Published:Updated:

5300 mAh பேட்டரி... 6.44 இன்ச் டிஸ்ப்ளே... ஜியோமியின் அடுத்த அதிரடி! #MIMax2

5300 mAh பேட்டரி... 6.44 இன்ச் டிஸ்ப்ளே... ஜியோமியின் அடுத்த அதிரடி! #MIMax2
5300 mAh பேட்டரி... 6.44 இன்ச் டிஸ்ப்ளே... ஜியோமியின் அடுத்த அதிரடி! #MIMax2

ந்திய மொபைல் போன் சந்தையில், இந்த வருடம் ஜியோமி நிறுவனத்தின் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கிறது. நிறைய வசதிகளுடன் குறைந்த விலை கொண்ட இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்துமே விற்பனையில் ஹிட் அடித்திருக்கின்றன. சூப்பர்ஸ்டார் படத்துக்கு டிக்கெட் புக் செய்வதைப்போல, ஜியோமியின் மொபைல் போன்களை ஆர்டர் செய்ய ஆன்லைனில் பெரும் கூட்டமே காத்துக்கிடக்கிறது. தரமான கேமரா, அதிகத்திறன் கொண்ட பேட்டரி, அழகான வடிவமைப்பு போன்றவற்றோடு, குறைந்த விலையில் நீடித்துழைக்கும் தரத்தில் இருக்கும் மொபைல் போன்கள்தான் புதிதாக வாங்குவோரின் தேர்வுகளாக இருக்கும். இவை அனைத்தையும் தருவதுதான் ஜியோமி நிறுவனத்தின் வெற்றி மந்திரம்.

ரெட்மி நோட் 4, ரெட்மி 4 மற்றும் ரெட்மி 4A என ஜியோமி அறிமுகப்படுத்திய மொபைல் போன்கள், விற்பனையில் ஹாட்-ட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்திருக்கின்றன. இதுவரை வெளிவந்த மொபைல் போன்களில், அதிகம் விற்பனையான நான்காவது மாடல் என்ற பெயரை ரெட்மி நோட் 4 பெற்றிருக்கிறது. ஃப்ளாக்‌ஷிப் கில்லர் என்றழைக்கப்படும் அதிகத்தரம் கொண்ட விலை குறைவான மொபைல் போன்கள்தான் அந்நிறுவனத்தின் பெரிய பிளஸ். 'மேக் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கியுள்ள அந்நிறுவனம், மொத்தம் இரண்டே இடங்களில்தான் வேர்ஹவுஸ் வைத்துள்ளது.

ஜியோமி நிறுவனத்தைப் பொறுத்தவரை ஸ்மார்ட்போன் உள்ளிட்ட ஸ்மார்ட் பொருள்கள் அனைத்தையும் முதலில் சீனாவில் அறிமுகப்படுத்துவதுதான் வழக்கம். அதன்பின்னர்தான் அப்பொருள்களைப் பிற நாடுகளில் படிப்படியாக இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும். அந்தவரிசையில், சீனாவில் மில்லட் மேக்ஸ் 2 என்ற பெயரில் வெளியாகி ஹிட் அடித்த மொபைல் போனை, மி மேக்ஸ் 2 என்ற பெயரில் ஜியோமி நிறுவனம் நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மி மேக்ஸ் 2 (MI Max 2) :

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் அதிகக்கவனம் செலுத்தும் சிறப்பம்சங்களில் ஒன்றாகத் தற்போது பேட்டரி மாறியுள்ளது. மேக்ஸ் 2 மாடலைப் பொறுத்தவரை, 5300 mAh பேட்டரித்திறன்தான் இதன் 'பளிச்' ஹைலைட். கடந்த ஆண்டு வெளியான 'மி மேக்ஸ்' மொபைல் போனின், அட்வான்ஸ்ட் வெர்ஷனாகத்தான் இது தற்போது வெளிவந்துள்ளது.

6.44 இன்ச் HD டிஸ்ப்ளேயுடன் வந்திருக்கும் இந்த மொபைல் போன் பற்றி, "வீடியோ பார்க்கவும், படிக்கவும் பெரிய சைஸ் டிஸ்ப்ளேதான் சரியாக இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளது ஜியோமி. மேலும், கொரில்லா கிளாஸ் 3 பதிக்கப்பட்டிருப்பதால், பெரிய அதிர்வுகளைக்கூட தாங்கக்கூடிய வலிமையுடன் டிஸ்ப்ளே பாதுகாப்பானதாக இருக்கும். ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர், குவிக் சார்ஜ் 3.0, டூயல் சிம், 4ஜி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரி என ஸ்பெக்ஸ் அனைத்தும் பலமாகத்தான் இருக்கின்றன.

மெமரி கார்டு மூலம் 128 ஜிபி வரை மெமரியை நீட்டித்துக்கொள்ள முடியும். ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசரில் செயல்படுவதால், வேகமாகவும் குறைவான பேட்டரியைப் பயன்படுத்தக்கூடியதாகவும் இந்த மொபைல் போன் இருக்கும்.  ஜியோமி நிறுவனத்தின் MIUI இயங்குதளத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வெர்ஷனான நெளகட் இதில் இருக்கிறது. மெயின் கேமராவின் திறன் 12 மெகா பிக்ஸல்தான் என்றாலும், சோனியின் IMX386 சென்சார் இருப்பதால் குறைந்த ஒளியிலும் தரமான புகைப்படம் எடுக்கமுடியும் என ஜியோமி நிறுவனம் விளம்பரப்படுத்தியிருக்கிறது. 5 மெகா பிக்ஸல் முன்பக்கக் கேமராவும் இதில் இடம்பெற்றுள்ளது.

இன்ஃப்ராரெட் சென்சார் இருப்பதால், மற்ற ரெட்மி மொபைல் போன்களைப் போல், எலக்ட்ரானிக் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் ரிமோட் கன்ட்ரோலாகவும் இந்த போனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் ஆப்ஷன் இருப்பதால், டிஸ்ப்ளேயின் ஒரு பகுதியில் வீடியோ பார்த்துக்கொண்டே மற்றொரு பகுதியில் சாட் செய்யமுடியும். 5000 mAh பேட்டரித்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் தான் தற்போது சந்தையில் கலக்கிக்கொண்டிருக்கின்றன. இந்தப்பட்டியலில், 'மி மேக்ஸ் 2' ஸ்மார்ட்போனும் தற்போது இணைந்துள்ளது.

ஃபிளாக்ஷிப் கில்லர் (Flagship Killer) என்றழைக்கப்படும் அதிக வசதிகள் கொண்ட மலிவுவிலை மொபைல் போன்களின் விற்பனையில் ஜியோமி நிறுவனம்தான் முன்னிலையில் இருக்கிறது. விலை குறைவான மொபைல் போன்கள் ஹிட் அடிக்கின்றன என்றாலும், விலை அதிகமான மொபைல் போன்களுக்கும் தனிப்பட்ட சந்தை இருக்கத்தான் செய்கிறது. இதுவரை மலிவுவிலைக்கு மொபைல் போன்களை அறிமுகப்படுத்திவந்த சில நிறுவனங்கள், இந்த சந்தையைக் குறிவைத்து விலை அதிகமான மொபைல் போன்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில், ஜியோமி நிறுவனத்தின் 'மி மேக்ஸ் 2 (MI Max 2)' இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விலை : ரூ.16,999/-
விற்பனை : வருகின்ற 27-ம் தேதி முதல்

அடுத்த கட்டுரைக்கு