Published:Updated:

“நான் டப்பிங்தான்... வாயை குவிச்சது ஆரோ!” - ஃபேக் ஒபாமா வீடியோவுக்குப் பின்னாலிருக்கும் மேஜிக்

“நான் டப்பிங்தான்... வாயை குவிச்சது ஆரோ!” - ஃபேக் ஒபாமா வீடியோவுக்குப் பின்னாலிருக்கும் மேஜிக்
“நான் டப்பிங்தான்... வாயை குவிச்சது ஆரோ!” - ஃபேக் ஒபாமா வீடியோவுக்குப் பின்னாலிருக்கும் மேஜிக்

உங்களிடம் உங்கள் தாத்தா பேசுவது போல் ஒரு ஆடியோ டேப் இருக்கிறதா? பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் அல்லது வேறு வீடியோ காட்சிகள் இருக்கிறதா? உங்கள் தாத்தா அந்த ஆடியோ டேப்பை இப்போது பேசுவது போலவே தத்ரூபமாக AI உதவியுடன் ஒரு வீடியோவாக உருவாக்கித் தர முடியும் என்று ஆச்சர்யப்படுத்துகிறார்கள் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் இருக்கும் கணினி பொறியாளர்கள். சேவாக் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பதுப் போல, இதை நிரூபிக்க அவர்கள் முதலில் எடுத்துக்கொண்ட ஆடியோ மற்றும் புகைப்படங்கள் யாருடையது தெரியுமா? பராக் ஒபாமா!

ஆச்சர்யம் காட்டும் ஒபாமா வீடியோ

Artificial Intelligence (AI) என்னும் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு ஜாலங்கள் பல நிகழ்த்தலாம் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சிட்டி ரோபோ ஐஸ்வர்யா ராய் மீது அத்தனை ஃபீலிங்ஸ் உடன் காதலில் விழுவதையே ஆச்சர்யப்பட்டு பார்த்த நாம், ஒபாமாவை வைத்து நிகழ்த்தப்படும் இந்த மாயாஜாலத்தைப் பார்க்காமல் இருந்தால் எப்படி? கீழே உள்ள இந்த விடியோவை ஒரு முறை பார்த்து விடுங்கள்.

எப்படி சாதித்தார்கள்?

பரிசோதனை முயற்சியாக ஒபாமாவை எடுத்துக் கொண்டதன் காரணம், இணையத்தில் ஒபாமாவின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் லட்சக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. இதன் மூலம், ஒபாமாவின் முகப்பாவனைகள் எப்படி இருக்கும், அவர் பல சொற்களை எவ்வாறு உச்சரிக்கிறார், பேசும்போது எவ்வாறு அவரின் உதடுகள், கண்கள், தாடைகள் அசைகிறது போன்றவற்றை தங்களிடம் இருக்கும் AI தொழில்நுட்பத்தைக் கொண்டு கண்காணித்தார்கள். செயற்கை நரம்பியல் மண்டலம் ஒன்றை உருவாக்கி அதில் ஒபாமாவின் ஆடியோ அலைகளை டேட்டாக்களாக மாற்றி அனுப்பி வைத்தார்கள். பின்னாளில், இந்த செயற்கை மண்டலமானது இந்த ஒலிக்கு இவ்வகையில் வாயசைக்க வேண்டும் என்பது வரையில் பல்வேறு பழைய ஒபாமா வீடியோக்களை வைத்து அடையாளம் கண்டுகொண்டு விட்டது. பற்பல பழைய ஒபாமா வீடியோக்களை கொண்டு அவர் பேசவே பேசிடாத ஒரு புதிய வீடியோ ரெடி!

என்ன பயன்?

இதன் மூலம் வீடியோ காண்ஃபரன்ஸிங் தொழில்நுட்பத்தை பலப்படுத்த முடியும் என்கிறார் இந்த ஆய்வின் இணை-ஆசிரியர் Ira Kemelmacher-Shlizerman. “சில நேரங்களில் இன்டர்நெட் வேகம் குறையும் போது, ஒரு வீடியோ காண்ஃபரன்ஸில் வீடியோ அப்படியே உறைந்து விடும். ஆனால் ஆடியோ மட்டும் தொடர்ந்து ஒலிக்கும். அப்படிப்பட்ட தருணங்களில் இந்த புதிய தொழில்நுட்பம் கைகொடுக்கும். பல்வேறு விர்ச்சுவல் ரியாலிட்டி ஆப்களுக்கும், ஆக்மெண்டெட் ரியாலிட்டி ஆப்களுக்கும், ஒருவரை டிஜிட்டல் பிரதியெடுக்க இது மிகவும் உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

இது ஆபத்து இல்லையா?

இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படலாம், பல்வேறு ஃபேக் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்படலாம் என்ற வாதம் கலவரம் ஏற்படுத்தாமல் இல்லை. ஆனால் இதுக் குறித்து பயப்படத் தேவையில்லை என்று நம்பிக்கை தெரிவித்தார் இந்த ஆராய்ச்சியின் தலைவர் Supasorn Suwajanakorn. “வருங்காலத்தில் ஒபாமா பேசாத வார்த்தைகளையும் கொண்டு வீடியோக்களை உருவாக்கிட முடியும். ஆனால் அது ஃபேக் என்பதை நொடியில் கண்டுபிடித்து விட முடியும். தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக பற்கள் அசையும் போது, ஒருவித தெளிவின்மையை உருவாக்குவோம். இதை மற்றவர்கள் காப்பி அடித்தாலோ அல்லது சேர்க்காமல் விட்டாலோ அது ஃபேக் என்று அறிந்துக் கொள்ளலாம். இதை எங்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்” என்றார்.

உலகமே உற்றுப்பார்க்கிறது

இன்னமும் மெருகேற்றும் முயற்சியில், ஆராய்ச்சி அளவில் மட்டுமே இருக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உலகநாயகன் கமல்ஹாசன் முதல் நேற்று வந்த ‘பிக் பாஸ்’ ஆரவ் வரை அவர்களின் குரல் மற்றும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கொண்டு அவர்கள் பேசுவது போலவே ஒரு வீடியோவை உருவாக்கிட முடியும். அது சரி, இந்த ஆராய்ச்சிக்கு உலக அளவில் யாரெல்லாம் நிதியளிக்கிறார்கள் தெரியுமா? பெரும் நிறுவனங்களான சாம்சங், கூகுள், ஃபேஸ்புக் இன்டெல் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகம். சிறப்பு, மிகச் சிறப்பு!