Published:Updated:

வருகிறது துப்புரவுத் தொழிலாளிகளின் `காப்பான்'... சென்னை ஐ.ஐ.டி உருவாக்கிய `SEPoy' ரோபோ!

ரோபோவுடன் பேராசிரியர் பிரபு ராஜகோபால்
News
ரோபோவுடன் பேராசிரியர் பிரபு ராஜகோபால்

சந்திரயான்களை ஏவி பெருமைப்படும் இந்த தேசத்தில், இன்னும் மலக்குழிகளில் மனிதன் இறங்கி சுத்தம் செய்யும் அவலமும் நிகழ்ந்துகொண்டுதான்தான் இருக்கிறது. இதைத் தடுக்க நாடெங்கும் பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் மிக முக்கியமானது சென்னை ஐ.ஐ.டியின் SEPoy ரோபோ.

ஒவ்வொருமுறையும் உயிரைப் பணயம் வைத்து சாக்கடைகளுக்குள் இறங்கும் அந்த மனிதர்களின் பணி, சாகசமாகப் பார்க்கப்படாமல் போவதில் பிரச்னையில்லைதான். ஆனால், ஒவ்வொருமுறையும் நச்சுவாயுக்களில் சிக்கி உயிரிழக்கும் அந்த மனிதர்களின் செய்திகளுக்கு, கொஞ்சமும் சலனமின்றி இந்தச் சமூகம் நிற்பதைப் பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் தொட்டு மிளிரும் தொழில்நுட்பம் இன்னும் இவர்கள் வாழ்வில் ஒளிவீசாமல் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்? விடையை உங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

SEPoy Robot
SEPoy Robot

தற்போது அந்த ஒளியின் கீற்றுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தென்படத் தொடங்கியிருக்கின்றன. தேசம் முழுக்க இவர்களின் துயர்தீக்கும் எந்திரன்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வரிசையில் சென்னை ஐ.ஐ.டி உருவாக்கியிருப்பது SEPoy என்னும் ரோபோ.

``கழிவுநீர்த் தொட்டிக்குள் இனி மனிதன் இறங்கக் கூடாது என்பதே எங்கள் இலக்கு" என இதுகுறித்துப் பேசத்தொடங்கினார். ஐ.ஐ.டி பேராசிரியர் பிரபு ராஜகோபால். அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``இந்த ரோபோவை உருவாக்க எத்தனை நாள்கள் ஆகின?"

``எங்கள் குழு ஐந்து வருடங்களுக்கு முன் கழிவுநீர் பைப்புக்குள் சென்று சுத்தம்செய்யும் ரோபோவை உருவாக்கினோம். ஆனால், அது கடின அழுக்குகளை உடைத்தெறியும் திறனற்று இருந்தது. இப்பொழுது Bio propulsion முறையில் கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் SEPoy ரோபோவை உருவாக்கியுள்ளோம்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``இந்த ரோபோவை உருவாக்கும் எண்ணம் எப்படி உருவானது?"

``வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் சாக்கடையை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி சுத்தம் செய்பவர்கள் இறந்துபோவதைத் தடுக்க வேண்டும் என நினைத்தோம். அந்தப் பணிகளில் ஈடுபடும் விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த SEPoy ரோபோ."

பிரபு ராஜகோபால்
பிரபு ராஜகோபால்

``இது முழுமையாக மனிதர்களுக்கு மாற்றாக இருக்குமா?"

``இப்போது நாங்கள் உருவாக்கியுள்ள ரோபோ, இன்னும் வருங்காலத்தில் அதில் செய்யப்போகும் மாற்றங்கள், நிச்சயமாக மனிதன் சாக்கடைக் குழிக்குள் இறங்குவதை நிறுத்தும்நிலையை உருவாக்கும். பின் மனிதனுக்குப் பதிலாக இந்த ரோபோ மட்டுமே இறங்கி வேலைசெய்யும். தோண்டியெடுக்கப்பட்ட கழிவுகளைக் கையாளுவதில் நிதிநிலைத் தட்டுப்பாடு உள்ளது. இப்போதைக்கு ஒரு சில தேவைகளை மட்டுமே பூர்த்திசெய்ய முடிந்துள்ளது. இப்போது தொழில்நுட்ப ஆராய்ச்சியில் முதல் நான்கு நிலைகளுக்குள்தான் இது உள்ளது. அரசின் குறிப்பிட்ட வரைமுறைகளுக்குள் வந்தபின்பு அரசிடம் நிதியுதவி கோருவோம். அப்போது இதை இன்னும் மேம்படுத்துவோம். "

``SEPoy-யின் செயல்பாட்டை விளக்கமுடியுமா?"

``இந்த ரோபோ உறைந்துபோன கழிவுகளுக்குள் சென்று, அந்தக் கழிவை உடைக்கும் சக்திகொண்டது. துடுப்பு போன்ற கட்டர்கள் மூன்று திசைகளிலும் செயல்படும். கழிவுநீர்த் தொட்டியை இரண்டு கட்டங்களாக சுத்தம்செய்யும். முதல் கட்டத்தில் தொட்டியின் வெளியிலிருந்து செயல்படும். இதில் மிஷின் மூலம் தொட்டியில் உள்ள கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகள் உடைக்கப்பட்டு உறிஞ்சப்படுகின்றன. இரண்டாவது கட்டத்தில்தான் மனிதனைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இந்த SEPoy இறக்கப்பட்டு மக்கிப்போன திடக்கழிவுகள் வெளியேற்றப்படும். ரோபோவை இறக்குவதற்கு முன் தொட்டியை தண்ணீரால் நிரப்பவேண்டியது அவசியம். பின் உடைக்கப்பட்ட திடக்கழிவுகள் உறிஞ்சி எடுக்கப்படுகின்றன. தற்போது துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களே இதை இயக்கலாம். அந்த அளவுக்கு இது எளிமையானதுதான்.

``இதை அரசாங்கம் மட்டுமன்றி, தனியாரும்... அதாவது மருத்துவமனைகள், உணவகங்கள், அப்பார்ட்மென்ட்கள் பயன்படுத்தும் அளவுக்கு அதன் விலை இருக்குமா?"

SEPoy Robot
SEPoy Robot

``இதற்கான விலையை இப்போதே இதுதான் எனத் தெளிவாகச் சொல்லமுடியாது. எனவே, விலையை இன்னும் நிர்ணயிக்கவில்லை. ஆனால், பேரூராட்சி, நகராட்சி போன்ற நிர்வாக அமைப்புகள் வாங்கக்கூடிய விலையில்தான் இது இருக்கும்."

``இந்த ரோபோ தயாரிப்பில் உங்களுடன் உறுதுணையாக இருந்த மாணவர்கள் பற்றி கூறுங்களேன்?"

``திவானுஷ் குமார் , சந்தோஷ் ரவிச்சந்திரன், D. ஸ்ரீகாந்த் மற்றும் அமன் அகர்வால்... இவர்கள்தான் எங்கள் குழுவினர். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களது அர்ப்பணிப்பை இந்தத் தயாரிப்புக்காக வழங்கியுள்ளனர்."