Published:Updated:

`இதை மட்டும் வால்பேப்பராக வைக்காதீர்கள்!' - போன்களை காவு வாங்கும் `புகைப்பட’ பின்னணி

போன்களை காவு வாங்கும் புகைப்படப் பின்னணி
போன்களை காவு வாங்கும் புகைப்படப் பின்னணி

சமீபகாலமாக இந்தப் புகைப்படம் இணையத்தில் அனைவரிடமும் வலம் வந்த வண்ணம் உள்ளது. இதைத் தெரியாமல் பயன்படுத்தி பிரச்னையில் சிக்கிக்கொண்டவர்கள் பலர்.

சமீபத்தில் இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதை வால்பேப்பராக செட் செய்தால் சில ஆண்ட்ராய்டு போன்கள் கிராஷ் ஆகின்றனவாம். இயற்கை எழில் கொஞ்சும் அந்த வால்பேப்பரைப் பயன்படுத்தினால் முதலில் சாம்சங் போன்கள் செயலிழந்துவிடுவதாக 'Ice universe' என்ற தொழில்நுட்பச் செய்திகளை வழங்கும் பக்கம் ட்விட்டரில் பதிவிட்டது. ஆனால், இதே பிரச்னை மற்ற ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இருப்பது தெரியவந்துள்ளது. இப்படி போன் செயலிழந்து போவதற்கு முக்கியக் காரணம் அந்தப் புகைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் color profile தான். இந்தப் புகைப்படம் கூகுளின் Skia RGB ப்ரோஃபைலைப் பயன்படுத்துகிறது.

இதுபற்றி 9to5Google என்ற பிரபல இணையதளத்தைச் சேர்ந்த டைய்லான் ரவுசல் கூறுகையில் "இந்த வால்பேப்பரானது ஆண்ட்ராய்டு 11-யைப் பயன்படுத்தும் போன்களில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இவற்றில் தானாகவே இந்தப் புகைப்படத்தின் color profile sRGB (Standard Red Green Blue) வடிவத்திற்கு மாற்றப்பட்டுவிடுகின்றன. ஆண்ட்ராய்டு 10 மற்றும் அதற்குக் கீழான ஆண்ட்ராய்டு வெர்ஷன்களைப் பயன்படுத்தும் போன்கள் இதைச் செய்வது இல்லை. இதனால்தான் அவை அந்தப் புகைப்படத்தை லோட் செய்ய முடியாமல் கிராஷ் ஆகி போன்கள் செயலிழந்து போகின்றன" என்றார்.

ஆண்ட்ராய்டு 11 பீட்டா வெர்ஷனே இந்த மாதம்தான் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பிரச்னைகள் இருந்தும், இந்த வால்பேப்பரைக் கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டும் என நீங்கள் ஆசைப்பட்டால் அந்தப் புகைப்படத்தை sRGB கலர் ப்ரோஃபைலுக்கு மாற்றி விட்டுப் பயன்படுத்தலாம். அப்படிச் செய்யாமல் இதை வால்பேப்பராக்கினால் உங்கள் போனும் கிராஷ் ஆகும். பின்பு மொத்தமாக போனை ரீசெட்தான் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் முன்பிருந்த அனைத்துத் தகவல்களும் அழிந்து விடும்.

டார்க் தீம், ஸ்மார்ட் ரிப்ளை, ஃபோகஸ் மோடு... எப்படி இருக்கு `ஆண்ட்ராய்டு 10'? #HandsOn

சமீபகாலமாக இந்தப் புகைப்படம் இணையத்தில் அனைவரிடமும் வலம் வந்த வண்ணம் உள்ளது. இதைத் தெரியாமல் பயன்படுத்தி பிரச்னையில் சிக்கிக்கொண்டவர்கள் பலர். சிலர் 'அதெப்படி ஒரு போட்டோவால் போன் கிராஷ் ஆகும்?' என முயற்சி செய்து அவதிப்பட்டிருக்கிறார்கள். அதனால் அலெர்ட்டாக இருப்பது நல்லது!

அடுத்த கட்டுரைக்கு