Published:Updated:

வந்துவிட்டது #iPhone12… செராமிக் ஷீல்டு, 5G, டால்பி விஷன் வீடியோ... ஆனால், சார்ஜர்?

iPhone 12 series
iPhone 12 series

அறிமுக வீடியோவில் எப்போதும் போல நம்மைப் பிரமிக்க வைத்த ஆப்பிள் புதிய ஐபோன்களைக் கொண்டு அதே அளவு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறதா..?

"என்ன பாஸ் கிட்னி விக்க ரெடியா?" போன்ற மீம்கள் சோஷியல் மீடியாவில் சுற்றிக்கொண்டிருந்தால் ஆப்பிள் அறிமுக நிகழ்வு எதோ நடந்து முடிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். புதிய ஐபோன்களை எப்போதும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்துவது ஆப்பிள் வழக்கம். ஆனால், கடந்த மாதம் நடந்த ஆப்பிள் அறிமுக நிகழ்வில் புதிய ஆப்பிள் வாட்ச் மற்றும் ஐபேட்கள் மட்டும்தான் அறிமுகமாகியிருந்தன. கொரோனா காரணத்தில் புதிய ஐபோன் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ள காரணத்தால் கொஞ்சம் லேட்டாகத்தான் இந்த வருடம் ஐபோன்கள் அறிமுகம் ஆகும் என ஆப்பிள் தரப்பு தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று ஆன்லைன் நிகழ்வு மூலம் அதன் புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். கடந்த சில ஆப்பிள் நிகழ்வுகள் போல இதுவும் க்யூபெர்டினோவில் ஆப்பிளின் தலைமையகத்தில் நேர்த்தியாக முன்பே ஷூட் செய்யப்பட்டிருந்தது. அறிமுக வீடியோவில் எப்போதும் போல நம்மைப் பிரமிக்க வைத்த ஆப்பிள் புதிய ஐபோன்கள் கொண்டு அதே அளவு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறதா... விரிவாகப் பார்ப்போம்!

ஆப்பிள், ஃபேஸ்புக்... பங்கு விலைச் சரிவு! - என்ன காரணம்?

இம்முறை 12 சீரிஸில் மொத்தம் நான்கு ஐபோன்கள். ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ். இதில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது ஐபோன் 12தான். ஐபோன் 11-ன் அடுத்த தலைமுறை மாடலான இதில் ஐபோன் 11-லிருந்த பல விஷயங்கள் மாறியிருக்கின்றன. முக்கியமாக லுக் அளவிலேயே பெரிய வித்தியாசம் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஐபோன்கள் அனைத்தும் பார்க்க ஒரே மாதிரியானதாகவே இருந்து வருகின்றன. ஐபோன் XR-க்கும் ஐபோன் 11-க்கும் கேமராவை தவிர்த்து டிசைனில் எந்த ஒரு வேறுபாடும் இருக்காது. இந்த டிசைனை 12 சீரிஸில் ஓரளவு உடைத்திருக்கிறது ஆப்பிள். டிஸ்ப்ளே bezel-கள் இன்னும் கூட குறைந்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான ஐபேட் ஏர் போன்றதொரு ஃபிளாட் பினிஷ் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னும் அந்த நாட்ச் அப்படியே இருக்கிறது. இங்கு குறிப்பிடுவதைவிடப் படத்தில் பார்த்தால் ஐபோன் 11-க்கும் ஐபோன் 12-க்கும் இருக்கும் வித்யாசம் என்ன என்பது தெளிவாக புரியும்.

ஐபோன் 11 v ஐபோன் 12
ஐபோன் 11 v ஐபோன் 12

முதல் முறையாக 'செராமிக் ஷீல்டு' என்ற டிஸ்ப்ளே பாதுகாப்பை மேலே பயன்படுத்தியிருக்கிறார்கள். இது தற்போது இருக்கும் கொரில்லா ஸ்கிரீன் கிளாஸ்களை விட வலுவானதாக இருக்கும் என்கிறது ஆப்பிள். இது எப்படி உருவாக்கப்பட்டது எனச் சொன்ன ஆப்பிள் இதை கிளாஸ் என எங்கும் குறிப்பிடவில்லை. 'செராமிக் ஷீல்டு' முன்பை விட நான்கு மடங்கு அதிக 'Fall protection' தரும் என்கிறது ஆப்பிள். அதாவது கீழே போட்டால் அவ்வளவு எளிதில் இது உடைந்துவிடாதாம். 12 சீரிஸ் ஐபோன்கள் அனைத்திலும் இதுதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இனிவரும் ஐபோன்களில் இந்த 'செராமிக் ஷீல்டு' பாதுகாப்புதான் டிஸ்ப்ளேக்களுக்கு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

iPhone 12
iPhone 12
ஐபோன் 12, 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஐபோன் 11-ல் இருந்தது 6.1 இன்ச் IPS LCD டிஸ்ப்ளேதான். இதுவும் பெரிய முன்னேற்றம்தான். PPI எனும் Pixel per inch ஐபோன் 12-ல் நன்றாக அதிகரித்திருக்கிறது. ஐபோன் 11 PPI 324. ஐபோன் 12 PPI 460.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்தது கேமரா, கிட்டத்தட்ட ஐபோன் 11-ல் இருந்த அதே இரண்டு கேமராக்கள்தான். ஆனால் லென்ஸை மாற்றியிருக்கிறார்கள். மெயின் கேமரா f/1.6 aperture கொண்டது. இதனால் ஒளி குறைவான இடங்களில் இன்னும் கூட நல்ல புகைப்படங்களை ஐபோன் 12 எடுக்கும் என எதிர்பார்க்கலாம். இம்முறை முன்புறம் இருக்கும் செல்ஃபி கேமராவுக்கும் 'Night Mode' கொடுத்திருக்கிறார்கள்.

ஆப்பிளின் புதிய A14 பயானிக் சிப்புடன் வருகின்றன 12 சீரிஸ் ஐபோன்கள். 5 nm தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் மொபைல் புராசஸர் இதுதான். இதற்கு முன்பும் ஐபோனில் பர்ஃபாமென்ஸ் விஷயத்தில் எந்த குறையும் இருந்ததில்லை. இனி இருக்கப்போவதுமில்லை.

iPhone 12 | iPhone 12 Mini
iPhone 12 | iPhone 12 Mini

இது அனைத்தையும் விட முக்கிய முன்னேற்றமாக ஆப்பிள் சொல்வது 5Gதான். இதனால் இந்த அறிமுக நிகழ்வுக்கே 'Hi Speed' எனப் பெயர் வைத்திருந்தது ஆப்பிள். ஏற்கெனவே சாம்சங், ஒன்ப்ளஸ் என முக்கிய நிறுவனங்கள் அனைத்துமே 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்க 12 சீரிஸ் ஐபோன்கள் அனைத்திலுமே 5G சப்போர்ட் இருக்கும் என அறிவித்திருக்கிறது ஆப்பிள். sub-6 networks மற்றும் millimeter wave ஆகிய இரண்டு 5G தொழில்நுட்பங்களுக்குமே ஐபோன் 12 சீரிஸில் சப்போர்ட் இருக்கும். அமெரிக்காவிலேயே இன்னும் முழுவதுமாக 5G தொழில்நுட்பம் ஊடுருவவில்லை. இந்தியாவில் இன்னும் 5G வர குறைந்தது ஒரு வருடம் ஆகும் என எதிர்பார்க்கலாம். ஆனால், புதிய போன்கள் வாங்குபவர்கள் அதை குறைந்தபட்சம் இரண்டிலிருந்து மூன்று வருடங்களாவது பயன்படுத்துவார்கள் என்பதால் இப்போதே 5G சப்போர்ட் கொடுப்பது அவசியமானதாக மாறுகிறது. அதுவும் விலையுயர்ந்த ஐபோன்களை ஐந்து வருடங்கள் வரை பயன்படுத்துகிறார்கள். அதனால் ஆப்பிளின் இந்த முடிவு வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

ஐபோன் 12 விலை:

64 GB- 79,900 ரூபாய் | 128 GB- 84,900 ரூபாய் | 256 GB- 94,900 ரூபாய்

இம்முறை ஐபோன் 12 விலையே அதிகம் செல்வதால் அதன் குட்டி வெர்ஷன் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். சர்ப்ரைஸ் என ஜேம்ஸ் பாண்ட் மியூசிக் எல்லாம் போட்டு ஆப்பிள் அறிமுகம் செய்த இந்த ஐபோன் 12 மினியில் மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளும் உண்டு. ஆனால், டிஸ்ப்ளே மட்டும் சிறியது (5.6 இன்ச்). இந்தியாவில் சரியாக ஐபோன் 12-ஐ விட 10,000 ரூபாய் குறைவாக வெளிவருகிறது ஐபோன் 12 மினி.

ஐபோன் 12 மினி விலை:

64 GB- 69,900 ரூபாய் 128 GB- 74,900 ரூபாய் 256 GB- 84,900 ரூபாய்

இம்முறை சாதாரண மாடல்களிலேயே அனைத்து முக்கிய விஷயங்களையும் அடைத்துவிட்டதே ஆப்பிள், ப்ரோ மாடல்களுக்கு என்ன வைத்திருப்பார்கள் என்ற கேள்விதான் ஐபோன் 12 அறிமுகத்தின்போது எழுந்தது. முன்பை போல மூன்று கேமராக்கள் கொடுத்திருக்கிறார்கள் ப்ரோ மாடல்களில். அதைத் தவிர கூடுதலாக வேற லெவல் அம்சங்கள் எதுவும் ப்ரோ மாடல்களில் இல்லை. சின்ன சின்ன விஷயங்கள் ப்ரோ மாடல்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது. நேரடியாக ஐபோன் 12 ப்ரோவில் 10-bit HDR (Dolby Vision) வீடியோ எடுக்க முடியும் எனச் சொல்லியிருக்கிறது. இது ப்ரைம் வீடியோ,நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களில் இருக்கும் வீடியோ ஸ்டாண்டர்ட்.

iPhone 12 pro
iPhone 12 pro

இது அல்லாமல் ப்ரோ மாடல்களுக்கு மட்டுமேயான வசதி என்றால் இன்-பில்ட் LiDAR ஸ்கேனரை சொல்லலாம். AR செயலிகளின் பர்ஃபாமென்ஸை இது மேம்படுத்தும். இரவு நேரத்தில் 'Auto-focus' இன்னும் துல்லியமாக இருக்கும். மற்றபடி 5G, செராமிக் ஷீல்டு என ஐபோன் 12-ல் இருந்த அனைத்து வசதிகளும் ஐபோன் 12 ப்ரோவில் இருக்கும். இம்முறை அளவிலும் கூட மாற்றம் கிடையாது. ஐபோன் 12 ப்ரோவும் 6.1 இன்ச் டிஸ்ப்ளேவுடன்தான் வருகிறது.

ஆப்பிள் 12 ப்ரோ விலை

128 GB- 1,19,900 ரூபாய்

256 GB- 1,29,900 ரூபாய்

512 GB- 1,49,900 ரூபாய்

இத்துடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 12 ப்ரோ மேக்ஸும் அறிமுகமானது. இதுதான் இதுவரை வந்ததிலேயே அளவில் பெரிய ஐபோன்.

iPhone 12 pro
iPhone 12 pro

ஆப்பிள் 12 ப்ரோ மேக்ஸ் விலை

128 GB- 1,29,900 ரூபாய்

256 GB- 1,39,900 ரூபாய்

512 GB- 1,59,900 ரூபாய்

'சார்ஜ்ர் கிடையாது போடா!'

முன்பு வெளிவந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் ஐபோன்களுடன் USB கேபிள் வந்தாலும் சார்ஜர் அடாப்டர்கள் மற்றும் ஹெட்போன்கள் வராது என அறிவித்திருக்கிறது ஆப்பிள். மின்னணு கழிவுகளைக் குறைக்கும் முயற்சியில் இது ஒரு முக்கிய பங்காற்றும் எனச் சொல்லியிருக்கிறது ஆப்பிள். தற்சமயத்தில் உலகில் 200 கோடி சார்ஜர் அடாப்டர்கள் இருப்பதாகத் தரவுகளையும் முன்வைத்தது. இருப்பினும் இவ்வளவு விலை கொடுக்கும் வாடிக்கையாளனுக்கு இது ஏமாற்றமாகத்தான் இருக்கப்போகிறது. ஆனால், காலப்போக்கில் மற்ற டெக் நிறுவனங்களையும் இந்த வழியில் பயணிக்க வைக்கும் ஆப்பிள். நல்லது நடந்தால் சரி!

இது அவர்களது விலையுயர்ந்த புதிய சார்ஜர் ஒன்றை விற்பதற்கான யுக்திதான் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. ஆம், 12 சீரிஸ் ஐபோன்களுக்கு புதிய சார்ஜிங் தொழில்நுட்பம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. MagSafe எனப்படும் இது மேக்புக் லேப்டாப்கள் பயன்படுத்தியவர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமான பெயராக இருக்கும். இது காந்தங்களால் ஐபோனின் பின்புறம் ஒட்டி சார்ஜ் செய்யும். 15W வேகத்தில் சார்ஜ் செய்யும் இந்த MagSafe சார்ஜரின் விலை 4,500 ரூபாய். இப்படித்தான் ஹெட்போன் ஜாக்கை நீக்கி ஏர்பாட்ஸை அறிமுகப்படுத்தி அதற்கென தனி சந்தையையே உருவாக்கியது ஆப்பிள்.

இது மட்டுமல்லாமல் இந்த காந்தங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வெலட், கேஸ் போன்ற மற்ற சில உபகரணங்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கிறது.

MagSafe Charger
MagSafe Charger

ஐபோன்களை பற்றி விவரித்ததில் இந்த நிகழ்வில் முதலில் அறிமுகமான விஷயம் பற்றி சொல்ல மறந்துவிட்டோம். HomePad ஸ்மார்ட் ஸ்பீக்கரின் மினி வெர்ஷனான 'HomePad Mini'-யை ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த குட்டி ஸ்மார்ட் ஸ்பீக்கரின் இந்திய விலை 9,990 ரூபாய்.

புதிய ஐபோன்கள் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன... கமென்ட்களில் பதிவிடுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு