Published:Updated:

செல்போன், வைஃபை, டிவி இல்லாமல் ஒரு கிராமம்... இது அமெரிக்காவின் பிக் பாஸ் வீடு!

செல்போன், வைஃபை, டிவி இல்லாமல் ஒரு கிராமம்... இது அமெரிக்காவின் பிக் பாஸ் வீடு!
செல்போன், வைஃபை, டிவி இல்லாமல் ஒரு கிராமம்... இது அமெரிக்காவின் பிக் பாஸ் வீடு!

செல்போன், வைஃபை, டிவி இல்லாமல் ஒரு கிராமம்... இது அமெரிக்காவின் பிக் பாஸ் வீடு!

அந்த வெள்ளை நிற ட்ரக் அதிக சத்தமில்லாமல் அந்தச் சாலையில் வருகிறது. அந்தச் சாம்பல் நிற வீட்டைக் கடக்கும் போது, வண்டியிலிருக்கும் அந்த நீல நிற சதுர டப்பாவில் சிகப்பு விளக்கு எறிகிறது. வண்டியிலிருந்து இறங்கும் ஜோன்னா பெளசர்மேன், வீட்டின் கதவைத் தட்டுகிறார். கதவைத் திறக்கும் அவர் ஜோன்னாவைப் பார்த்ததும், தலை குனிந்து அமைதியாக நிற்கிறார்...

“அவசியப்பட்டா கடுமையான நடவடிக்கை எடுக்கலாமுங்குற அதிகாரத்த எனக்குக் கொடுத்திருக்காங்க. ஆனா, எனக்கு அப்படி செய்றதுல விருப்பமில்ல. இத்தனை வருஷமா நம்ம ஊர்ல எல்லோரும் ஒற்றுமையா இருந்து, இந்தத் தேசத்துக்கான ஒரு மிகப் பெரிய சேவைய செய்திட்டு வர்றோம். தயவு செய்து அதைக் கெடுத்திடாதீங்க. நாளை காலை முத வேலையா அந்த வைஃபைய எடுத்துக்கிட்டு ஊருக்கு வெளிய கொண்டு போய் போட்ருங்க..." எனச் சற்றே கடுமையான வார்த்தைகளில் அவரிடம் பேசிவிட்டு நகர்கிறார் ஜோன்னா.

இது அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாகாணத்திலிருக்கும் "க்ரீன் பேங்க்"  எனும் சிறு கிராமம். இந்த ஊரில் மொத்தம் 143 பேர் இருக்கிறார்கள். இந்த ஊரில் குடியிருக்கும் அவர்களிடம் அரசாங்கம் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது.

 "செல்போன், இன்டெர்நெட், மைக்ரோவேவ் அவன் ( MicroWave oven), டிவி, ரேடியோ எந்தவொரு டெக்னாலஜி சார்ந்த பொருள்களையும் உபயோகப்படுத்தக் கூடாது"  என்பது அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். அமெரிக்காவின் மிகவும் அமைதியான இடம் என்று இந்தக் கிராமம் அழைக்கப்படுகிறது. 20 ஆயிரம் சதுர கிமீ பரப்பளவிலிருக்கும் இந்தப் பகுதியில் காந்தக் கதிர் அலைகளை வெளியிடும் எந்தவொரு பொருட்களையுமே கொண்டு வர முடியாது. இந்தப் பகுதியில் எந்தவித காந்த அலைகளையும் உணர முடியாது. உலகின் ஒவ்வொரு நொடியும் தொழில்நுட்பங்களினால் கட்டமைக்கப்படும் இன்றைய நிலையில் இப்படி ஓர் இடம் இருக்க மிக முக்கியக் காரணம் ஒரு டெலஸ்கோப்.

1958ல் இந்தப் பகுதியில் ஒரு டெலஸ்கோப் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று அமெரிக்காவின் மிகப் பெரிய டெலஸ்கோப் இங்குதான் நிறுவப்பட்டுள்ளது. 2 ஏக்கர் பரப்பளவில், கிட்டத்தட்ட 77 லட்சம் கிலோ எடையில், 485 அடி உயரம் என இருக்கும் இந்த பிரம்மாண்ட டெலஸ்கோப் வானியியல் ஆராய்ச்சிகளுக்குப் பெரியளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விண்வெளியில் நடக்கும் நிகழ்வுகள், நட்சத்திரங்களின் மரணம், புது நட்சத்திரங்களின் பிறப்பு, பால்வெளி மண்டலங்களின் செயல்பாடுகள் எனப் பல விஷயங்களை இந்த டெலஸ்கோப்பின் உதவி கொண்டு மேற்கொண்டு வருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உலகின் மிக முக்கியமான டெலஸ்கோப்பாக இது பார்க்கப்படுகிறது. காரணம் எந்தவித அலைகளின் குறுக்கீடும் இல்லாமல், விண்வெளியின் குரலை மிகத் துல்லியமாக இதில் கேட்க முடியும். 

இங்கிருக்கும் மக்கள் 1980களில் வாழ்வது போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். டெக்னாலஜி தரும் எந்தவித இடர்ப்பாடுகளும் இல்லாமல் , மிகவும் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அறிவியல் ரீதியாக மட்டுமல்லாமல், மருத்துவ ரீதியாகவும் இந்த இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. " எலெக்ட்ரோ மேக்னெடிக் ஹைபர் சென்ஸிட்டிவிட்டி " (Electro Magnetic Hyper Sensitivity ) எனும் காந்த அலைகளுக்கு அலெர்ஜிக் கொண்ட பலரும் இந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அது அவர்களின் உடலுக்கும், மனதிற்கும் பெரிய பலத்தைக் கொடுக்கிறது. 

ஒரு பள்ளிக்கூடம், போஸ்ட் ஆபீஸ், சில லேண்ட் லைன் போன் பூத்கள், சலூன் கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர், நூலகம், சர்ச் ஆகியவை இந்த ஊரிலிருக்கின்றன. டெலஸ்கோப்பின் ஒரு மைல் பரப்பளவிற்குள் டீசல் வண்டிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படுகிறது. பெட்ரோல் வண்டிகளின் ஸ்பார்க் ப்ளக் சில இடையூறு கொடுக்கலாம் என்பதால் அதை தவிர்க்கிறார்கள். 

2021ஆம் ஆண்டு வரை இந்த டெலஸ்கோப் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சமயங்களில் அது இன்னும் நீட்டிக்கப்படலாம். ஆனால், இன்று அந்த ஊரிலிருக்கும் ஜென் Z கூட்டம் டெக்னாலஜி இல்லாமல் இருக்க சிரமப்படுகிறது. அவ்வப்போது, சட்ட விதிகளை மீறவும் செய்கின்றனர். ஆனால், அவர்களின் ஒத்துழைப்பை அரசாங்கம் தொடர்ந்து கோரி வருகிறது. இதெல்லாத்திற்கும் மேலாக... இந்த ஆராய்ச்சியின் மூலம் ஏலியன்களின் நடமாட்டத்தை மிக உன்னிப்பாகக் கண்காணிக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு