Published:Updated:

ஏர்டெல்லா, ஜியோவா... பிராட்பேண்ட் போட்டியில் தற்போதைய கில்லி யார்?

ஹ. ஜாபர் சேட்

தற்போது இருக்கும் ஏர்டெல்லின் வி-ஃபைபர் சேவையை விட இது சிறந்ததா?

Jio
Jio

ஜியோவின் ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவையை செப்டம்பர் 5 முதல் மக்கள் பெறலாம் என நேற்று அறிவித்தார் முகேஷ் அம்பானி. பிற ஜியோ சேவைகளைப் போலவே இதுவும் குறைந்த விலையில் ஏராளமான சேவைகளை வழங்குகிறது. இருப்பினும் தற்போது இருக்கும் ஏர்டெல்லின் வி-ஃபைபர் சேவையை விட இது சிறந்ததா?

ஜிகாஃபைபர் திட்டங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அதன் சாராம்சம் என்ன என்பது நேற்றைய நிகழ்வில் தெரியவந்தது. இந்தப் போட்டியைக் கணித்து தற்போது ஏர்டெல் தனது வி-ஃபைபர் சேவையில் சலுகைகளை அதிகரித்து வருகிறது. எனவே, நீங்கள் தற்போது ஒரு பிராட்பேண்ட் சேவைக்கான தேடலில் இருக்கிறீர்கள் என்றால், வி-ஃபைபர் இந்த நேரத்தில் சரியான தேர்வாக இருக்கும்.

ஜியோ ஜிகாஃபைபரில் சந்தாதாரர்களுக்கு அடிப்படைத் திட்டத்தில் குறைந்தபட்ச வேகமான 100 Mbps கிடைக்கும். ஜியோ பல்வேறு திட்டங்களை குறைந்தபட்சம் 100 Mbps வேகத்தில் வழங்குவதாகவும் அதிகபட்சமாக இந்த வேகம் 1 Gbps வரை செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டது. அடிப்படை திட்டத்திற்கு 700 ரூபாய் செலவாகும் என்பதால் தானாகவே ஜியோ அதன் போட்டியாளர்களை விட ஒருபடி முன்னே சென்றுவிடுகிறது.

மறுபுறம் ஏர்டெல் வி-ஃபைபர் அதன் அடிப்படை விலையில் 40 Mbps வேகத்திலிருந்து தொடங்குகிறது. இதற்கு மாதத்திற்கு 799 ரூபாய் செலவாகும். 100 Mbps வேகத்தை பெற மாதத்திற்கு குறைந்தது ரூபாய் 1,100 செலவு செய்யவேண்டியது இருக்கும்.

Airtel Broadband
Airtel Broadband

பிராட்பேண்ட் சேவை ஜியோ ஃபைபரின் சந்தாவின் ஒரு பகுதிதான். ஜியோ ஃபைபர், டிஜிட்டல் டிவி மற்றும் இலவச லேண்ட்லைன் அழைப்பு சேவைகளையும் கொண்டுள்ளது. மூன்றாம் தரப்பு OTT ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் சந்தா கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. செட்-அப் பாக்ஸ் சந்தாதாரர் என்றால் ஆன்லைன் கேமிங் சந்தாவும் உங்களுக்கு கிடைக்கும்.

ஏர்டெலில் மூன்று மாத நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரேம், Zee5, ஏர்டெல் டிவி பிரீமியம் ஆகியவை சந்தா உடன் வழங்கப்படுகிறது. 6 மாதம் வரை மீதமுள்ள டேட்டாவை அடுத்தடுத்த மாதங்களில் பயன்படுத்தக்கூடிய வசதியும் ஏர்டெலில் உள்ளது. ஆனால் இது பேசிக் சந்தாக்களில் இருக்காது.

மொத்தமாகச் சொல்லப்போனால் கூடுதல் வசதிகளுடன் ஜியோ, பிராட்பேண்ட் களத்திலும் ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளுவதற்கான வாய்ப்பு அதிகம்.