Published:Updated:

`இந்த மாதம், ஃபிட்னஸ் பேண்ட் மாதம்!' படையெடுக்கும் புதிய ஃபிட் பேண்ட்கள்

பிரபல நிறுவனங்கள் சமீபத்தில் வெளியிட்ட, வெளியிடப்போகும் சில பட்ஜெட் வியரபில் கேட்ஜெட்ஸின் தொகுப்பு இது!

பிரீமியம் ஸ்டோரி

கடந்த சில வருடங்களில் மொபைல்கள் எந்த அளவிலான வளர்ச்சியைக் கண்டிருக்கிறதோ அதே அளவிலான வளர்ச்சியை வியரபில் (Wearable) தொழில்நுட்பமும் கண்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச்கள் ஒருபுறம் ஃபிட்னஸ் பேண்ட்கள் ஒருபுறம் என இந்திய கேட்ஜெட்ஸ் சந்தையில் இப்போது இவற்றுக்கும் முக்கிய இடமிருக்கிறது. இதில் ஸ்மார்ட் வாட்ச்கள் கூட ஆடம்பரமாகதான் பார்க்கப்படுகிறது. ஆனால், பிட்னஸ் பேண்ட்கள் அப்படியில்லை.

முன்பெல்லாம் ஃபிட்னஸ் பேண்ட் என்றாலே `ஃபிட்பிட்' போன்ற ப்ரீமியம் நிறுவனங்கள் விற்கும் விலை உயர்ந்த சாதனங்கள்தான். ஆனால், ஷியோமி இந்தச் சந்தையில் தங்களது முதல் ஃபிட்னஸ் பேண்ட்டுடன் என்று களம்கண்டதோ அன்றே அனைத்தும் மாறிவிட்டது. 2,000 ரூபாய்க்குள் ஃபிட்னஸ் பேண்ட் கிடைக்க ஆரம்பித்தது. ஹெல்த் குறித்த விழிப்புணர்வும் கூடியது. நடக்கும் தூரம், தூங்கும் நேரம், இதயத்துடிப்பு போன்றவற்றை கண்காணிக்கும் பேசிக் ஃபிட்னஸ் பேண்ட்களின் விற்பனை அதிகரித்தது. இதை பேஷன் ஸ்டேட்மென்டாகவும் இளைஞர்கள் எடுத்துக்கொள்கின்றனர். நல்ல வாட்ச்களைவிடவும் இதன் விலை குறைவு. இதைக் கண்ட சாம்சங், லெனோவா போன்ற நிறுவனங்கள் பலவும் இந்தச் சந்தையைக் கைப்பற்றும் முயற்சியில் களமிறங்கியுள்ளன. அப்படி அந்த நிறுவனங்கள் சமீபத்தில் வெளியிட்ட, வெளியிடப்போகும் சில பட்ஜெட் வியரபில் கேட்ஜெட்ஸ் பற்றி பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஃபிட் இ

சாம்சங் கேலக்ஸி ஃபிட் இ

மொபைல் விற்பனையில் முன்னணியில் இருக்கும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ், கேலக்ஸி ஃபிட், கேலக்ஸி ஃபிட் இ என மூன்று வியரபில் சாதனங்களை விரைவில் இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது. இதில் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் ப்ரீமியம் ஸ்மார்ட்வாட்ச். விலை 19,990. சாம்சங் கேலக்ஸி ஃபிட் ப்ரீமியம் ஃபிட்னஸ் பேண்ட். இதெல்லாம் அநியாய ரேட் பாஸ் என்பவர்களுக்காக சாம்சங் கொடுத்திருக்கும் ஆப்சன்தான் கேலக்ஸி ஃபிட் இ. 0.74-இன்ச் PMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் இது நடக்கும் தூரம், தூங்கும் நேரம், இதயத்துடிப்பு போன்ற பேசிக்கான ஃபிட்னஸ் விஷயங்களைக் கண்காணிக்கும். ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்களையும் இதில் பார்க்கமுடியும். 5ATM (50 மீட்டர் ஆழத்தில் 10 நிமிடங்கள் வரை) வாட்டர்ப்ரூஃப்பான இதன் 70 mAh பேட்டரி சுமார் 13 நாள் வரை தாக்குப்பிடிக்கும் என்கிறது சாம்சங். இதன் விலை 2,590. இந்த விலையில் கலர் டிஸ்ப்ளே கொடுக்கப்படாதது ஏமாற்றம்.

லெனோவா கார்டியோ 2

லெனோவா கார்டியோ 2

லெனோவா நிறுவனம் இப்போது ஸ்மார்ட்போன்களை விடவும் இந்த வியரபில் பிரிவில்தான் அதிக கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. இதுவரை இந்தச் சந்தையில் 8% வாடிக்கையாளர்களைப் பிடித்துவிட்டதாக கூறுகிறது அந்த நிறுவனம். இப்போது அதை மேலும் உயர்த்தும் நோக்கில் இந்த கார்டியோ 2 ஃபிட்னஸ் பேண்டை அறிமுகம் செய்துள்ளது. 0.87 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வரும் இது 24 மணிநேரமும் தொடர்ந்து உங்கள் இதயத்துடிப்பை கண்காணிக்கவல்லது. மற்ற பேசிக் வசதிகள் அனைத்தும் இருக்கும் இதுவும் 5ATM வாட்டர்ப்ரூஃப் ரேட்டிங்குடன் வருகிறது. இதன் 100 mAh பேட்டரி ஒரே சார்ஜில் 20 நாள் வரை தாக்குப்பிடிக்குமாம். 1,499 ரூபாய்க்கு பக்கா பேக்கேஜாக இருக்கும் இந்த கார்டியோ 2.

அமேஸ்ஃபிட் ஃபிப் லைட்

அமேஸ்ஃபிட் ஃபிப் லைட்

வியரபில் உலகில் முன்னணி நிறுவமான வாமியின் (Huami) இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவிருக்கிறது. பார்க்க ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் போல இருந்தாலும் விலை குறைவுதான். 1,28 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் இது ஒரே சார்ஜில் 45 நாள் வரை தாக்குபிடிக்குமாம். ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என இரண்டு இயங்குதளங்களில் இயங்கும் போன்களிலும் சப்போர்ட் ஆகும் இது. 30 மீட்டர் வரை வாட்டர்ப்ரூஃப் என்பதால், நீச்சல்குளங்களிலும் இதை அணிந்துகொள்ளமுடியும். ஜூலை 15 அமேசானில் விற்பனைக்கு வரும் இதன் விலை 3,999.

ஷியோமி பேண்ட் 4

ஷியோமி பேண்ட் 4

Vikatan

சந்தைக்கு வந்து சில வருடங்கள்தான் ஆகிறதென்றாலும் இந்திய ஃபிட்னஸ் பேண்ட் சந்தையில் ஷியோமிதான் ராஜா. கடைசியாக வெளியான MI பேண்ட் 3 உட்பட அனைத்து ஃபிட்னஸ் பேண்ட்களுமே ஹிட்தான். இந்த வரிசையில் புதிய அப்டேட்டாக விரைவில் வரவிருக்கிறது MI பேண்ட் 4. வசதிகளைப் பொறுத்தவரை வேற லெவல் மாற்றங்கள் எதுவும் இல்லைதான். ஆனால், 0.95 இன்ச் MI பேண்ட் 4 சூப்பர் AMOLED கலர் டிஸ்ப்ளே (120x240 pixels) கொடுக்கப்பட்டுள்ளது. கலர் டிஸ்ப்ளே ரிச் லுக்கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். Six-axis motion சென்சாருடன் வருவதால் நடப்பது, ஓடுவது, நீச்சல் அடிப்பது போன்ற நடவடிக்கைகள் முன்பைவிட சிறப்பாகக் கணக்கிடப்படும். 50 மீட்டர் வரை வாட்டர்ஃப்ரூப், வானிலை அறிக்கை, மெசேஜ்களை வாசிக்கும் வசதி என பேண்ட் 3-யில் கலக்கிய வசதிகளும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவும் ஒரு சார்ஜில் 20 நாள்கள் தாக்குப்பிடிக்கும் எனக் கூறும் ஷியோமி MI பேண்ட் 3-யின் ஸ்ட்ராப் இதற்கும் சேரும் என்றும் தெரிவித்திருக்கிறது. சீனாவில் அறிமுகமாகியிருக்கும் விலையைப் பார்த்தால் இந்தியாவில் 2,000 ரூபாய் விலையில் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றாலும் அடுத்த மாதம் இதை இங்கு எதிர்பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு