையை சரியாக உணர்ந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் மக்கள் மத்தியில் இடம் பிடிக்கும். இப்படித்தான் நோக்கியா தொடங்கி இன்று பல மொபைல் கம்பெனிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் சற்று பரபரப்பான மொபைல் நிறுவனங்களின் பெயர்கள் உச்சரித்தாலும், அதில் ஜியோமி நிறுவனத்தின் ரெட்மிக்கு தனி இடம் உண்டு. அந்த அளவுக்கு மொபைல் பயனாளர்களுக்கு தேவையான வசதிகளையும் பட்ஜெட் விலையில் தரமாக கொடுத்து வருவதில் ஜியோமி கில்லாடி. இதற்கெல்லாம் காரணம், இந்திய மொபைல் சந்தையையும், மக்களின் தேவையையும் அந்நிறுவனம் முழுமையாக உணர்ந்ததுதான். என்னதான் ரெட்மி மொபைல் சூடாகிறது எனச் சொல்லப்பட்டாலும், விற்பனை என்னவோ ஏறுமுகம்தான். ஆன்லைனில் விற்பனை கவுண்டவுன் தொடங்கியதும் சில மணித்துளிகளிலேயே விற்றுத் தீர்ந்துவிடுகிறது. இந்த வரிசையில் உள்ள நிறுவனம் ரெட்மி நோட் 4-ஐ வெளியிட்டதைத் தொடர்ந்து, எம்.ஐ நோட் 3 மற்றும் எம்ஐ மிக்ஸ் 2 ஆகிய மொபைல்களை தயாரிக்கிறது என அவ்வப்போது தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து ரெட்மி நோட் 5-ஐ தயாரித்து வருவதாகவும், அது இம்மாத இறுதியில் விற்பனைக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதுவரை வெளியான தகவலின்படி, ரெட்மி நோட் 5 மொபைல் 3ஜி.பி மற்றும் 4 ஜி.பி ரேம் என இரண்டு வகையான ரேம்களை கொண்டிருக்கும். இந்த இரண்டு மாடல்களில் 3ஜி.பி ரேம் வசதி கொண்ட மொபைல் 32 ஜி.பி மெமரியுடனும், 4 ஜி.பி ரேம் மொபைல் 64 ஜி.பி மெமரியுடனும் இருக்கும். MIUI 9 மென்பொருளின் ஆண்ட்ராய்டு நெளகட் 7.1.1-ல் இம்மொபைல் இயங்கும். இம்மாத இறுதியில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை, இந்திய ரூபாயில் 13,000 இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டிஸ்ப்ளே 5.5 இன்ச், 1080 பிக்சல் டிஸ்பிளே, 64 பிட் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், இதில் புதிதாக க்ராபிக்கல் செயல்பாடுகளுக்காக அட்ரினோ 508 கிராபிக்ஸ் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரையில் 16 எம்பி பிரைமரி கேமரா (f/2.0 அப்ரேச்சர்), 13 எம்பி முன்பக்க கேமரா, குயிக் சார்ஜ் 4.0, புளூடூத் 5, யூஎஸ்பி டைப் சி - 3.1 எனப் பல அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. 

மொத்தமாகத் தனது முந்தைய படைப்பான ரெட்மி நோட் 4 ஐ விட அதிக வசதிகளைக் கொண்டதாக இந்த மொபைல் இருக்கும். இதில் முக்கியமான வசதியாக ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஹோம் பட்டனும் ஒரே வசதிக்காக இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி திறன் 3790 mAh ஆகும். இது கடந்த மாடலான நோட் 4-ஐ காட்டிலும் குறைவுதான். ஏற்கனவே சந்தையில் சக்கைப்போடு போடும் ரெட்மி மொபைல்கள் வரிசையில் இந்த மொபைலும் வெளியானால் மொபைல் பிரியர்களிடையே ஒரு இடத்தை ரெட்மி தக்க வைத்துக் கொள்ளும் என்பது மட்டும் நிச்சயம். 

அடுத்த கட்டுரைக்கு