Published:Updated:

டார்க் தீம்... வீடியோ ப்ரிவ்யூ... 360 டிகிரி... யூடியூபின் 14 பக்கா ட்ரிக்ஸ்!

டார்க் தீம்... வீடியோ ப்ரிவ்யூ... 360 டிகிரி... யூடியூபின் 14 பக்கா ட்ரிக்ஸ்!
டார்க் தீம்... வீடியோ ப்ரிவ்யூ... 360 டிகிரி... யூடியூபின் 14 பக்கா ட்ரிக்ஸ்!

டார்க் தீம்... வீடியோ ப்ரிவ்யூ... 360 டிகிரி... யூடியூபின் 14 பக்கா ட்ரிக்ஸ்!

மேசான், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என இன்று எத்தனை ஸ்ட்ரீமிங் தளங்கள் இருந்தாலும், இன்னுமே கூட ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கின் மகாராஜா யூடியூப்தான். உலகின் அனைத்து மூலைகளிலும் இருந்து வந்துகுவியும் வீடியோக்கள்தான் இதன் தளபதி. கோடிகள் கொட்டி எடுக்கப்படும் ஆல்பம் பாடலோ அல்லது நெடுஞ்சாலை ஒன்றில் நடக்கும் சிறுவிபத்தோ... எதை வேண்டுமானாலும் பார்க்கலாம்; கேட்கலாம்; ரசிக்கலாம். இப்படிப்பட்ட யூடியூப்பை மேலும் சுவாரஸ்யமாக்கும், பயனுள்ளதாக்கும் சின்னச் சின்ன ட்ரிக்ஸ் இதோ...

1. பத்து செகண்ட் ஃபார்வர்ட்:

விளம்பர இடைவேளையின்போது சட்டென சானலை மாற்றுவதுபோல, ஸ்ட்ரீமிங் தளங்களில் நமக்கு இருக்கும் வழி வீடியோவை Forward செய்வது. இதற்காக எளிமையான ஒரு ஆப்ஷனைக் கொடுத்திருக்கிறது யூடியூப். ஆனால், இந்த வசதியை டெஸ்க்டாப்பில் பயன்படுத்த முடியாது. யூ-ட்யூப் APP-ற்கு மட்டும்தான். 

வீடியோ 'ப்ளே' ஆகும்போது திரையின் வலது ஓரத்தில் டபுள் டேப் செய்தால்போதும். உடனே வீடியோ 10 நொடிகளுக்கு 'forward' ஆகிவிடும். வீடியோவின் இடதுபுறத்தில் டபுள் டேப் செய்தால் 10 நொடிகள் 'Rewind' ஆகிவிடும். சரி..டெஸ்க்டாப்பிற்கு என்ன செய்வது? விடை கடைசி பாயிண்ட்டில்!

2. துல்லியமான 'Search' வசதி

யூடியூபும் ஒரு கூகுள்தான். நமக்குத் தேவையானதை நாம்தான் சரியாக தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். எனவே ஒரு குறிப்பிட்ட வீடியோ பற்றி தேடும்போது அதுபற்றிய அதிக தகவல்களை 'Search' பாரில் குறிப்பிட வேண்டும். HD வீடியோ, 360 டிகிரி வீடியோ போன்ற சிறப்பம்சங்களை எல்லாம் தெளிவாக குறிப்பிட்டால் சரியான வீடியோக்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

இதுதவிர 'Filter' ஆப்ஷனும் யூடியூபில் இருக்கிறது. ஒரு புதிய படத்தின் ட்ரெய்லர் வந்திருக்கிறது என்றால், அந்த ட்ரெய்லரின் பெயரிலேயே இன்னும் நிறைய வீடியோக்கள் உலாவரும். எனவே வீடியோ வெளிவந்து எத்தனை நாள்கள் ஆகிறது, வீடியோவின் கால அளவு போன்றவற்றை எல்லாம் குறிப்பிட்டு தேடுவதன் மூலம் நமக்கான வீடியோவை எளிதில் கண்டறியலாம்.

3. புதிய டெஸ்க்டாப் அனுபவம்

தற்போது வரை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் யூடியூப் போரடிக்கிறதா? முற்றிலும் புதிய யூ-ட்யூப் உங்களுக்காக காத்திருக்கிறது. https://www.youtube.com/new - இந்த லிங்க் சென்று பாருங்கள். புதிய இன்டர்ஃபேஸ் உடன் இருக்கும் யூ-ட்யூபை நீங்கள் காணலாம். தற்போது இருப்பதை விடவும் நிறைய வசதிகள் இதில் இருக்கின்றன.

4. டார்க் தீம்

மொபைல் போலவே யூடியூபிலும் 'Dark mode' இருக்கிறது. ஆனால் இதற்காக புதிய யூடியூபிகுத்தான் நீங்கள் செல்ல வேண்டும். மேலே இருக்கும் லிங்க் சென்று, மெனு ஆப்ஷனில் 'Dark' மோடை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.

5. வீடியோ ப்ரிவ்யூ பார்த்திருக்கீங்களா?

ஒரு வீடியோவை க்ளிக் செய்து பார்க்கும் முன்னரே அதன் முன்னோட்டத்தை நம்மால் காண முடியும். யூடியூபின் ஹோம் பேஜில் இருக்கும் வீடியோவிலேயே இதனை நீங்கள் சோதனை செய்யலாம். எந்த வீடியோவின் மீது, உங்கள் கர்சரை வைத்தாலும் அந்த வீடியோவின் ப்ரிவ்யூ உங்களுக்கு காட்டப்படும். ஆனால், இது கொஞ்சம் சுமாரான வசதிதான். இன்னும் இதனை மேம்படுத்த வேண்டும்.

6. 4K முதல் 144 வரை...

பாகுபலி 2 ட்ரெய்லர் பாத்திருப்பீங்க... ஆனால் அதனை எந்த ரெசொல்யூஷனில் பார்த்தீர்கள் என நினைவிருக்கிறதா? உங்களது இணையவேகம் மட்டும் சப்போர்ட் செய்தால், டெஸ்க்டாப்பில் 4K ரெசொல்யூஷனில் பாருங்கள். அதிதுல்லியமான ட்ரெய்லர் அனுபவம் கிடைக்கும். உங்கள் இணையவேகத்துக்கு ஏற்ப 144p, 240p தொடங்கி 4K வரைக்கும் அத்தனை குவாலிட்டி வீடியோக்களையும் சப்போர்ட் செய்கிறது யூடியூப்.

7. 360 டிகிரி வீடியோ:

HD வீடியோ, 4K வீடியோ ஆகியவற்றிற்கெல்லாம் அடுத்து தற்போதைய ட்ரெண்ட் 360 டிகிரி வீடியோக்கள்தான். யூடியூப் 'Search' பாரில் 360 டிகிரி வீடியோக்கள் என தேடினாலே நிறைய வீடியோக்கள் கிடைக்கும். https://www.youtube.com/channel/UCzuqhhs6NWbgTzMuM09WKDQ என்ற சானலில் இன்னும் நிறைய வீடியோக்களை காணலாம். தற்போது கொஞ்சம் சுமாராக இருந்தாலும்கூட, வருங்காலங்களில் இவற்றின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

8. அப்புறம் பாத்துக்கலாம்!

ஏதேனும் சில வீடியோக்களை 'அப்புறம் பாத்துக்கலாம்' என குறித்து வைத்துக்கொள்ள உதவும் வசதிதான் இந்த 'Watch It Later'. எந்த வீடியோவை இப்படி மார்க் செய்துவைக்க வேண்டுமோ, அந்த வீடியோவின் 'ஐகான்' மீது இருக்கும் 'Watch It Later' ஆப்ஷனை க்ளிக் செய்தால்போதும். பின்னர் இப்படி குறித்துவைத்த வீடியோக்களை 'Watch It Later' பிரிவில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.

9. நவீன கட்டண தியேட்டர்!

சில வருடங்களுக்கு முன்னர் இருந்ததுபோல, திரைப்படத்தைப் பார்க்க திரையரங்கத்திற்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமே தற்போது இல்லை. பெரிய பட்ஜெட் படங்களை வெளியிடுவதற்கென்றே முன்னணி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் போட்டிபோட்டுக்கொண்டு காத்திருக்கின்றன. இதுதவிர யூ-ட்யூபிலும் புதுப்படங்களை பணம் செலுத்தி பார்க்க முடியும். படத்தை எப்போது வேண்டுமானாலும் பார்க்க அல்லது வாடகைக்கு மட்டும் எடுத்துப் பார்க்க என இரண்டு வசதிகளும் இருக்கின்றன. 

10. சப்டைட்டில் எங்க கிடைக்கும்?

படங்களுக்கே சப்டைட்டில் தேடுவதற்காக பல இணையதளங்களுக்குச் சென்றுவர வேண்டும். ஆனால் யூடியூபில் அந்தப் பிரச்னை எல்லாம் இல்லை. சின்னச் சின்ன வீடியோக்களுக்கு கூட பல மொழிகளில் சப்டைட்டில்கள் கிடைக்கின்றன. மேலும், சப்டைட்டில்களை நமக்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டும் பார்க்கமுடியும்.

11. குழந்தைகளுக்கான தனி யூ-ட்யூப்:

குழந்தைகளுக்கென தனி சானல் போல, குழந்தைகளுக்காக ஒரு யூடியூபே தனியாக இயங்கிவருகிறது. கடந்த வருடம் நவம்பர் மாதம்தான் கூகுள் இந்த வசதியைக் கொண்டுவந்தது. இந்த Youtube Kids வசதியை App மூலம் பயன்படுத்தலாம். தவறான விஷயங்கள் எதுவும் இன்றி, குழந்தைகளுக்கு என்றே தனியாக இயங்கிவருவதால், குழந்தைகளுக்கு தைரியமாக இந்த ஆப்-ஐ பரிந்துரைக்கலாம்.

12. பக்கா ஷேரிங்

ஒரு வீடியோவை ஈசியாக ஷேர் செய்யலாம். ஆனால் எந்த நொடியில் இருந்து, அந்த வீடியோ துவங்கவேண்டும் என்பதை நம்மால் செட் செய்ய முடியுமா? முடியும் என்கிறது யூடியூப். வீடியோ எந்த இடத்தில் இருந்து துவங்க வேண்டுமோ, அந்த இடத்தில் வீடியோவை நிறுத்திவிட்டு 'Copy video URL at current time' என்பதை க்ளிக் செய்தால் போதும். நேரத்தோடு சேர்த்து லிங்க் ரெடியாகிவிடும். 
இதுதவிர இன்னொரு வழியும் இருக்கிறது. அதாவது ஷேர் ஆப்ஷனை க்ளிக் செய்துவிட்டு 'Start at' என்ற இடத்தில் நேரத்தைக் குறிப்பிட்டால் போதும். ஷேர் செய்வதற்கான URL தயாராகிவிடும்.

13. வீடியோவின் வேகத்தை மாற்றலாம்!

மிகவும் மெதுவான ஒரு பாடலை, வேகமாக ப்ளே செய்தால் எப்படி இருக்கும்? யோசிக்கவே வேண்டாம். யூடியூப் சென்று, வீடியோவின் Speed-ஐ மாற்றிக் கேட்டுப்பாருங்கள். சுவாரஸ்யம் நிச்சயம்!

14. யூ-ட்யூப் கீ-போர்ட் ஷார்ட்கட்ஸ்

எப்படி பிரவுசர்களுக்கு ஷார்ட்கட் கீ-கள் இருக்கிறதோ, அதைப் போலவே யூடியூபிற்கும் சில ஷார்ட்கட் கீ-கள் இருக்கின்றன. 

ஸ்பேஸ்பார் - வீடியோக்களை நிறுத்த அல்லது ப்ளே செய்ய

J - வீடியோவை 10 நொடிகள் ரீவைண்ட் செய்ய

L - வீடியோவை 10 நொடிகள் Forward செய்ய

M - வீடியோ வால்யூமை ம்யூட் செய்ய

இவற்றைப் பயன்படுத்துவதால், டெஸ்க்டாப்பில் யூடியூபை இன்னும் எளிதாகக் கையாளலாம்.

அடுத்த கட்டுரைக்கு