Published:Updated:

``கோவை இப்போது நிஜமாகவே ஸ்மார்ட்!" - டிராஃபிக்கைக் குறைக்கும் தொழில்நுட்பம்

இந்தியாவில் சாலை விபத்துகளால் ஒவ்வொரு மூன்று நிமிடத்துக்கும், ஒருவர் பலியாகிக் கொண்டிருக்கிறார். ஆண்டுக்கு 8 லட்சம் பேர் சாலை விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர்.

ஸ்மார்ட் கேமராக்கள்
ஸ்மார்ட் கேமராக்கள்

மக்கள் தொகைக்கு ஏற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனாலேயே, போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரித்து, சாலை விபத்துகள் மக்களின் உயிர்களைப் பறித்துக்கொண்டிருக்கின்றன. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாதது, சிக்னலில் நிற்காதது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்குவது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவது, அதிக வேகத்தில் இயக்குவது என்று பெரும்பாலான விபத்துகளுக்குப் போக்குவரத்து விதிமீறல்களே முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

போக்குவரத்து விதிமீறல்
போக்குவரத்து விதிமீறல்

இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களைத் தடுப்பதற்காக கோவையில் காவல்துறையுடன் `உயிர்' என்ற அமைப்பு கைகோத்துள்ளது. போக்குவரத்து விதிகள் தொடர்பாக விழிப்புணர்வில் தொடங்கி, விதிமீறல்களைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்று பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Vikatan

அதன்படி, நாட்டிலேயே முதல்முறையாக சிக்னல்களில் ஸ்மார்ட் கேமராக்களைப் பொருத்தியுள்ளனர். இந்த ஸ்மார்ட் கேமராக்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ, சிக்னலில் நிற்காமல் சென்றாலோ, சிக்னலில் எல்லைக் கோட்டைத் தாண்டி நின்றாலோ அந்த வாகனங்களை நம்பர் பிளேட்டுடன் படம் பிடித்துவிடும். இதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள சாஃப்ட்வேரில் வாகனத்தின் உரிமையாளர் பெயர், முகவரி வந்துவிடும்.

போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் கேமராக்கள்
போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் கேமராக்கள்

இதையடுத்து, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு, அபராதத்துக்கான சலான் வீட்டுக்கே அனுப்பப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, அவிநாசி சாலையில் ஐந்து சிக்னல்களில் இந்த கேமராக்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.

உயிர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜசேகரன் பேசும்போது "உலக அளவில் அதிக விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. சீனா பல விஷயங்களில் நம்மை விட முன்னேற்றத்தில் உள்ளது. ஆனால், நாம் சாலை விபத்தில் சீனாவையும் முந்திவிட்டோம். புள்ளி விவரங்கள் படி, கடந்த ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். 8 லட்சம் பேர் சாலை விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மூன்று நிமிடத்துக்கும் சாலை விபத்துகளில் ஓர் இந்தியர் பலியாகிக் கொண்டிருக்கிறார்.

டாக்டர் ராஜசேகரன்
டாக்டர் ராஜசேகரன்

இந்த விபத்துகளால், பலர் பலத்த காயமடைந்து நிரந்தரமாகவே முடங்கி விடுகின்றனர். ஒரு மர்ம காய்ச்சலால் இரண்டு பேர் பலியானாலே அது தலைப்புச் செய்தியாகிவிடுகிறது. ஆனால், காலரா, டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்ற பல நோய்களினால் மொத்தமாக ஏற்படும் உயிரிழப்புகளைவிட ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

யாரோ ஒருவர் செய்யும் தவறுகளால், 60 சதவிகிதம் பேர் (1,000 விபத்துகளில்) பாதிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்தியாவில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதியாக தமிழகம் இருக்கிறது. நம் நாட்டில், தீர்வு காணப்பட வேண்டிய தலையாய பிரச்னை சாலை விபத்துகள்தாம். அடுத்தவர்கள் மீது குற்றம் சொல்வதைவிட இதற்குத் தீர்வு காண எங்களால் முடிந்த முயற்சிகளை எடுக்கத்தான் உயிர் அமைப்பைத் தொடங்கியுள்ளோம்.

போக்குவரத்து விதிமீறல்
போக்குவரத்து விதிமீறல்

இதன் பலனாக, சாலை விபத்துகளும் குறைந்துள்ளன. மக்கள் ஸ்மார்டாக நடந்து கொள்ளும்போதுதான், நம் ஊரும் ஸ்மார்ட் சிட்டியாக மாறும்" என்கிறார். போக்குவரத்து விதிமீறல்களை ஒழுங்குபடுத்துவதற்காகவே, கோவையில் அனலாக் மற்றும் டிஜிட்டல் லேப்ஸ் (Analog & Digital labs) என்ற பெயரில் ஒரு இளைஞர் படை பணியாற்றி வருகின்றனர்.

அனலாக் மற்றும் டிஜிட்டல் லேப்ஸின் நிர்வாக இயக்குநர் ஷ்யாம் ஜூட், "நான் இன்ஜினீயரிங் பட்டதாரி. படித்துமுடித்துவிட்டு வெளியில் வந்து பணிக்குச் சென்றபோது, அவர்களின் தேவைக்கும், எங்களின் படிப்புக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. அதைச் சரிசெய்து, இன்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்த நிறுவனத்தை 2009-ம் ஆண்டு தொடங்கினேன்.

ஷ்யாம் ஜூட்
ஷ்யாம் ஜூட்
படம் ரா.பிரித்திவ்

முதலில் பயிற்சி மட்டும்தான் அளித்துவந்தோம். ஒருமுறை, காந்திபுரம் ஜி.பி சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது, அதிக நேரம் எடுத்தது. போலீஸார் சிக்னலை நிறுத்தி வைத்திருந்தனர். அதற்கான தீர்வு என்னிடம் இருந்தது. அடுத்தநாள் போலீஸ் கமிஷனரைச் சந்தித்து எனது ஐடியாவைச் சொன்னேன்.

உக்கடம் அருகே இரண்டு சிக்னலைக் கொடுத்தனர். அதில், சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தினோம். அங்குதான் எங்களின் முதல் பணி தொடங்கியது. சாலை முழுவதும் ஆய்வு செய்தோம். எங்கு வேகத்தடை வைக்க வேண்டும்?, எங்கு பேரிகார்டுகள் வைக்க வேண்டும்? என்பதையெல்லாம் ஆய்வு செய்தோம். க்ரீன் காரிடர் (குறிப்பிட்ட வேகத்தில் தொடர்ந்து பயணித்தல்) என்ற விஷயத்தைச் செயல்படுத்தினோம். அதன்படி, கோவை உப்பிலிபாளையம் சிக்னலிலிருந்து, விமான நிலையத்துக்கு 18 நிமிடங்களில் சென்றுவிடலாம்.

சிக்னல்
சிக்னல்
படம் ரா.பிரித்திவ்

கோவை மட்டுமல்ல, சென்னை, மதுரை, அகமதாபாத், ஹைதராபாத், திருப்பதி என்று நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் போக்குவரத்து விதிகளை ஒழுங்குபடுத்துவதற்காக பணியாற்றி வருகிறோம். ஸ்பாட் ஃபைன் மெஷினையும், சென்னையில் நாங்கள்தான் முதலில் அறிமுகப்படுத்தினோம்.

ஹைதராபாத்தில், எல்லைக் கோட்டில், சிக்னல் விளக்குகளை அறிமுகப்படுத்தியது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை கோவையிலும் அறிமுகப்படுத்த உள்ளோம். அதேபோல, கோவையில் மீண்டும் க்ரீன் காரிடரை கொண்டு வர உள்ளோம். உலகத்தில், இதுபோன்று பல நிறுவனங்கள் இருந்தாலும், நம் போக்குவரத்துக்கு ஏற்ற தொழில்நுட்பம் அவர்களிடம் இல்லை. இதற்காக, இந்தியாவில் இயங்கி வரும் வெகு சில நிறுவனங்களில் நாங்களும் ஒன்று.

ஹைதராபாத் எல்லைக் கோட்டில் சிக்னல் லைட்.
ஹைதராபாத் எல்லைக் கோட்டில் சிக்னல் லைட்.

அடுத்தகட்டமாக சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குதல் போன்றவற்றைக் கண்டறியும் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்த உள்ளோம். ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக என்று மட்டுமல்லாமல், போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து விதத்திலும் உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்" என்று முடித்தார்.

இந்த டிஜிட்டல் அணியின் மற்றொரு நபரான ரவீந்திரன், "முழுக்க முழுக்க போக்குவரத்துக்கான சாஃப்ட்வேரை உருவாக்குவதுதான் எங்கள் பணி. முதலில் சென்னையில்தான் இந்தத் தொழில்நுட்பத்தைத் தொடங்குவதாக இருந்தது. ஆனால், அதற்கு முன்பே கோவையில் தொடங்குவதற்கான வாய்ப்பு உயிர் அமைப்பு மூலமாகக் கிடைத்தது. கோவைக்குப் பிறகுதான் சென்னையிலும், இந்த ஸ்மார்ட் கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அனலாக் மற்றும் டிஜிட்டல் லேப்ஸ்
அனலாக் மற்றும் டிஜிட்டல் லேப்ஸ்
படம் ரா.பிரித்திவ்

ஆனால், அங்கு பொருள் செலவு அதிகம். தற்போது, ஏ.எம்.பி.ஆர் கேமராவைத்தான் கோவையிலும் இன்ஸ்டால் செய்துள்ளோம். இது மிகவும் காஸ்ட்லி. எனவே, நாங்கள் இதற்காகப் பிரத்யேகமாக ஒரு கேமராவை உருவாக்கியுள்ளோம். ஒரு ஏ.எம்.பி.ஆர் கேமரா வாங்கும் செலவில் இதில் மூன்று கேமராக்களை உருவாக்கிவிடலாம். மேலும், அது ஏ.எம்.பி.ஆர் கேமராக்களைவிட, அட்வான்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளில் அதிகமுறை விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை பட்டியலெடுத்து, அதில் வரிசைப்படி சலான் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். மேலும், கோவையில், போலீஸாருக்கு உதவும் வகையில், பாடி கேமராக்களை கொண்டுவந்துள்ளோம். ஆம்புலன்ஸ் வரும்போது ஆட்டோமெடிக்காக, க்ரீன் சிக்னல் வரும் தொழில்நுட்பத்தையும் சோதனை செய்து பார்த்துவிட்டோம்.

சிக்னல்
சிக்னல்

விரைவில் அந்தத் தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்த உள்ளோம். கோவையைத் தொடர்ந்து, சேலத்திலும் ஸ்மார்ட் கேமராக்கள் அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என்றார்.

போக்குவரத்து போலீஸ் சிலரிடம் பேசினோம், "நிறைய விபத்துகளும், விதிமீறல்களும் இதனால் குறைந்திருக்கின்றன. சிலர், 'இந்த கேமராதான் எங்களைப் படம் எடுத்து.. வீட்டுக்கு அபராதம் அனுப்புமா?' என்று கேட்கின்றனர். இந்தத் தொழில்நுட்பம் குறித்து மேலும் விழிப்புணர்வு செய்தால், விதிமீறல்கள் மற்றும் விபத்துகளை எளிதில் தடுக்க முடியும்" என்றனர்.

ஸ்மார்ட் சிட்டி என்பது இப்படித்தானே இருக்க வேண்டும்?