Published:Updated:

Apple Event: வாட்ச் சீரிஸ் 6 செம ஸ்மார்ட், ஐபேட் ஏர் சூப்பர் பவர்ஃபுல்... ஆனா அந்த விலை?!

Apple Event 2020
Apple Event 2020

இந்த ஈவென்ட்டில் அறிவிக்கப்பட்ட கேட்ஜெட்களையும் அவற்றின் சிறப்பம்சங்களையும் ஒவ்வொன்றாக இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

எப்போதும் செப்டம்பர் மாதத்தில் ஐபோன்கள் மற்றும் பிற புதிய கேட்ஜெட்களை அறிமுகப்படுத்தப் பெரிய விழா எடுக்கும் ஆப்பிள். இது க்யூபெர்டினோவில் ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் மக்கள் முன்னிலையில் நடக்கும். ஆனால், தற்போதைய 'நியூ நார்மல்' உலகில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் ஆப்பிளின் இந்த நிகழ்வும் ஆன்லைனில் நேற்று நடந்து முடிந்தது.

Tim Cook
Tim Cook
Apple

டெக் அறிமுக நிகழ்வுகளின் 'கோல்டன் ஸ்டாண்டர்ட்'டாக கருதப்படுபவை ஆப்பிள் ஈவென்ட்கள். தெளிவான திட்டமிடலுடன் ஒன்றுமில்லாத கேட்ஜெட்களுக்கு கூட ஹைப் ஏற்றிவிட்டுவிடுவார்கள். கேட்ஜெட் விளம்பரங்களிலும் ஆப்பிளுக்கு நிகர் ஆப்பிள்தான். இம்முறை மொத்தமாக ஆன்லைனில்தான் நடந்ததுதான் என்றாலும் நம்மை ஆச்சர்யப்படுத்தத் தவறவில்லை ஆப்பிளின் 'Time Flies' ஈவென்ட். நேற்று ஸ்ட்ரீம் ஆன அறிமுக விழா வீடியோவை ஒரு மாதத்திற்கு முன்பே தெளிவாக எல்லாவற்றையும் திட்டமிட்டு முழுவதுமாக ஷூட் செய்து வைத்துவிட்டார்கள் போல! சாதாரண நிகழ்வு என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கோடு முடிந்துவிடும், இப்போது கிட்டத்தட்ட மொத்த ஆப்பிள் தலைமையகத்தையும் ஒரு வீடியோவில் சுற்றி காட்டியிருக்கிறார்கள். சரி, விஷயத்துக்கு வருவோம், இந்த ஈவென்ட்டில் அறிவிக்கப்பட்ட கேட்ஜெட்களையும் அவற்றின் சிறப்பம்சங்களையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6:

'Time Flies' என்ற பெயருக்கு ஏற்றார் போல இந்த ஈவென்ட்டின் ஹீரோ, புதிய ஆப்பிள் வாட்ச்தான். முன்பு சொன்னது போலவே ஐபோன் 12 அறிமுகம் கொஞ்சம் தள்ளிப்போயிருக்கிறது (செப்டம்பர் 30 நடக்கலாம் என இந்த நிகழ்விலேயே குறியீடு வைத்திருக்கிறார்கள். பார்ப்போம்!). முதலில் எப்படி ஆப்பிள் வாட்ச் பலரது வாழ்க்கையையும் மாற்றியிருக்கிறது, உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது எனச் சொன்ன ஆப்பிள், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6-ஐ முதல்முறையாக உலகத்திற்குக் காட்டியது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5-ன் அடுத்த வெர்ஷன்தான் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6. ஏற்கெனவே சீரிஸ் 5-ல் இருந்த அம்சங்கள் கொஞ்சம் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. சீரிஸ் 6-ல் சேர்க்கப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்களுள் ஒன்று ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவை கணக்கிடும் சென்சார். முதல் முறையாக இதை ஒரு ஆப்பிள் வாட்ச்சில் கொடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே சில ஸ்மார்ட்வாட்ச்களில் இருந்தாலும் மிகவும் துல்லியமாக SpO2 (Oxygen saturation) அளவை இந்த வாட்ச் அளக்கும் என்கிறது ஆப்பிள். கொரோனாவின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவதுதான் என்பதால் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் எப்போதும் ஆன்னில் இருக்கும் Altimeter-ம் இந்த வாட்ச்சில் இடம்பெற்றுள்ளது. இது நீங்கள் எந்த உயரத்தில் இருக்கிறீர்கள் என்பதை அளக்கும். ஒரு வேலை மலை உச்சி போன்ற அதிக உயரத்தில் நீங்கள் இருப்பது தெரிந்தால் தானாக ரத்தத்தில் SpO2 அளவு என்ன என்பதைப் பார்த்துக் குறைவாக இருந்தால் உங்களுக்கு எச்சரிக்கை தரும்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6| Apple Watch Series 6
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6| Apple Watch Series 6
Apple

S6 என்னும் புதிய புராசஸருடன் வெளிவருகிறது இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6. இது கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 11-லிருந்த A13 Bionic சிப்பை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதனால் பர்ஃபாமென்ஸ் விஷயத்திலும் சீரிஸ் 6-ல் நல்ல முன்னேற்றங்களைக் காண முடியும்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6| Apple Watch Series 6
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6| Apple Watch Series 6
Apple

இம்முறை வாட்ச் மட்டுமல்லாமல் ஸ்ட்ராப்பிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 'Solo Loop' என்ற புதுவகை ஸ்ட்ராப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஒற்றை வளையமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இதை கைகளில் காப்பு மாட்டுவது போல நேராக மாட்டிக்கொள்ள முடியும். எலாஸ்டிக்காக இருப்பதால் இதை அணிவதில் எந்த பிரச்னையும் இருக்காது என்கிறது ஆப்பிள். இது பல அளவுகளில் வருகின்றன. உங்கள் கைகளின் அளவுக்கு ஏற்ப இவற்றை நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும். பல வண்ணங்களிலும் இவை கிடைக்கும்.

ஆப்பிள் வாட்ச் SE

ஆப்பிள் வாட்ச் SE | Apple Watch SE
ஆப்பிள் வாட்ச் SE | Apple Watch SE

சமீபத்தில்தான் பிரீமியம் போன்களில் இருக்கும் சில வசதிகளை மட்டும் குறைத்து மிட்ரேஞ்ச் விலையில் ஐபோன் SE-யை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். இப்போது அதே போல சற்றே விலை குறைந்த வாட்ச் SE-யை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6-ன் பட்ஜெட் வெர்ஷனான ஆப்பிள் வாட்ச் SE-ல் அதிலிருக்கும் முக்கால்வாசி வசதிகள் இருக்கின்றன. ஆனால் S6-க்கு பதிலாக பழைய S5 சிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சீரிஸ் 5, 6-ல் இருக்கும் Always On டிஸ்ப்ளேவும் இதில் கிடையாது.

சார்ஜர் கிடையாது

சில வாரங்களாகவே அடுத்து வரும் ஐபோன்களுடன் சார்ஜர்கள் கொடுக்காது ஆப்பிள் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த நிகழ்வில் ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாலும் இதை நிரூபிக்கும் வகையில் ஆப்பிள் வாட்ச்களுடன் சார்ஜர்கள் (USB power adapter) கொடுக்கப்படாது என அறிவித்திருக்கிறது ஆப்பிள். ஒவ்வொரு சாதனத்துக்கும் தனித்தனியாக பவர் அடாப்டர்கள் கொடுப்பது மின்னணுக் கழிவுகளை அதிகரிக்கிறது. அதைக் குறைத்து சுற்றுச்சூழல் காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. சாம்சங்கும் விரைவில் இந்த கொள்கைக்கு மாறவிருக்கிறது.

சில ஆண்டுகளாகவே சுற்றுசூழல் பாதுகாப்பில் கவனத்துடன் ஆப்பிள் இருக்கிறது, ஏற்கனவே ஆப்பிள் சாதனங்களில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்யப்பட்ட உலோகங்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபேட் ஏர் (2020)

வாட்ச்களை அறிமுகப்படுத்திய கையுடன் இரண்டு ஐபேட்களையும் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். சில வருடங்களாகவே எந்த ஒரு மாற்றமும் வராமல் இருக்கும் மாடல் 'ஐபேட் ஏர்'. ப்ரீமியம் ஐபேட் ப்ரோவுக்கும் பேசிக் ஐபேடுக்கும் நடுவில் இருக்கும் ஒரு ஐபேட் மாடல் ஐபேட் ஏர். கல்வி, வடிவமைப்பு, கலை என மாறுபட்ட பயன்களுக்கு இன்று உலகில் பலரும் விரும்பி வாங்கும் டேப்லெட்களில் ஒன்றாக ஐபேட் ஏர் இருந்துவருகிறது. இதற்கு இம்முறை டிசைன் தொடங்கி அனைத்து விஷயங்களிலும் புதுப்பொலிவு கொடுத்திருக்கிறார்கள்.

ஐபேட் ஏர் (2020) | iPad Air (2020)
ஐபேட் ஏர் (2020) | iPad Air (2020)
Apple

10.9 இன்ச் Liquid Retina display டிஸ்ப்ளே கொடுத்திருக்கிறார்கள். ஃபிங்கர்ப்ரின்ட் சென்சாரை மேலே பவர் பட்டனுடன் இணைந்திருக்கிறார்கள். இந்த ஐபேட் ஏர் மூலம் முதல்முறையாக A14 Bionic சிப்பை உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். 5 mm சிப்பான இது இருப்பதால், இந்த ஐபேடில் பர்ஃபார்மென்ஸில் 30% வரை முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்கிறது ஆப்பிள். கேமராவில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஐபேட் ப்ரோ போல இதிலும் USB-C போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் ஐந்து நிறங்களில் (sky blue, green, silver, space gray, and rose gold) வெளிவருகிறது ஐபேட் ஏர்.

ஏற்கனவே சந்தையில் இருக்கும் ஐபேட் ப்ரோ மாடலை விட நல்ல டீலாக இருக்கும் இந்த ஐபேட் ஏர். இதனால் விரைவில் புதிய ஐபேட் ப்ரோவையும் எதிர்பார்க்கலாம்.

ஐபேட் (8th Gen)

ஐபேட் (8th Gen)
| iPad (8th Gen)
ஐபேட் (8th Gen) | iPad (8th Gen)
Apple

எப்போதும் போல பேசிக் ஐபேடுக்கும் கடமைக்கு ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார்கள். டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. உள்ளே புராசஸரை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். ஏழாம் தலைமுறை ஐபேடில் இருந்த A10 fusion சிப்புக்கு பதிலாக இதில் A12 Bionic சிப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் பர்ஃபார்மென்ஸில் முன்னேற்றங்கள் இருக்கும், மற்றபடி பெரிய மாற்றங்களை எதுவும் இந்த எட்டாம் தலைமுறை ஐபேட்களில் பார்க்கமுடியாது.

ஆப்பிள் ஒன்

கேட்ஜெட்ஸ் அளவுக்கு அதன் டிஜிட்டல் சேவைகளிலும் சில வருடங்களாகவே அதிகம் கவனம் செலுத்திவருகிறது ஆப்பிள். தொடர்ந்து புதிய சேவைகள் பலவற்றையும் அறிமுகப்படுத்திவரும் ஆப்பிள் அவற்றை எல்லாம் ஒரே 'bundle' ஆக்கி 'ஆப்பிள் ஒன்' எனப் பெயரிட்டிருக்கிறது. ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் டிவி பிளஸ், iCloud என அனைத்தையும் ஒரு பேக்கெஜாக குறைந்த விலையில் பெற முடியும்.

ஆப்பிள் ஒன்
 Apple One
ஆப்பிள் ஒன் Apple One
Apple

இந்தியாவில் இரண்டு வடிவங்களில் இந்த ஆப்பிள் ஒன் சந்தாக்கள் கிடைக்கும்.

பேசிக் பிளான்: ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் டிவி பிளஸ், 50 GB iCloud ஸ்டோரேஜ் - ரூ.195/ மாதம்

பேமிலி பிளான்: ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் டிவி பிளஸ், 200 GB iCloud ஸ்டோரேஜ். இதை ஆறு பேர் வரை பகிர்ந்துகொள்ள முடியும் - ரூ. 395/ மாதம்.

நேற்று பிட்னஸ் ஸ்பெஷல் சேவையாக ஆப்பிள் பிட்னஸ்+ சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இது தற்போது இந்தியாவுக்குக் கிடைக்காது.

ஏற்கெனவே WWDC நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய iOS 14, iPadOS 14, WatchOS 7 ஆகிய அப்டேட்களும் இன்று முதல் ஆப்பிள் சாதனங்களுக்குக் கிடைக்கத்தொடங்கும் என அறிவித்திருக்கிறது ஆப்பிள்.

இப்படி புதிய அறிமுகங்கள் அனைத்தும் கண்களைக் கவரும் விதத்தில் இருந்தாலும் எப்போதும் போல அந்த ஒரு விஷயம்தான் இடிக்கிறது. அது விலை. எப்போதும் ஐபோன்கள் அறிமுகம் ஆகும் போது 'கிட்னியை விற்றுதான் ஐபோன்' என மீம்கள் இந்தியாவில் டிரெண்ட்டாகும். ஆனால் இம்முறை ஐபோன்கள் அறிமுகமாகாமலேயே இந்த மீம்களை சோசியல் மீடியாவில் பார்க்க முடிகிறது. எப்போதும் போல கருணையே இல்லாமல் இந்தியாவில் விலையை நிர்ணயித்திருக்கிறது. அமெரிக்கா விலையைப் பார்த்து 'பரவயில்லையே!' என மக்கள் கொண்ட ஆர்வத்தை ஒரே போடாகப் போட்டு எப்போதும் போல உடைத்திருக்கிறது ஆப்பிள். அமெரிக்க விலையை விட 10,000 ரூபாய்க்கும் அதிகமாக இங்கு விற்பனைக்கு வருகின்றன இந்த ஆப்பிள் சாதனங்கள்.

விலை

ஆப்பிள் வாட்ச் SE:

GPS - ரூ. 29,900

GPS + Cellular - ரூ. 33,900

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6:

GPS- ரூ. 40,900

GPS + Cellular- ரூ. 49,900

ஐபேட் (8th gen):

32GB (Wi-Fi) - ரூ. 29,900

128GB (Wi-Fi) - ரூ. 37,900

32GB (Wi-Fi + Cellular) - ரூ. 41,900

32GB (Wi-Fi + Cellular) - ரூ. 49,900

ஐபேட் ஏர் (2020):

64GB (Wi-Fi) - ரூ. 54,900

256GB (Wi-Fi) - ரூ. 68,900

64GB (Wi-Fi + Cellular) - ரூ. 66,900

256GB (Wi-Fi + Cellular) - ரூ. 80,900

இதற்கு இறக்குமதி வரியை பல காலமாகக் காரணம் காட்டிவருகிறது ஆப்பிள். ஆனால், இந்த நிலையை மாற்ற ஆப்பிள் தரப்பு இதுவரை எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. டிஜிட்டல் சேவைகளின் விலையாவது குறைவாக இருக்கிறதே என நினைத்து ஆசுவாசப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான்.

புதிய ஆப்பிள் வாட்ச்கள் மற்றும் ஐபேட்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு