ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் 20, 2021 -ல் AirTag என்னும் சாதனத்தை வெளியிட்டது. இந்த AirTag சாதனம் ஒரு நாணயம் வடிவம் கொண்டது. கிட்டத்தட்ட GPS-யைப் போலவே செயல்படக்கூடியது. நாம் இந்த AirTag சாதனத்தை நம் ஸ்மார்ட் போனில் இணைத்துவிட்டால் போதும். இந்த AirTag-கை நாம் ஒரு GPS போன்று 'Track' செய்து கொள்ளலாம். இதனை நாம் பயன்படுத்தும் பொருள்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகளுடன் சேர்த்து வைத்துவிட்டால் போதும். நாம் அதனை நம் ஸ்மார்ட்போன் கொண்டே கண்காணித்துக் கொள்ளலாம். உதாரணமாக, நம் குழந்தைகளின் பைகளில் சேர்த்து வைத்துவிட்டால் நாம் நம் குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் எங்கு செல்கிறார்கள் என ஸ்மார்ட்போன் கொண்டே கண்காணித்துக் கொள்ளலாம்.
Apple AirTag குறித்து விரிவாகப் படிக்க, கீழே க்ளிக் செய்யவும்.

இப்படி நல்ல விஷயங்களுக்காக நம் வாழ்க்கையை ஸ்மார்டாக மாற்ற கண்டுபிடித்ததுதான் இந்த AirTag சாதனம். ஆனால் சிலர் இந்த AirTag-ஐ தவறான நோக்கத்துடன் கையாளுகிறார்கள். அண்மையில் கனடா நாட்டில் இந்த AirTag -ஐ பயன்படுத்தி சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என 9 to 5 எனும் இணையதளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
திருடர்கள் பொது இடங்களில் நிறுத்தப்பட்ட சொகுசு கார்களை குறிவைத்து AirTag சாதனத்தை கார்களில் பொறுத்திவிடுகின்றனர். பின்னர் AirTag பொருத்தப்பட்ட கார்களை Track செய்து கார் உரிமையாளரின் குடியிருப்பிற்கே சென்று கார்களைத் திருடிவிடுகின்றனர். கார்களைத் திருடும் போது Alarm ஏதும் அடிக்காமல் இருக்க ஸ்க்ரூடிரைவர்கள் போன்ற கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி கார் கதவுகளைத் திறந்து காரின் Dashboard-ன் கீழே தங்களின் மின்னணு சாதனங்களைப் பொருத்தி காரின் பாதுகாப்பு புரொக்ராமை மாற்றி அமைத்து அதன் பாதுகாப்பு அமைப்பைச் செயலிழக்கச் செய்துவிடுகின்றனர். பின்னர் காரை லாகவமாகத் திருடிவிடுகின்றனர்.

இந்த முறையில் பல கார்கள் திருடப்பட்டுள்ளதாகவும், அதில் ஐந்து சொகுசு கார்கள் AirTag சாதனத்தைப் பயன்படுத்தித் திருடப்பட்டுள்ளதாகவும் கனடா நாட்டு யோர்க் நகரக் காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தேகத்திற்கிடமான சாதனங்கள் ஏதும் காரில் பொருத்தப்பட்டுள்ளதா எனத் தொடர்ந்து கண்காணியுங்கள் என கார் உரிமையாளர்களிடம் காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.