Published:Updated:

மொட்டைக் கடுதாசியின் டிஜிட்டல் வெர்ஷன் சாரா ஆப்... என்ன ஸ்பெஷல்? #Sarahah

மொட்டைக் கடுதாசியின் டிஜிட்டல் வெர்ஷன் சாரா ஆப்... என்ன ஸ்பெஷல்? #Sarahah
மொட்டைக் கடுதாசியின் டிஜிட்டல் வெர்ஷன் சாரா ஆப்... என்ன ஸ்பெஷல்? #Sarahah

ப்ஸ்மாஷ், ஸ்மூலே வரிசையில் அடுத்த வைரல் பேபியாக வலம் வந்துகொண்டிருக்கிறது சாரா. நீங்கள் இந்த ஆப் பற்றி கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்; ஆனால் நிச்சயம் கடந்த இரண்டு நாள்களில் உங்களின் டைம்லைனில் ஏதாவது ஒரு 'சாரா' ஸ்க்ரீன்ஷாட்டாவது கண்ணில் பட்டிருக்கும். நண்பர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள உதவும் டிஜிட்டல் உளவாளிதான் இந்த சாரா. அது எப்படி என்பதில்தான் இதன் சுவாரஸ்யமே அடங்கியிருக்கிறது.

எப்படி இயங்குகிறது?

உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்; மற்றவர்களைப் பற்றியும் நீங்கள் யார் என்பதை மறைத்து உங்கள் கருத்துக்களை சொல்ல வேண்டும். இந்த இரண்டு விஷயங்களின் சங்கமம்தான் சாரா. நம்முடைய அடையாளங்களை வெளிப்படுத்தாமலே, நாம் விரும்பும் நபரிடம் நம் கருத்துக்களை முழுமையாக தெரிவிக்க முடியும் என்ற ஒரு விஷயம்தான் சாராவின் சுவாரஸ்ய அம்சம். இதனால்தான் திடீர் திடீரென டவுன்லோட் செய்து, அதை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துகொண்டிருக்கிறார்கள் ஆன்லைன் வாசிகள்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ் என இரண்டிலும் சாரா இயங்கும். மேலும் டெஸ்க்டாப் வெர்ஷனும் இருக்கிறது. https://www.sarahah.com இந்த தளத்திற்கு சென்று மின்னஞ்சல், பாஸ்வேர்டு, யூசர் நேம் போன்ற விவரங்களைக் கொடுத்து பதிவு செய்தால் போதும். சாரா அக்கவுன்ட் ரெடி. உடனே அதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து, கருத்துக்களை அறியலாம். அதேபோல மற்றவர்களின் சாரா அக்கவுன்ட்டுக்கும் நம் கருத்துக்களை அனுப்பலாம். மிக மிக எளிமையாக இருக்கிறது இவற்றின் செயல்பாடுகள். ப்ளே ஸ்டோரில் 50 லட்சத்தைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது இன்ஸ்டால் செய்தவர்களின் எண்ணிக்கை.

எஸ்டீடி என்ன?

சாரா என்றால் அரபு மொழியில் நேர்மை என அர்த்தமாம். தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், நிர்வாகத்திடம் தங்கள் குறைகளை தயக்கமின்றி பகிர்வதற்காகவும், ஊழியர்களின் பிரைவசியை பாதுகாக்கவும் டாஃபிக் என்ற சவூதி அரேபியர் உருவாக்கியதுதான் இந்த சாரா. பின்னர் இதுவே ஆப்பாக வெளியாக மத்திய கிழக்கு நாடுகளில் சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் இந்த ஆப் மெதுவாக அமெரிக்கா மற்றும் கனடாவிலும் பரவியது. அந்நாட்டு இளைஞர்கள் சாரா இணையமுகவரியை ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்னாப்சாட் என செல்லுமிடமெல்லாம் கொண்டுசெல்ல சாரா கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமானது. தற்போது இந்தியா வரைக்கும் வந்துவிட்டது இந்த ஆப். இதுதான் இதன் வரலாறு.

சாராவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

"திபுதிபுவென வைரலாகும் இந்த ஆப்பை பாராட்டு மழையால் நனைத்துவிட்டார்கள் நெட்டிசன்ஸ்" என்று எழுததான் ஆசை. ஆனால் ப்ளே ஸ்டோரில் மூன்று ஸ்டார்களோடு திணறிக்கொண்டிருக்கிறது சாரா. காரணம் இதன் இன்னொருபக்கம்தான். என்றோ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது, சொல்லாத காதலை சொல்லி விடுவது, மற்றவர்களின் மீது இருக்கும் அக்கறையில் அறிவுரைகள் வழங்குவது என இதன் ஒரு பக்கம் எமோஷனாலான ஒன்றுதான். ஆனால் இன்னொருபக்கம் அப்படியே இணைய உலகை பிரதிபலிக்கிறது இந்த ஆப். அதாவது "வகைதொகையில்லாமல் கிண்டல் செய்வது, ஆபாச மற்றும் வசவு வார்த்தைகளை அள்ளி வீசுவது, உருவகேலி செய்வது, மிரட்டுவது என அத்தனையும் வெசம்...வெசம்" என ஆங்க்ரி எமோஜிக்களை கொட்டுகின்றனர் சாரா யூசர்ஸ். இதற்காக ரிப்போர்ட் செய்யும் வசதியும் இதில் இருக்கிறது. மேலும் அடுத்தடுத்த அப்டேட்களில் மெசேஜ் அனுப்புபவர்களுக்கு ரிப்ளை செய்யும் வசதி, மோசமான வார்த்தைகளை ஃபில்டர் செய்யும் வசதி போன்றவற்றையும் இணைக்கவிருப்பதாகக் கூறுகிறது சாரா டீம். 

சாராவைப் போலவே யிக்யாக் என்னும் சேவை இதேபோன்ற செயல்பாடுகளுடன் சில வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு இதேபோல நிறைய எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் புகார்கள் எழ... இறுதியில் அது முற்றிலுமாக முடங்கிப்போனது. சில மாதங்களுக்கு முன்னர் Sayat.me என்னும் தளமும் இதேபோல வைரல் ஆனது. ட்ரெண்ட்டிற்கு ஏற்ப, அவ்வப்போது ஏதாவதொரு விஷயத்தை வைரல் ஆக்குவது என நெட்டிசன்களுக்கு எல்லா நாளும் கார்த்திகைதான். அப்படி திடீரென வெளிச்சத்திற்கு வந்திருக்கும் இந்த சாரா, ஃபேஸ்புக், ட்விட்டர் போல நிலையான புகழை தக்கவைத்துக்கொள்வது என்பதெல்லாம் மிக சிரமம்.

ப்ளஸ் மைனஸ் என இரண்டும் கலந்திருப்பதால் இதனை எப்படிக் கையாளப்போகிறோம் என்பது நம் கைகளில்தான் இருக்கிறது.