Published:Updated:

அனைத்து போன்களுக்கும் இனி ஒரே சார்ஜர்... ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தை ஆப்பிள் எதிர்ப்பது ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அனைத்து போன்களிலும் TYPE-C?!
அனைத்து போன்களிலும் TYPE-C?! ( Tony Webster/Flickr )

புதிய விதிகளின்படி அனைத்து கருவிகளிலும் Type-C வகை சார்ஜிங் போர்ட்டைக் கொடுக்க நிறுவனங்களுக்கு 24 மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்படும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளே விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அனைத்து கையடக்க எலக்ட்ரானிக் கருவிகள் அனைத்திலும் Type-C போர்ட் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது ஐரோப்பிய ஆணையம் (EU Commission).

ஐரோப்பிய ஆணையத்தின் முடிவுக்கு என்ன காரணம் ?
Charger Cables
Charger Cables
PIXABAY

வளர்ந்து வரும் நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகள் என அனைத்திலும் மின்னணு கழிவுகளின் அளவு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு மின்னணு கருவி விற்பனை செய்யப்படும் போதே அதை மறுசுழற்சி செய்வதற்கான வழிகள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும் அது சரிவர கடைப்பிடிக்கப்படுவதில்லை. மக்கள் பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறியும் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதும் கடினமான காரியமாகவே இருக்கிறது. அதைத் தவிர ஒவ்வொரு கருவிக்கும் வெவ்வேறு மாதிரியான போர்ட்களைக் கொடுப்பதால் அதற்கேற்ற வகையில் சார்ஜர்களையும், கேபிள்களையும் தனித்தனியாக உற்பத்தி செய்ய வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் 11,000 டன் அளவுக்குப் பயன்பாட்டில் இல்லாத கேபிள்கள் கழிவுகளாக மாறுவதாகத் தெரிவித்துள்ளது ஐரோப்பிய ஆணையம். ஆகவே மின்னனு கருவிகளுக்கான கேபிள்களின் எண்ணிக்கையை உற்பத்தி நிலையிலேயே கட்டுப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

`புதிய மொபைலுடன் சார்ஜர்களைக் கொடுக்கக் கூடாது'

ஐரோப்பிய ஆணையத்தின் இந்தத் திருத்தப்பட்ட ரேடியோ எக்யூப்மெண்ட் விதிகளின்படி ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், கேமராக்கள், இயர்போன்கள் மற்றும் வீடியோ கேமிங் கன்சோல்கள் ஆகியவற்றில் இனிமேல் கட்டாயம் Type-C வகை சார்ஜிங் போர்ட் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். மேலும் இந்தப் புதிய விதிகள் அனைத்தும் சார்ஜிங் போர்ட்டைக் கொண்டிருக்கும் கருவிகளுக்கு மட்டுமே பொருந்தும். வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்ட கருவிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வடிவு ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றால் திருத்தப்பட்ட ரேடியோ எக்யூப்மெண்ட் விதிகள் அமலுக்கு வரும். இந்தப் புதிய விதிகளின்படி அனைத்து கருவிகளிலும் Type-C வகை சார்ஜிங் போர்ட்டைக் கொடுக்க நிறுவனங்களுக்கு 24 மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TYPE C Charger
TYPE C Charger
PxFuel

அது மட்டுமில்லாமல் ஐரோப்பிய ஆணையம் வகுத்துள்ள புதிய விதிகளில் புதிய மொபைல்களின் பெட்டிகளில் இருந்தே சார்ஜர்களை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அனைத்து வகையான எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு அவசியம் தேவைப்படும் ஒன்றாக சார்ஜர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் எலக்ட்ரானிக் சாதனங்களுடன் அதற்கு இணையாக சார்ஜர்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அவை பெரும்பாலும் உபயோகமில்லாததாகவே இருக்கின்றன. அந்த நிலையை முடிவுக்குக் கொண்டு வேண்டியிருக்கிறது. இந்தப் புதிய திட்டத்தின்படி ஐரோப்பாவில் உள்ள வாடிக்கையாளர்கள் அவர்களது எலக்ட்ரிக் சாதனங்கள் அனைத்துக்கும் ஒரே சார்ஜரைப் பயன்படுத்த முடியும். இந்த முடிவு கூடுதல் வசதியை அளிப்பதோடு கழிவுகளின் அளவையும் குறைக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார் ஐரோப்பிய உள்சந்தைக்கான ஆணையர் தியெர்ரி பிரெட்டோன் (Thierry Breton) .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐபோனில் Type-c போர்ட்டைக் கொடுக்குமா ஆப்பிள் ?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கெனவே Type-C போர்ட்டை பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐபோனில் இப்போதுவரை பயன்படுத்தப்பட்டு வரும் லைட்னிங் கனெக்டர் கடந்த 2012-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 9 வருடங்களாக ஐபோன்களின் டிசைன் பல வகைகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அதன் லைட்னிங் கனெக்டர் போர்ட் மட்டும் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது ஐரோப்பிய ஆணையத்தின் முடிவால் அனைவரது பார்வையும் ஆப்பிள் நிறுவனத்தின் பக்கமாகத் திரும்பியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்ய வேண்டும் என்றால் ஆணையத்தின் புதிய விதிகளுக்குக் கட்டுப்பட்டு Type-C போர்ட்டை ஐபோனில் கொடுக்க வேண்டியிருக்கும்.

ஆப்பிள் ஐபோன் வயர்லெஸ் சார்ஜிங்!
ஆப்பிள் ஐபோன் வயர்லெஸ் சார்ஜிங்!
ஆனால் ஆப்பிள் நிறுவனம் ஐரோப்பிய ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. "ஒரே வகை போர்ட்டை கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது புதுமையான தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக அதைத் தடுக்கிறது. அதனால் இந்த முடிவு எங்களை கவலை கொள்ள வைக்கிறது. இதனால் ஐரோப்பாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்" என்று கருத்து தெரிவித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

Type-C கனெக்டரை கொடுக்காமல் இருக்க, ஐபோனின் வடிவமைப்பு, வாட்டர்ஃப்ரூப் என்று பல்வேறு காரணங்களை ஆப்பிள் சொன்னாலும் லைட்னிங் கனெக்டர் விற்பனை மூலமாகக் கணிசமான வருமானம் ஆப்பிளுக்குக் கிடைத்து வருகிறது என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். தயாரிப்பு விலையை விடப் பல மடங்கு விலையில் சந்தையில் இந்த கனெக்டர்களை விற்பனை செய்கிறது ஆப்பிள். எடுத்துக்காட்டாக 200 ரூபாய்க்கு நல்ல Type-C கேபிளை வாங்கி விட முடியும். ஆனால் ஆப்பிள் லைட்னிங் கனெக்டர் கேபிள் வேண்டுமென்றால் 2000 ரூபாய் தேவைப்படும்.

சொல்லப்போனால், ஐரோப்பிய ஆணையத்தின் புதிய விதிகள் ஓரளவுக்கு ஆப்பிள் நிறுவனத்துக்குச் சாதகமாகவே இருக்கின்றன. இப்போது வெளியாகும் ஐபோன்களில் ஏற்கெனவே வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய ஐபோன்களுடன் சார்ஜர் கொடுப்பதும் ஏற்கெனவே நிறுத்தப்பட்டுவிட்டது. ஐபோன்களில் கொடுக்கப்பட்டு வரும் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பதால் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் முழுவதுமாக போர்ட்களே இல்லாத ஐபோன் அறிமுகப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

அதனால், இதைப்பற்றி கவலைப்பட வேண்டிய நிலையிலேயே ஆப்பிள் இல்லை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு