Published:Updated:

உங்கள் இன்டர்நெட் டேட்டா தேவையும் அதற்கேற்ற சரியான ப்ளான்களும்..! #SaveMoneyOnData

உங்கள் இன்டர்நெட் டேட்டா தேவையும் அதற்கேற்ற சரியான ப்ளான்களும்..! #SaveMoneyOnData
உங்கள் இன்டர்நெட் டேட்டா தேவையும் அதற்கேற்ற சரியான ப்ளான்களும்..! #SaveMoneyOnData

சாப்பாட்டை கூட டயட் என்ற பெயரில் குறைத்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். ஆனால், டேட்டா விஷயத்தில் “பத்தல...பத்தல” என்பதே அனைவரது குரலாக இருக்கிறது. மொபைலில் இருந்து ஸ்மார்ட் டி.வி. வரை அனைத்துக்குமே இணையம் தேவைப்படுகிறது. எந்த உணவகத்தில் /தியேட்டரில் இலவச வைஃபை கிடைக்கிறதோ அங்கே “ரிப்பீட்டு” அடிக்கிறோம். டேட்டா விஷயத்தில் தன்னிறைவு அடைவது எப்படி? எந்த பிளான் நமக்கு போதுமானதாக இருக்கும்? குறைந்தச் செலவில் அதை கைப்பற்றுவது எப்படி? ஓர் அலசல்.

உங்கள் தேவை என்ன?
நமதுத் தேவையை பொறுத்தே என்ன வகையான இணையச் சேவை தேவை என்பதை தீர்மானிக்க முடியும். தனியாக தங்கி இருப்பவர்கள் அல்லது வீட்டில் ஒருவர் மட்டுமே இணையம் பயன்படுத்துபவர் என்றால் மொபைல் டேட்டாவே போதும். ஒருவருக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும்போது பிராட்பேண்டு கனெக்‌ஷன் கைகொடுக்கும்.

யாருக்கெல்லாம் மொபைல் டேட்டா போதும்!
1) பெரும்பாலான நேரம் மொபைல் மூலமே இணையம் பாவிப்பவர்கள் மொபைல் டேட்டாவிலே காலம் தள்ளலாம்.
2) தனியாக இருந்தாலோ அல்லது வீட்டில் ஒருவர் மட்டுமே இணையம் பாவிப்பவர் என்றாலும் மொபைல் டேட்டா போதும்.
3) அடிக்கடி வீடு / அறை மாற்றுபவர்கள், அலுவலக விஷயமாக அடிக்கடி டூர் போகிறவர்களுக்கு மொபைல் டேட்டா தான் சரியான நண்பன்.

யாருக்கெல்லாம் பிராட்பேண்டு தேவை?
1) ஒரே வீட்டில் இருக்கும் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் இணையம் பயன்படுத்தினால் பிராட்பேண்டுக்கு போய்விடலாம்.
2) டொரன்ட் மூலம் பெரிய சைஸ் ஃபைல்கள் டவுன்லோடு செய்பவர் என்றால் மொபைல் டேட்டா போதாது.
3) அலுவலக வேலைகளை வீட்டில் இருந்தே செய்பவர் என்றால் (Work from home) பிராட்பேண்டுதான் தீர்வு.

மொபைல் டேட்டா:
மொபைல் டேட்டா என்றதும் வேகம் குறைவாக இருக்கும் என நினைக்க வேண்டாம். 4ஜி யுகம் என்பதால் தேவையான ஸ்பீடு கிடைக்கிறது. நாம் முடிவு செய்ய வேண்டியது ஒரு மாதத்துக்கு எத்தனை ஜிபி டேட்டா நமக்குத் தேவை என்பதுதான். இதை நமது மொபைல் மூலமாகவே கணக்கெடுக்க முடியும்.

செட்டிங்க்ஸ் > மொபைல் டேட்டா - சென்று முதலில் இருக்கும் data usage-ஐ ரீசெட் செய்துவிடுங்கள். பின், ஒரு 10 நாள்களுக்கு எவ்வளவு டேட்டா பயன்படுத்துகிறோம் என்பதை கவனியுங்கள். அதன் அடிப்படையில் பிளான்களை தேர்வு செய்யுங்கள்.
ஏர்டெல் முதல் அனைத்து மொபைல் நெட்வொர்க்குகளும் மாதத்துக்கு தரும் சராசரி டேட்டா அளவு (மொபைல் கம்பெனிகளை பொறுத்தவரை மாதம் என்பது 28 நாள்கள்தான், அதையும் 27 ஆக மாற்றி வருகிறார்கள் சில நிறுவனங்கள் ) : 

1ஜிபி (3ஜி) - 170 -250
2ஜிபி (3ஜி) - 300 -350

ஆனால், ஜியோ வந்தபின் சில ஸ்பெஷல் ஆஃபர்களும் வந்திருக்கின்றன. இவை அனைத்து வாடிக்கையாளர்களுக்கு இல்லையென்றாலும் கஸ்டமர் கேரில் கேட்டால் கிடைக்கலாம். இந்த ஆஃபர்படி, ஒரு நாளைக்கு 1 ஜிபி என மாதத்துக்கு 30ஜிபி கிடைக்கும்.
ஏர்டெல் தொடங்கி பி.எஸ்.என்.எல் வரை அனைத்து நெட்வொர்க்குகளுமே இந்த ஆஃபரை தருகின்றன. இதன்படி சராசரி மாதச் செலவு 300 முதல் 350 ரூபாய் வரை ஆகும்.

அடிக்கடி வெளியூர் செல்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு ஜிபி கூட போதாமல் போகலாம். அவர்கள் கூடுதலாக 100-150ரூ செலவு செய்தால் 2 ஜிபி கிடைக்கும்.

பிராட்பேண்டு:
ஹாட்ஸ்பாட் மூலம் மொபைல் டேட்டாவை கணினிக்கும் பயன்படுத்தலாம். ஆனால், சில நேரங்களில் சிக்னல் சரியாக கிடைக்காதது, மொபைல் சார்ஜ் குறைவது என பல சிக்கல்கள் உண்டு. உங்கள் மாத டேட்டா தேவை 50 ஜிபிக்கு அதிகம் என்றாலோ, அல்லது கட்டற்ற வேகம் முக்கியம் என நினைத்தாலோ பிராட்பேண்டுக்கு மாறுவது அவசியம். 700ரூபாயில் இருந்து நல்ல பிராட்பேண்டு பிளான்கள் சந்தையில் கிடைக்கின்றன. 

பிராட்பேண்டு வாங்கும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். பிராட்பேண்டு சேவை என்பது இன்னொரு சிம் கார்டு போன்றது கிடையாது. வாங்கியபின், வேண்டாமென்றால் மாற்றுவதும் எளிது கிடையாது. ஓர் ஆண்டுக்கு வாங்கினால், விலை குறைவு என்பார்கள். ஆனால், வாங்கிய இரண்டாவது மாதத்தில் இருந்தே பிரச்னை கொடுக்கும். கஸ்டமர் கேர்களும் கண்டுகொள்ளாது. ஏற்கெனவே ஓர் ஆண்டுக்கு பணம் செலுத்தியிருப்பதால, விலகவும் முடியாது. எனவே, மாதாந்திர பிளான்களே பெஸ்ட். சேவை சரியில்லையெனில் மாற்றிக்கொள்ள இது ஏதுவாக இருக்கும்.

ஒரு வீட்டில் இருக்கும் அனைவரது டேட்டா தேவையும் கணக்கில் கொண்டு, அதில் எவ்வளவு டேட்டா மொபைலுக்குத் தேவை என்றும், எவ்வளவு பிராட்பேண்டு மூலம் தேவை என்பதையும் கவனியுங்கள். அதற்கேற்ப பிளான்களை வாங்குங்கள். ஒருசில நெட்வொர்க்கைத் தவிர மற்றவர்கள் மீதமாகும் டேட்டாவை அடுத்த மாதத்துக்கு எடுத்துச் செல்வதில்லை.