Published:Updated:

பட்ஜெட் விலை, வேற லெவல் பேட்டரி... MI சூப்பர்பேஸ் வயர்லெஸ் ஹெட்போன்ஸ் வாங்கலாமா? #HandsOnReview

MI Superbass Wireless headphones

MI Superbass Wireless Headphones

எப்படி இருக்கிறது ஷியோமியின் நியூ என்ட்ரி?

கடந்த மாதம் ஷியோமி நிறுவனத்துக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்திய கேட்ஜெட் சந்தையில் ஐந்தாவது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது அந்த நிறுவனம். இந்திய சந்தையில் இந்த குறுகிய காலத்தில் ஷியோமி அடைத்திருக்கும் இடம் யாரும் நினைத்துப்பார்க்க முடியாதது. இதற்கு முக்கிய காரணம் மொபைல்கள் மட்டுமல்ல, மற்ற சிறிய கேட்ஜெட்களும்தான்.

`அந்த 505 எரர்தான் இதற்கான விதை!' - ரெட்மி K20 சீரிஸை வெளியிட்ட ஷியோமி

அப்படி மாதாமாதம் புதிய கேட்ஜெட் ஏதேனும் வெளியிட்டு வரும் ஷியோமியின் சென்ற மாத என்ட்ரிதான் MI SuperBass Wireless Headphones. 1,799 ரூபாய் என்ற பட்ஜெட் விலையில் வெளிவந்திருக்கும் இந்த ஹெட்போன்ஸ் நம்மை கவர்கிறதா ? சுமார் ஒரு மாத பயன்பாட்டுக்குப் பிறகான எங்களது கருத்து இதோ!

வடிவமைப்பு

டிசைனில் எப்போதும் போல அசத்தியிருக்கிறது ஷியோமி. பட்ஜெட் விலை என்றாலும் matte black finish இந்த ஹெட்போன்ஸுக்கு நல்ல பிரீமியம் லுக் கொடுக்கிறது. பில்ட் குவாலிட்டியும் நன்றாகவே இருப்பதால் இது நீண்டகாலம் நிலைத்து நிற்கும் என நம்பலாம். இதுமட்டுமல்லாமல் காதுகளிலும் எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல் அழகாக அமர்கிறது. சற்றே பெரிய காதுகள் உடையவர்கள் மட்டும் ஒருமுறை ஏதேனும் ஷோரூமில் அணிந்துபார்த்துவிட்டு வாங்குவது நல்லது. சிவப்பு, கோல்ட் என இரண்டு நிறங்களில் இதை வெளியிட்டுள்ளது ஷியோமி.

ஆடியோ தரம்

MI Superbass Wireless Headphones Audio Quality
MI Superbass Wireless Headphones Audio Quality

'சூப்பர்பேஸ் ஹெட்போன்ஸ்' என்றுதான் இதை ஷியோமி பிராண்டிங் செய்கிறது. ஆனால், 'வேற லெவல்' எனச் சொல்லும் அளவுக்கு பேஸ் இதில் இல்லை. ஆனால், விலைக்கேற்ற ஆடியோ தரம் இருக்கிறது. அவ்வப்போது பாடல்கள், ஸ்ட்ரீமிங், கேமிங் என இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு இந்த தரம் போதுமானதாகவே இருக்கும். குறைசொல்லும் அளவுக்கு எதுவும் இல்லையென்றாலும் ஆஹா ஓஹோ என்று சொல்லவும் இதில் எதுவுமில்லை.

வசதிகள்

MI Superbass wireless headphones buttons
MI Superbass wireless headphones buttons

மூன்று வசதியான பட்டன்கள் இதில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பவர் பட்டனை வெகுநேரம் அழுத்துவதன்மூலம் ஆன்/ஆஃப் செய்ய முடியும். அதே இரண்டு முறை தொடர்ந்து அழுத்தினால் கூகுள் அசிஸ்டென்ட் ஓப்பன் ஆகும். வால்யூம் பட்டன்களை வெகுநேரம் அழுத்துவதன்மூலம் முந்தைய மற்றும் அடுத்த பாடல்களுக்குச் செல்ல முடியும். பட்டன்கள் இப்படி இருப்பதால் போனை பாக்கெட்டிலிருந்து எடுக்க வேண்டிய அவசியம் பெரிதாக வராது. மேலும், தேவைப்படும்போது ப்ளூடூத்துக்குப் பதிலாக வயர் மூலம் கனெக்ட் செய்யும் வசதியும் இதில் இருக்கிறது.

பேட்டரி

400 mAh பேட்டரியுடன் வருகிறது இது. இதனால் 80% வால்யூமில் 20 மணிநேரம் வரை ஒரு சார்ஜில் தாக்குப்பிடிக்கும் என்கிறது ஷியோமி. எங்கள் பயன்பாட்டிலும் பேட்டரி பர்ஃபாமென்ஸ் நன்றாகவே இருந்தது. 20 மணிநேரம் இல்லையென்றாலும் 15 மணிநேரங்களுக்கு மேல் இதன் பேட்டரி நிச்சயம் தாக்குப்பிடிக்கும். இதனால் நெடுந்தூரப்பயணங்களில் எந்த ஒரு கவலையுமின்றி இவற்றை எடுத்துச் செல்லலாம். மைக்ரோ-USB சார்ஜிங்தான் என்பதால் பெரும்பாலான மொபைல் சார்ஜர்கள் கொண்டே இவற்றை சார்ஜ் செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

மொத்தமாக இதன் ப்ளஸ், மைனஸ் என்னவென்று பார்ப்போம்,

ப்ளஸ்

  • நீண்டநேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரி

  • ப்ரீமியம் லுக்

  • பயனுள்ள பட்டன்கள்

மைனஸ்

  • ஓகேவான ஆடியோ தரம்

  • பில்ட் சிறப்பாக இருந்தாலும் எளிதாகப் பைகளில் வைத்து எடுத்துச்செல்லும் அளவுக்கு போர்ட்டபிளாக இவை இல்லை.

சந்தையில் இருக்கும் மாற்றுகள்!

Boat Rockers 400
Boat Rockers 400

இந்த விலையில் மிகக்குறைந்த அளவில்தான் தரமான வயர்லெஸ் ஹெட்போன்கள் இருக்கின்றன. அதில் 'போட்' நிறுவனத்தின் Boat rockers 400 இதன் முக்கிய போட்டியாளராகப் பார்க்கலாம். தற்போது 1,399 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது இது. பேட்டரி முக்கியமில்லை தரமான ஆடியோ தரமும் போர்டபிளிட்டியும்தான் முக்கியம் என நினைப்பவர்கள் இதைக் கருத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

Vikatan

இறுதிக் கருத்து

எப்போதும் போல் குறைந்த விலை, நிறைய வசதிகள் என்ற வியூகத்துடன் இந்த ஹெட்போன்ஸை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷியோமி. டிஸ்டிங்க்ஷன் பெற வேண்டிய இது ஆடியோ தரத்தில் சறுக்கியதால் ஃபர்ஸ்ட் கிளாஸுடன் தேர்ச்சி பெறுகிறது.
அடுத்த கட்டுரைக்கு