சட்டங்களுக்காக மக்கள் இல்லை, மக்களுக்காகத்தான் சட்டங்கள் என்பதை உலகுக்கு மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள், ஹாங்காங்கின் குடிமக்கள். ’வேறு நாடுகளில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் ஹாங்காங்கில் இருந்தால், அவர்களை நாடுகடத்த முடியாது. அது, ஹாங்காங்கை நிர்வாகம் செய்துவரும் சீனாவாக இருந்தாலும் பொருந்தும்’ என்ற நிலையை மாற்றும் வகையில் அது தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவுசெய்தது ஹாங்காங் அரசு.

அரசின் இந்த முடிவை மக்கள் ஏற்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ஹாங்காங் அரசு நிர்வாகத்துக்கு எதிராகப் போராடிவந்தார்கள். இறுதியாக, மக்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. ஒப்படைப்பு மசோதா (Extradition bil), சட்டத்திருத்த மசோதா நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக ஹாங்காங்கின் நிர்வாகி கேரி லேம் அறிவித்திருக்கிறார். நீண்டகாலமாக நடைபெற்றுவந்த இந்த போராட்டத்தில், மக்களின் பங்கெடுப்பு என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதுவும், கடந்த ஜூன் மாதம் அரசு எதிர்பார்க்காத வகையில் சுமார் 10 லட்சம் பேர் ஒன்றுகூடி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் எப்படி தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர்? குறிப்பிட்ட இடத்தில் பல லட்சம் பேர் ஒன்று சேர்ந்தது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதனக்கு எதிராக ஒரு கருத்து மக்களிடையே எழுந்தால், அதைப் பெரும்பான்மையான மக்களிடையே சென்று சேர்வதைத் தடுக்கவே அரசுகள் முயற்சிசெய்யும். அதை மீறியும் அந்தக் கருத்துகள் மக்களிடையே சென்றுசேர்ந்தால் அது, புரட்சியாக மாறி ஆட்சியைக்கூட கலைக்கும் நிலைமை ஏற்படலாம். அதனால்தான், உலகில் எந்த அரசும் புரட்சியை விரும்புவதில்லை. இன்றைக்கும் டிஜிட்டல் யுகத்தில் இதுபோன்ற கருத்துகள் நொடியில் பல லட்சம் பேரை சென்றடைவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

எனவே, இன்று பிரச்னை என்று வந்துவிட்டால் அரசு முதலில் கைவைப்பது தொலைத்தொடர்பு விஷயத்தில்தான். ஹாங்காங்கிலும் அதேதான் கடைப்பிடிக்கப்பட்டது. இன்டெர்நெட்டைப் பொறுத்தவரை சீனாவில் உள்ள நிலைமை உலகம் அறிந்ததுதான். அங்கே சமூக வலைதளங்கள், ஈமெயில், மெசேஜிங் ஆப்கள் போன்ற அனைத்துமே தணிக்கைக்கு உட்படுத்தப்படும். எனவே, அதன் மூலமாக அரசுக்கு எதிராகத் தவல்களைப் பரப்புவது இயலாத ஒரு விஷயம். இதுபோன்ற சமயத்தில்தான் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்குக் கைகொடுத்திருக்கிறது, பிரிட்ஜிஃபை (Bridgefy) என்ற ஆப்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அரசுக்கு எதிராகப் போராட மக்களை ஒருங்கிணைப்பது அவசியம். அதற்கு, தகவல் தொடர்புதான் மிக முக்கியமான தேவையாக இருந்தது. ஆனால், இன்டர்நெட் தொடர்பான கட்டுப்பாடுகள் அதை சாத்தியமில்லாததாக மாற்றியிருந்தன. எடுத்துக்காட்டாக, நாளைக்கு இந்த இடத்தில் போராட்டம் நடைபெறும் என மெயிலில் ஒருவருக்கு தகவல் அனுப்பினால், அரசு அந்த இடத்தில் படையைக் குவிக்கும். போராட்டத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும். இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க உதவியது பிரிட்ஜிஃபை ஆப்.

இந்த ஆப், peer-to-peer முறையில் மக்களிடையே தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது. இதற்காக, மொபைலில் இருக்கும் புளூடூத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்று பல மொபைல்களை இணைத்து, ஒரு வலைப் பின்னலை உருவாக்குகிறது பிரிட்ஜிஃபை. அதைப் பயன்படுத்தி, இதே ஆப்பை வைத்திருக்கும் மற்றொரு நபரிடம் ஒரு தகவலை எளிதாகக் கொண்டுசேர்க்க முடியும். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்த ஆப் 4,000% சதவிகிதம் அளவுக்கு உயர்ந்ததாக Apptopia என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. “ கடந்த ஏழு நாள்களில் மட்டும் சுமார் 60,000 தடவை இந்த ஆப் டவுண்லோட் செய்யப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலானவை, ஹாங்காங்கில் இருந்து டவுண்லோட் செய்யப்பட்டிருக்கின்றன.” மேலும், “இன்டர்நெட் இல்லாமலேயே மக்கள் அவர்களை ஒன்றிணைக்கவும் பாதுகாப்பாக இருக்கவும் இந்த ஆப்பை பயன்படுத்திக்கொண்டார்கள் “ என்று 'ஃபோர்ப்ஸ்'-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார், பிரிட்ஜ்ஃபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜார்ஜ் ரியோஸ் (Jorge Rios ).
போராட்டம் என்று வந்துவிட்டால், இன்டர்நெட் இருக்காது என்பது ஹாங்காங் மக்களுக்கு முன்னமே தெரிந்த ஒரு விஷயம். கடந்த 2014-ம் ஆண்டில், இதேபோல மக்கள் போராடும்போதும் இதே போன்ற கெடுபிடிகள் இருந்தன. அப்போதும் மக்களுக்கு FireChat என்ற ஆப்தான் உதவிக்கு வந்தது. அங்கே மட்டுமல்ல, தைவான், ஈரான் மற்றும் ஈராக் போன்ற இடங்களில் நடந்த போராட்டங்களிலும் இந்த ஆப்பின் பங்களிப்பு அதிகமாக இருந்தது.

இப்போது, பல வருடங்கள் கழித்து மக்கள் தெருவில் போராட வரும்போதும் அதேபோல ஒரு ஆப்தான் மக்களுக்கு உதவியிருக்கிறது. தொழில்நுட்பத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து மக்களை சரிக்கட்டலாம் என நினைத்த அரசுக்கு, அதே தொழில்நுட்பத்தைவைத்து ஆட்டம் காட்டியிருக்கிறார்கள் ஹாங்காங் வாசிகள்.