Published:Updated:

எதாவது புதுசா சொல்லுங்க ஆப்பிள் ப்ரோ... ஐபோன் 13 சீரிஸில் என்ன ஸ்பெஷல்?!

ஐபோன் 13 | IPhone 13
ஐபோன் 13 | IPhone 13

ஐபோன் 13, புதிய ஐபேட், ஐபேட் மினி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7... ஆச்சரியப்படவைக்கிறதா ஆப்பிளின் புதிய கேட்ஜெட்ஸ்?!

வருடம் முழுவதும் பல டெக் நிகழ்வுகள் நடைபெற்றாலும் ஆப்பிள் ஐபோன் அறிமுக நிகழ்வுக்கு எப்போதுமே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். புதிய ஐபோன்கள் அறிமுகப்படுத்துவதுடன் எப்படி ஒரு அறிமுக நிகழ்வை நடத்தவேண்டும் என ஒவ்வொரு வருடமும் மற்ற நிறுவனங்களுக்கு பாடம் எடுக்கும் ஆப்பிள். இந்த வருடமும் அதற்கு விதிவிலக்கல்ல!

ஆப்பிள் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருந்த ஆப்பிள் நிகழ்வு நேற்று எப்போதும் போல சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. ஐபோன் 13 சீரிஸுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7, இரண்டு புதிய ஐபேட்கள் அறிமுகமாகியிருக்கின்றன. கொரோனாவின் பிடியிலிருந்து இன்னும் உலகம் முழுவதுமாக விடுபடவில்லை என்பதால் கடந்த சில ஆப்பிள் நிகழ்வுகளை போல இதுவும் விர்ச்சுவலாகவே நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிகழ்வு முழுவதுமாக க்யூபர்டினோவில் அமைந்திருக்கும் ஆப்பிள் தலைமையகத்தில் படமாக்கப்பட்டிருந்தது. இதில் அறிமுகமான கேட்ஜெட்ஸ் பற்றி விரிவாக பார்ப்போமா?!

ஆப்பிள் ஈவென்ட் 2021 | Apple Event 2021
ஆப்பிள் ஈவென்ட் 2021 | Apple Event 2021

ஐபோன் 13 சீரிஸ் (iPhone 13 Series):

இந்த விழாவின் ஸ்டார்ஸ் புதிய ஐபோன்கள்தான். புதிதாக ஐபோன் 13 மினி, ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் என நான்கு ஐபோன்களை அறிமுகம் செய்திருக்கிறது ஆப்பிள். ஆனால், 'வாவ்' சொல்லவைக்கும் புதிய வசதிகள் இம்முறை இல்லை. ஆண்ட்ராய்டில் ஏற்கனவே இருக்கும் சிலவற்றை புதிய தொழில்நுட்ப புரட்சியாக முன்வைக்கிறது ஆப்பிள். மொத்தமாக ஐபோன் 12 சீரிஸில் இருக்கும் சில வசதிகளை மெருகேற்றியிருக்கிறார்கள். அவ்வளவே!

தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. அருகருகில் வைத்தால் எது ஐபோன் 12 எது ஐபோன் 13 என கண்டுபிடிக்கவே முடியாது. உள்ளே சில விஷயங்களை மாற்றியிருக்கிறார்கள். நான்கு ஐபோன்களிலும் புதிய A15 பயானிக் சிப்பைப் பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள். மொபைல் புராசஸர்களை பொறுத்தவரையில் ஐபோன் சிப்கள்தான் என்றுமே பெர்ஃபாமென்ஸில் பெஸ்ட். அந்த பெருமையை புதிய ஐபோன்களும் தாங்கி நிற்கின்றன. A14 பயானிக் சிப் திறனுடன் போட்டிபோடவே இன்னும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஒரு புராசஸர்வரவில்லை. அதற்குள் இன்னொரு நவீன புராசஸர் சிப்புடன் அட்டெண்டன்ஸ் போட்டிருக்கிறது ஆப்பிள். ப்ரோ மாடல்களான 13 ப்ரோ மற்றும் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டு மொபைல்களிலும் 5 கோர் CPU கொண்ட A15 பயானிக் சிப்பும், ஐபோன் 13 மற்றும் 13 மினியில் 4 கோர் CPU கொண்ட A15 பயானிக் சிப்பும் கொடுத்திருக்கிறது ஆப்பிள். முந்தைய ஐபோன்களை விட புதிய ப்ரோ ஐபோன் மாடல்களில் கிராபிக்ஸ் பெர்ஃபாமென்ஸ் 50% அதிகரித்திருக்கிறதாம். கேமர்ஸுக்கு செம ட்ரீட்.

ஐபோன் 13 சீரிஸ்
ஐபோன் 13 சீரிஸ்

டிஸ்ப்ளே பொறுத்தவரை அதே Super Retina XDR டிஸ்ப்ளே தான். ஆனால், இந்த விஷயத்தில் ஆப்பிள் ரசிகர்களின் பல வருட காத்திருப்புக்கு இறுதியாக பலன் கிடைத்திருக்கிறது. ஐபோன்களில் முதல் முறையாக அதிக ரிஃபிரஷ் ரேட்(120Hz) கொண்ட டிஸ்ப்ளே கொடுத்திருக்கிறார்கள். ஒன்ப்ளஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் போன்களில் இதை கொண்டு வந்தே இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஒரே வினாடியில் பல முறை ரிஃபிரஷ் ஆகும் டிஸ்ப்ளே வேற லெவல் கேமிங் அனுபவத்தை தரும். போனின் அனைத்து அம்சங்களுமே செம ஸ்மூத்தாக இருப்பது போன்ற உணர்வைத் தரும்.

பேட்டரி பெர்ஃபாமென்ஸில் முன்னேற்றம் இருக்கும் என அறிவித்திருக்கிறது ஆப்பிள். ஸ்டோரேஜ் வசதியை எல்லா மாடல்களிலும் இரண்டு மடங்கு கூட்டியிருக்கிறது ஆப்பிள். ப்ரோ சீரிஸில் முன்பு 512 GB ஸ்டோரேஜ் வசதி வரை மட்டுமே கொடுத்து வந்திருந்தது. தற்போது 13 ப்ரோ மாடல்களில் அதிகபட்சமாக 1 TB ஸ்டோரேஜையும், 13 மாடல்களில் அதிகபட்சமாக 512 GB ஸ்டோரேஜையும் கொடுக்கிறது ஆப்பிள். 13 சீரிஸின் அனைத்து மொபைல்களிலும் குறைந்தபட்ச ஸ்டோரேஜே 128 GB தான். ப்ரோ மாடல்களில் புதிதாக 3X ஆப்டிக்கல் ஜூம் கொண்ட 77 mm டெலிபோட்டோ லென்ஸையும் சேர்த்திருக்கிறது ஆப்பிள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐபோன் 13 ப்ரோ மற்றும் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டு மொபைல்களும் கிராபைட், கோல்ட், சில்வர் மற்றும் சியரா ப்ளூ ஆகிய நான்கு வண்ணங்களில் வெளியாகியிருக்கின்றன. ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஆகிய இரண்டு மொபைல்களும் ரெட், ஸ்டார்லைட், மிட்நைட், ப்ளூ மற்றும் பிங்க் ஆகிய ஐந்து வண்ணங்களில் வெளியாகியிருக்கிறது.

இந்த முறை இந்தியாவிலும் சீக்கிரமாகவே கிடைக்கப்போகிறது புதிய ஐபோன்கள். செப்டம்பர் 24 முதல் இந்தியாவில் ஐபோன் 13 சீரிஸ் கிடைக்கும். செப் 17 மாலை 5.30 மணியில் இருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஐபோன் 13 சீரிஸ்
ஐபோன் 13 சீரிஸ்
ஐபோன் 13 மினி மற்றும் ஐபோன் 13: புதிய அப்டேட்கள் 5.4 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே (13 மினி) ; 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே (13) A15 பயானிக் சிப் 4 கோர்கள் கொண்ட CPU. ஐபோன் 12 மற்றும் 12 மினியை விட நீடித்த பேட்டரி லைஃப். புதிய 5G சிப் சினிமாட்டிக் வீடியோ மோட்!
விலை: ஐபோன் 13 மினி - 69,900 ரூபாய் (128 GB ஸ்டோரேஜ்) ஐபோன் 13 - 79,900 ரூபாய் (128 GB ஸ்டோரேஜ்)
ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்: புதிய அப்டேட்கள் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR வித் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே (13 ப்ரோ) 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR வித் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே (13 ப்ரோ மேக்ஸ்) A15 பயானிக் சிப் 5 கோர்கள் கொண்ட சிபியு 50 சதவிகிதம் வேகமான கிராபிக்ஸ் 1 TB வரை ஸ்டோரேஜ் புதிய 77 mm டெலிபோட்டோ லென்ஸ்
விலை: ஐபோன் 13 ப்ரோ - 1,19,900 ரூபாய் (128 GB ஸ்டோரேஜ்) ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் - 1,29,900 ரூபாய் (128 GB ஸ்டோரேஜ்)

ஐபேட் மற்றும் ஐபேட் மினி:

தொடக்க விலை ஐபேட்டின் 2021 வெர்ஷன் (9th Gen) இப்போது A13 பயானிக் சிப்பைப் பெறுகிறது. முந்தைய வெர்ஷனை விட 20 சதவிகிதம் வேகமாக இருக்கும் இந்த சிப் எனக் கூறியிருக்கிறது ஆப்பிள். முன்பக்கம் அல்ட்ரா வைடு கேமார ஒன்றையும் பெறுகிறது ஐபேட்.

ஐபேட் மினி
ஐபேட் மினி

இதனுடன் உயர் ரக ஐபேட்களில் இருக்கும் ட்ரூ டோன் டிஸ்ப்ளே வசதியையும் புதிய ஐபேட் பெறுகிறது. அதோடு மிகவும் முக்கியமாக ஸ்டோரேஜ் வசதியை இந்த ஐபேடிலும் 32 GB-யில் இருந்து 64 GB-ஆக அதிகரித்திருக்கிறது ஆப்பிள். ஐபேட் மினியில் கேமராவைக் கொஞ்சம் அப்டேட் செய்திருக்கிறது ஆப்பிள். லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, ஆப்பிள் பென்சிலுக்கான மேக்னெடிக் சப்போர்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்பீக்கர் சிஸ்டம் ஆகியவற்றுடன் பிங்க் மற்றும் பர்பிள் ஆகிய இரு புதிய நிறங்களையும் கொடுத்திருக்கிறது ஆப்பிள். அடுத்த வாரம் முதல் இந்தியாவிலும் விற்பனை தொடங்குகிறது.

விலை: ஐபேட் - 30,900 ரூபாய் (64 GB ஸ்டோரேஜ்) ஐபேட் மினி - 46,900 ரூபாய் (64 GB ஸ்டோரேஜ்)
அப்டேட்களை அள்ளித் தந்த ஆப்பிள்... `Spring Loaded' ஈவென்ட்டின் ஸ்பெஷல் அறிவிப்புகள் என்ன?
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7:

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7-யும் நேற்றைய நிகழ்வில் வெளியிட்டது ஆப்பிள். முந்தைய சீரிஸை 6 வாட்சை விட ஸ்லிம்மாகவும், 20 சதவிகிதம் பெரிய டிஸ்ப்ளேவும் கொண்டிருக்கிறது வாட்ச் சீரிஸ் 7. குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கு வசதியாக முழு கீபோர்டையும் வாட்சில் நம்மால் பார்க்க முடியும். முந்தைய வாட்சை விட 33 சதவிகிதம் வேகமாக சார்ஜ் ஆகும் எனவும் வாட்ச் சீரிஸ் 7-யைப் பற்றித் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 அமெரிக்காவில் எந்த விலையில் வெளியானது அதே விலையில்தான் வாட்ச் சீரிஸ் 7-ம் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் என்ன விலையில் கிடைக்கும் என்பதை ஆப்பிள் இன்னும் குறிப்பிடவில்லை. வாட்ச் சீரிஸ் 6 இந்தியாவில் 40,900 ரூபாயில் வெளியானது. சீரிஸ் 7-ம் அதே விலையில் தான் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த வருட இறுதியில் வாட்ச் சீரிஸ் 7 சந்தையில் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது ஆப்பிள்.

இந்த அறிவிப்புகளில் உங்களின் பேவரைட் கேட்ஜெட் எது? கமென்ட்டில் சொல்லுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு