வீடுகளில் தனித்து விடப்பட்டிருப்பவர்களுக்கும் சரி, பேச்சுத் துணைக்கும் சரி அலெக்ஸா ஒரு துணை என்றே கூற வேண்டும். `ஹே அலெக்ஸா’ ஒரு பாட்டுப் பாடு, கதை சொல்லு, இன்றைய நிலவரம் என்ன சொல்லு என அலெக்ஸாவை வெவ்வேறு விதங்களில் பலரும் உபயோகித்து வருகின்றனர்.

ஆனால், `அலெக்ஸாவை ஹாலில் வைப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள், உங்கள் வீட்டின் படுக்கையறையிலோ, குளியலறையிலோ வைத்துப் பயன்படுத்தாதீர்கள்' என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பாடுவது, செய்தி வாசிப்பது, நேரத்துக்கு அலாரம் ஒலித்து எழுப்புவது எனப் பல வேலைகளைச் செய்யும் அலெக்ஸா, உங்களின் அனுமதியின்றி அந்தரங்க உரையாடல்களையும் திருடுகிறதாம்.
இது குறித்து ஃபாக்ஸ் நியூஸில் வெளிவந்த அறிக்கையில், `அலெக்ஸாவை வாங்கிய அனைவரும், அது அடிக்கடி உங்களின் உரையாடல்களைப் பதிவு செய்கிறது என்ற உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே, எந்த இடத்தில் வைத்தால் உங்களுக்கு வசதியாக இருக்குமோ, அந்த இடத்தில் வைப்பதன் மூலம் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனமும் தங்களின் ஊழியர்களால் சில தனிப்பட்ட உரையாடல்களைக் கேட்க முடியும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்து அமேசான் தரப்பு கூறுகையில், ``எதிர்காலத்தில் இந்தச் சாதனத்தைப் புதுப்பிக்க ஊழியர்கள் நாளொன்றுக்கு 1,000 ஆடியோக்கள் வரை கேட்டு மதிப்பாய்வு செய்ய முடியும். குறிப்பிட்ட ஊழியர்கள் மட்டுமே உரையாடல் களைக் கேட்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவைப்படாத பட்சத்தில், அலெக்ஸா ஆப்பை மொபைலில் ஓபன் செய்து, செட்டிங்ஸில் `மேனேஜ் அலெக்ஸா டேட்டா’-வை க்ளிக் செய்து, எவ்வளவு நேரத்துக்கு ரெக்கார்டிங் செய்ய முடியும் என்பதில், `ரெக்கார்டிங் செய்யத் தேவையில்லை' எனக் கொடுத்துவிட்டால், அதன் பின் அலெக்ஸாவால் உரையாடல்களைப் பதிவு முடியாது’’ என்று தெரிவித்துள்ளது.
வீடுகளில் அலெக்ஸாவை உபயோகிப்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது!