Published:Updated:

பைரஸியை இவர்களால் மட்டும்தான் ஒழிக்க முடியும்... யாரெனத் தெரிகிறதா? #AvoidPiracy

பைரஸியை இவர்களால் மட்டும்தான் ஒழிக்க முடியும்... யாரெனத் தெரிகிறதா? #AvoidPiracy
பைரஸியை இவர்களால் மட்டும்தான் ஒழிக்க முடியும்... யாரெனத் தெரிகிறதா? #AvoidPiracy

கி.பி. ஆறாம் நூற்றாண்டு. ஓலைச்சுவடியும், கையெழுத்து பிரதிகளும் மட்டுமே இருந்த காலகட்டம். அப்போது, கிரேக்க அரசவை ஒன்றில் நடந்த சம்பவம் இது. புலவர் ஒருவர் எழுதிய தொகுப்பு ஒன்றை வேறொருவர் காப்பியடித்துவிட்டார். ஆனால், காப்பியடித்தவரோ “நான் என் கையால் எழுதிய பிரதி அது. அதனால், எனக்குதான் சொந்தம்” என்றார். வழக்கு அரசரிடம் சென்றது. “எத்தனை கன்றுகள் பிறந்தாலும் அது தாய்ப்பசுக்குதான் சொந்தம். அதுபோலவே, எத்தனை பிரதிகள் வந்தாலும் முதலில் எழுதியவருக்குத்தான் அவை சொந்தம்” என்றார். 

காலம் 15 நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டது. இன்னமும் இந்தக் களவுப் பிரச்னை தீர்ந்தபாடில்லை. ஓலைச்சுவடி ப்ளூ ரே டிவிடி ஆகியிருக்கிறது. கையெழுத்து பிரதி பி.டி.எஃப் ஆகியிருக்கிறது. ஆனால், களவு மட்டும் அப்படியேதான் இருக்கிறது.

எவை பைரஸி?

ஒருவர் செய்த வேலையை, படைப்பை அவர் அனுமதி இல்லாமல் நகல் எடுப்பது என பைரஸிக்கு அர்த்தம் சொல்கிறது அகராதி. புத்தகமோ, ஓவியமோ, சினிமாவோ, அதை இன்னொரு வடிவத்துக்கோ அல்லது அதே வடிவிலோ உரிமையாளரின் அனுமதி இல்லாமல் வேறு பிரதி எடுப்பது என சொல்லலாம். இந்த ஆங்கில வார்த்தையின் மூலத்தை கவனித்தால் பைரேட்ஸ் என்ற கடல்கொள்ளையர்களை குறிப்பிடும் வார்த்தைக்கு இட்டுச்செல்லும். கடல் கொள்ளையர்கள் செய்யும் களவைதான் முதலில் பைரஸி எனச் சொன்னார்கள்.

பைரஸி இரண்டு வழிகளில் பரவுகிறது. ஒன்று, இது பைரஸி எனத் தெரிந்தே வாங்குவது. திரைப்பட டிவிடிக்கள், வீடியோகேம்ஸ் சி.டிக்கள் போன்றவை இதில் அடங்கும். மற்றொன்று, பைரஸி எனத் தெரியாமலே அதை வாங்கி பயன்படுத்துவது. கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆர்.எஸ். அகர்வால் எழுதிய புத்தகங்கள் பிரபலம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் அவரின் புத்தகங்களின் விலை 600-ஐ தாண்டும். அதே புத்தகங்கள் கொஞ்சம் மலிவான காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு 200ரூபாய்க்கே கிடைக்கின்றன. இவற்றில் முதல் சில பக்கங்கள் மட்டும் கலரில் அச்சடிக்கப்பட்டிருக்கும். இவை களவுப் பதிப்புகள். இதுபோல மென்பொருள்கள், பத்திரிகைகளின் பி.டி.எஃப், பாடல்கள் எனப் பல விஷயங்களில் அவை பைரஸி எனத் தெரியாமலே நாம் பயன்படுத்தி வருகிறோம்.

சினிமா பைரஸிக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. ஒரு சில காரணங்களை நியாயப்படுத்த முடிந்தாலும், பொதுவாக இது ஒரு தவறு என்பதை மக்கள் உணர வேண்டும். ஏன் பைரஸிக்கு ஆதரவு பெருகுகிறது என சினிமா ஆர்வலர் முரளிகண்ணனிடம் கேட்டோம்.

“முக்கியமான காரணம் விலைதாங்க. ஒரு படம் பார்க்க ஒரு குடும்பத்துக்கு 1000ரூ ஆகுதுன்னு சொல்றாங்க. எப்பவாது படம் பாக்குற கலாசாரம் இருந்தா அது பரவாயில்லை. ஆனா, ரிலீஸ் ஆகுற பாதி படங்கள் பெரிய ஹீரோக்கள் படங்கள். அத பாக்காம அலுவலகத்திலோ, கல்லூரியிலோ காலம் தள்ள முடியாது. எங்க பாத்தாலும் சினிமாதான். வர்ற மீம்ஸ் புரிஞ்சிக்கவாது அந்தப் படங்களைப் பாக்க வேண்டியிருக்கு. அதனாலதான் திருட்டு சிடி வாங்குறாங்க. 

அடுத்து, அவைலபிளிட்டி. பல நாடுகள்ல 90% தமிழ்ப்படங்கள் வெளியாகுறது இல்லை. அதிகாரபூர்வ சி.டிக்கள் வரவும் சில வாரங்கள் ஆகும். அவங்க அந்தப் படத்தை டவுன்லோடு செஞ்சுதான் பாக்க வேண்டியிருக்கு. நம்ம ஊரிலும் 2 வாரம் தாமதிச்சா அந்தப் படம் தியேட்டரை விட்டே போயிடுது. அதைப் பாக்கணும்ன்னா வேற வழி இருக்கா சொல்லுங்க. தமிழக சிற்றூர்ல இருக்கிற திரையரங்குகளின் தரம் கூட முக்கியமான காரணம்” என வரிசையாக காரணங்களை அடுக்குகிறார்.

“எதிக்ஸ் பத்தி பேசியெல்லாம் பைரஸியை தடுக்க முடியாது. ஏனெனில், தமிழ்ப்படங்களில் வெளியாகும் பாதி படங்கள் வேற்றும்மொழிப்படங்களைத் தழுவியே எடுக்கப்படுகின்றன. அவர்கள் செய்தால் சரி, நாங்கள் செய்தால் தவறா” என்ற வாதத்தை நெட்டிசன்கள் எப்போதுமே முன் வைப்பதுண்டு. இது சரியான கோணமாக இருக்கவே முடியாது. ஒரு பொருளின் தயாரிப்பில் ஒருவருக்கு மட்டுமே தொடர்பு இருப்பதில்லை. அந்தச் சேவையின் விநியோகச் சங்கிலியில் பலர் பங்கு பெறுகிறார்கள். பைரஸி என்பது அவர்கள் அனைவரையும் பாதிக்கும் செயலாகும்.

சினிமாவையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். ஒரு சினிமாவை இயக்குவதுதான் இயக்குநரின் வேலை. அதைத் தயாரிப்பது வேறு ஒருவர். அதை விநியோகிப்பது மேலும் பலர். அதை வாங்கும் அரங்கின் உரிமையாளர்கள் வேறு யாரோ. அந்த அரங்கில் கேண்டின் நடத்துபவர் வரை அத்திரைப்படத்தை நம்பியிருக்கிறார்கள். இயக்குநர் காப்பியடிக்கிறார் என்பதற்காக பைரஸியை ஆதரித்தால், எந்தத் தவறுமே செய்யாத இத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் இல்லையா? அதற்கு எந்த நியாயமும் சொல்லிவிட முடியாது. 

திருட்டு சி.டி ஏன் அதிகரிக்கிறது என சமூக வலைதளத்தில் ஒரு சர்வே நடத்தினேன். அதில் நெட்டிசன்ஸ் சொன்ன டாப் 4 காரணங்கள் இவைதாம்.

1) அதிக விலை.

2) தியேட்டருக்குப் போக நேரமில்லை. நினைத்த நேரத்தில் படம் பார்க்க விரும்புகிறோம். அதிகாரப்பூர்வ சி.டி. வந்தால் அதையே வாங்குவோம்

3) எல்லோரும் செய்கிறார்கள். நாங்களும் செய்கிறோம்.

4) எங்க ஊரில் ரிலீஸ் ஆகவில்லை. 

இந்த நான்கையும் சினிமா உலகம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். தொழில்நுட்பம் போகும் வேகத்தில் நாமும் போக வேண்டியிருக்கிறது. ஹோம் தியேட்டர்கள் மலிவாகிவிட்ட காலத்தில், அவர்கள் வீடு தேடி திரைப்படங்களைக் கொண்டு போகாவிட்டால் சிரமம்தான்.

மக்கள் மத்தியில் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. அது, டிஜிட்டல் என்றாலே இலவசம் என்பதுதான். இந்தக் கருத்தை மாற்றுவதற்கு ஒரு பிரம்மப்பிரயத்தனம் தேவையாய் இருக்கிறது. இது பொதுவான கருத்து என்றாலும், இதில் கணிசமான நபர்கள் மாறத் தொடங்கியிருக்கிறார்கள். நல்ல தரமான, எளிமையான சேவையை தந்தால், அதற்காகப் பணம் கொடுக்க நிறைய பேர் சமீபகாலமாக முன் வருவதை கவனிக்க வேண்டும். அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற பலர் இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

பணம் என்பதையெல்லாம் தாண்டி பைரஸி பொருள்கள் ஆபத்தானவை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று பெரும்பாலான வீடுகளில் இருக்கும் பைரஸி பொருள்களில் முக்கியமானது மொபைல் சார்ஜர்கள். பெரும்பாலான மொபைல் விபத்துகள் போலி சார்ஜர்களால்தான் ஏற்படுகின்றன.  டி.வி ரிமோட்டில் தொடங்கி பல மின்னணு பொருள்களிலும் நாம் போலிகளை அனுமதித்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.

சென்னையில் மின்னணு பொருள்கள் அதிகம் விற்கும் ரிட்சி தெருவுக்குள் நுழைந்துப் பார்த்தேன். டி.வி.ரிமோட்டில் தொடங்கி, ம்யூஸீக் ப்ளேயர், மொபைல் சார்ஜர் என எல்லா விலைகளிலும் போலி சாதனங்கள் கிடைக்கின்றன. சி.டி கடைகளில் கேட்டால் “சினிமா, பாட்டு, சாஃப்ட்வேர், கேம்ஸ், எஜுகேஷன்... எது வேணும்ன்னு சொல்லுங்க பாஸ்... 10 நிமிஷத்துல ரெடி ஆயிடும்” என்கிறார்கள்.

பைரஸி தொழில் எந்தத் துறையில் இருந்தாலும் அது ஒழிக்கப்பட வேண்டும். படைப்பாளிகள் முதல் அதன் பயனர்கள் வரை கைகோத்து செயல்படுவதுதான் அதற்கான எளிய வழி. மக்கள் பொறுப்புணர்வுடனும், விழிப்புஉணர்வுடனும் செயல்பட வேண்டும். எவை பைரஸி பொருள்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். 

தொழில்நுட்பம் தான் பைரஸி வளர முக்கியமான ஆயுதம். எனில், அதே தொழில்நுட்பத்தைக் கொண்டு பைரஸியை நாம் ஒழிக்கவும் முடியும்.  சட்டங்கள் போடுவதும் ஒரு வழிதான். ஆனால், மக்களே களவுப்பொருள்களை அடையாளம் கண்டு அதை ஒதுக்குவதுதான் நிரந்தர மற்றும் முக்கியமான தீர்வாக இருக்க முடியும்.

அடுத்த கட்டுரைக்கு