`காபிகேட் எல்லாம் பேசக் கூடாது!' - ரியல்மீயைச் சீண்டும் ஷாவ்மி; குவியும் விமர்சனங்கள்

இதுபோன்ற மோதல்கள் அவ்வப்போது நடக்கும் என்றாலும், இந்த முறை மோதல் ஷாவ்மி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயினால்தான் தொடங்கப்பட்டது
இந்தியாவின் மொபைல் சந்தையில் ஷாவ்மி நிறுவனத்திற்துக்கென பிரேத்யேக இடம் உள்ளது. அதுவும் முக்கியமாக பட்ஜெட் செக்மென்ட்டில். இந்நிறுவனம் சமீபத்தில்தான் தனது துணை நிறுவனமான போக்கோ நிறுவனத்தைத் தனி நிறுவனமாக அறிவித்தது. இந்நிலையில் கடந்த வாரம் ஷாவ்மியின் நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் ரியல்மீ நிறுவனத்தை `காபிகேட்' என மறைமுகமாக அழைத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரியல்மீ நிறுவனத்தின் CEO மாதவ் சேத் ஒரு ட்வீட் ஒன்றைச் செவ்வாய்க்கிழமை அன்று பதிவிட்டிருந்தார். அதில், "வெற்றிகரமாக இயங்கும் தனித்துவமான நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருபோதும் இப்படி நடந்துகொள்ள மாட்டார். தங்களது போட்டியாளர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைகொள்வது இயல்புதான். ஆனால், அடிப்படை கண்ணியம் மற்றும் நெறிமுறைகளை ஒருவர் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.
இதுபோன்ற மோதல்கள் அவ்வப்போது நடக்கும் என்றாலும், இந்த முறை மோதல் ஷாவ்மி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயினால்தான் தொடங்கப்பட்டது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு காபிகேட் நிறுவனம் எங்கள் நிறுவனத்தை ஒப்பிட்டு விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. இந்நிறுவனம் தனது விளம்பரத்தை வெளியிட்டவுடன் சிலர் எங்களைக் குற்றம் சொல்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் விளம்பரங்களை மக்களிடையே புகுத்தத்தான் பார்க்கின்றனர். ஆனால், விளம்பரம் செய்வதில் ஷாவ்மி நிறுவனம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஏனெனில், எங்களது தயாரிப்புகள் பற்றி நாங்கள் வெளிப்படையாக உள்ளோம். மேலும், இணைய வணிகத்தைப் பற்றி பத்திரிகையாளரிடம் பேச மகிழ்ச்சியாக உள்ளேன்" என்றார்.
ஷாவ்மி நிறுவனத்தின் துணை நிறுவனமான போக்கோவின் இந்திய இயக்குநரும் தனது ட்விட்டரில் காணொளி ஒன்றை வெளியிட்டு தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இதில் மிஸ்டர் பீன் தேர்வில் காப்பியடிக்கும் காட்சியைப் பதிவிட்டு, "எங்கள் நண்பர்களுக்கு நாங்கள் இதைக் கூற விரும்புகிறோம். அடுத்தவர்களை நகலெடுப்பது உங்களை இந்தத் தூரம் வரைதான் எடுத்துச் செல்லும்" என்று பதிவிட்டார்.
இந்தியாவில் தனக்கென மிகப்பெரிய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஷாவ்மி நிறுவனம் இதுமாதிரியான ட்விட்டர் மோதல்களில் ஈடுபடுவது அவசியம்தானா? ஆரம்பக்காலங்களில் ஷாவ்மி நிறுவனமும் இப்படியான பல விமர்சனங்களை சந்திக்கத்தான் செய்தது. எல்லா துறையிலுமே ஆரோக்கியமான போட்டி இருக்கலாம். ஆனால், இது அதன் பெயரில் எல்லை மீறுவதாகவே இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.