Published:Updated:

`நாம ஏன் ஃப்ரெண்ட்ஸாகக் கூடாது?' கேமரா ஹேக்கிங்கால் சிறுமிக்கு நடந்த `திகில்' சம்பவம்

ஹேக் செய்யப்பட்ட கேமரா
ஹேக் செய்யப்பட்ட கேமரா ( nbc news )

பாதுகாப்பு கருதி இந்த கேமராக்களைப் பொருத்தியிருந்தார் அந்தத் தாய். ஆனால், அதுவே அச்சம் தரும் ஒன்றாக மாறும் என அவர் எதிர்பார்க்கவில்லை.

இன்று டிஜிட்டல் சாதனங்கள் கண்டிருக்கும் வளர்ச்சியால் கண்காணிப்பு சாதனங்களும் அனைவருக்குமானதாக மாறிவிட்டது. பாதுகாப்பு கருதி வீட்டில் சிசிடிவி கேமராக்கள் வைப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆனால் பாதுகாப்புக்காக வைக்கப்படும் அதுவே ஆபத்தாக முடியலாம் என்பதை உணர்த்தியிருக்கிறது அமெரிக்க மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் நடந்திருக்கும் ஒரு சம்பவம்.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா
Pexels
`MP4 வீடியோ ஃபைல் மூலம் வாட்ஸ்அப் ஹேக்கிங்'- தடுக்க உடனடியாக இதைச் செய்யுங்கள்! #Alert

இப்போது வரும் அனைத்துச் சாதனங்களைப் போல சிசிடிவி கேமராக்களிலும் 'ஸ்மார்ட்' வகைகள் உண்டு. அப்படியான மைக், ஸ்பீக்கர், ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்யும் வசதி எனப் பல அம்சங்களுடன் வரும் ஸ்மார்ட் கண்காணிப்பு கேமராக்களை விற்கும் பிரபல அமெரிக்க நிறுவனம் ரிங். இந்த நிறுவனத்தின் கேமரா ஒன்றை தனது 8 வயது மகள் அலைசாவை கண்காணிப்பதற்காக வீட்டில் மாட்டியிருக்கிறார் ஆஷ்ல லெமே என்னும் பெண். சமீபத்தில் நடந்து முடிந்த பிரபல 'Black Friday' சிறப்பு விற்பனையில் இந்த நிறுவனத்தின் இரண்டு கேமராக்களை அவர் வாங்கியிருக்கிறார். ஆனால், வாங்கிய நான்காவது நாளே ஒரு கேமரா ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.

தனியாக படுக்கையறையிலிருந்த 8-வயது அலைசாவின் கேமராவிலிருக்கும் ஸ்பீக்கரில் 'Tiptoe through the Tulips' என்ற பாடல் கேட்கத்தொடங்கியிருக்கிறது. இது திகில் படமான 'Insidious'-ல் இடம்பெற்ற பாடல். பின்பு ஒரு மர்ம நபரின் குரல் அதில் ஒலிக்கத்தொடங்கிறது, பயந்துபோன அலைசா 'யார் அது?' எனக் கேட்கிறாள். 'நான்தான் சாண்டா கிளாஸ், நாம ஏன் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸாகக் கூடாது?' என்று பதறவைக்கிறது அந்தக் குரல்.

தொடர்ந்து சிறுமியுடன் பேசும் அந்தக் குரல் அலைசாவின் அறையில் இருக்கும் டிவி மற்றும் பொருள்களை அடித்துநொறுக்கச் சொல்கிறது. இதனால் பயத்தில் சிறுமி அலறியதைக் கேட்டு அந்த அறைக்கு விரைந்திருக்கிறார் தாய் ஆஷ்லி லெமே. இதில் இனரீதியாகவும் அந்தக் குழந்தைக்குத் தொல்லை கொடுக்கப்பட்டிருக்கிறது. 'நீ கறுப்பு(நீக்ரோ) என்று உன் அம்மாவிடம் போய் சொல்லு' என்று அந்த ஹேக்கர் அந்தச் சிறுமியிடம் பேசுவதும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

இதனால் அதிர்ந்துபோன தாய் ஆஷ்லி லெமே, பதிவான இந்த வீடியோவை ஊடகங்கள் வழியே வெளியிட்டிருக்கிறார். "அந்த வீடியோவைப் பார்த்ததும் என் இதயமே அப்படியே உறைந்துபோய் விட்டது. வீடியோவின் முடிவில் 'அம்மா, அம்மா' என அவள் அலறுவதை இன்னொரு முறை பார்க்கும் மன தைரியம் என்னிடம் இல்லை" என்கிறார் அவர்.

இத்தனைக்கும் இந்த கேமராவை வாங்கும்முன் தீவிரமாக யோசித்திருக்கிறார் ஆஷ்லி. ஆனால், அந்தப் பகுதியில் இருக்கும் பலரும் இந்த பிராண்ட் கேமராவை வாங்கியிருந்தனர். இன்னொரு தாய் ஒருவர் சொல்வதைக் கேட்டே இதை வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறார். இவர் நைட் ஷிஃப்ட்டில் ஒரு லேப்பில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார். வீட்டில் இருக்கும் குழந்தைகளை மொபைல் வழியே கண்காணிக்கவும், அவர்களிடம் பேசவும் இந்த கேமரா உதவிகரமாக இருக்கும் என எண்ணியே இதை வாங்கியிருக்கிறார். இதனால் குழந்தைகள் இன்னும் பாதுகாப்பாக உணர்வார்கள் என்று நினைத்திருக்கிறார் அவர். ஆனால், அதுவே அவர்களுக்குப் பயத்தை உண்டாக்கும் என அவர் எதிர்பார்க்கவில்லை.

ஹேக்கர் | Hacker
ஹேக்கர் | Hacker
Pixabay

``இப்போது அந்தக் குரல் யாருடையது என எனக்குத் தெரியாது, அந்த நபர் நடு இரவில் நம் வீட்டுக்கு வந்துவிடமாட்டார் என்று எப்படி 8-வயது அலைசாவை என்னால் நம்பவைக்கமுடியும்?" எனக் குமுறுகிறார் ஆஷ்லி. இந்த ஹேக்கிங் சம்பவம் உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இணையம் எவ்வளவு ஆபத்தானதாக இருக்கலாம் என்ற விவாதங்களும் சமூக வலைதளங்களில் நிகழ்வதைப் பார்க்க முடிகிறது.

இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் ரிங் நிறுவனம். "எங்கள் சர்வர் பாதுகாப்பில் எந்தப் பாதிப்பும் இல்லை. பாஸ்வேர்டு லீக்கால் இது நடந்திருக்கக் கூடும்" எனத் தெரிவித்திருக்கிறது. அதாவது பாஸ்வேர்டு வேறேதேனும் வழியில் ஹேக்கருக்குக் கிடைத்திருக்கவேண்டும் அல்லது மிகவும் எளிதாகக் கணிக்கக்கூடிய பாஸ்வேர்டாக அது இருந்திருக்கவேண்டும் என்பதையே கூறுகிறது ரிங் நிறுவனம். இதே போன்று முன்பும் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதற்கும் இதே பதிலைத்தான் தந்தது ரிங் நிறுவனம். இதுபோன்ற பிரச்னைகளுக்கு அவர்களிடம் இருக்கும் ஒரே பதில் இது மட்டும்தான். இதனால் இது போன்ற முக்கியமான விஷயங்களில் பாதுகாப்பாக இருக்கவேண்டியது நாம்தான்.

ரிங் கேமரா
ரிங் கேமரா

ஏனென்றால் இதுபோன்ற ஹேக்கிங் எத்தனை ஆபத்தாக இருக்கலாம் என்று யோசித்துப்பாருங்கள். நீங்கள் அலர்ட்டாக இல்லையென்றால் உங்கள் அறையை உங்களுக்கே தெரியாமல் உங்கள் கேமரா வழியே ஒருவர் கண்காணித்துக்கொண்டிருக்க முடியும். அதனால் இதுபோன்ற விஷயங்களில் நம்மால் முடிந்த கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும்.

இது போன்ற ஹேக்கிங் சம்பவங்களில் சிக்காமல் இருக்க சில வழிமுறைகள் இதோ,

`ஆப்’பை ஓபன் செய்தால் ஆன் ஆகும் கேமரா! - தவற்றை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக்
பாஸ்வேர்டு
பாஸ்வேர்டு
  • ஒரே பாஸ்வேர்டை அனைத்து இணையக் கணக்குகளுக்கும் பயன்படுத்தாதீர்கள்.

  • பெயர், பிறந்த தேதி, நண்பர் பெயர் போன்று எளிதாகக் கணிக்கும் வகையில் பாஸ்வேர்ட் வைக்காதீர்கள். எண், எழுத்து, சிறப்பு கேரக்டர்ஸ் என அனைத்தின் கலவையாக யாரும் எளிதில் யோசிக்கமுடியாத பலமான பாஸ்வேர்டை அனைத்து முக்கிய கணக்கிற்கும் செட் செய்யுங்கள். இது போன்ற பாஸ்வேர்டை பெறவும் சேமிக்கவும் 1password, lastpass போன்ற சேவைகளைப் பயன்படுத்தலாம்.

  • Two factor Authentication முறையைப் பயன்படுத்தலாம். அதாவது, பாஸ்வேர்டுடன் மற்றொரு கூடுதல் பாதுகாப்பு வசதியையும் சேருங்கள் (OTP, மொபைல் fingerprint Authentication). இதைத்தான் ரிங் நிறுவனம் வலியுறுத்தியிருந்தது.

  • கண்காணிப்பு சாதனங்களை முடிந்தளவு இணையத்துடன் கனெக்ட் செய்யாதிருங்கள். கண்டிப்பான தேவையிருக்கும்போது மட்டும் அதைச் செய்யுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு