Published:Updated:

எலக்ட்ரிக் டூத் பிரஷ், உள்ளங்கையில் அடங்கும் ஸ்பீக்கர்....ஷாவ்மியின் புதிய தயாரிப்புகள் ரெடி!

எலக்ட்ரிக் டூத் பிரஷ்
எலக்ட்ரிக் டூத் பிரஷ்

மொபைல் மட்டும் அல்லாமல் டி.வி, வாட்ச் என தயாரித்து வந்த நிலையில் சமீபத்தில் ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒன்றையும் எலக்ட்ரிக் டூத் பிரஷ் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது ஷாவ்மி நிறுவனம்.

Mi Electric Tooth Brush T300

உலக சந்தையைத் தொடர்ந்து, இந்தியச் சந்தையிலும் எலக்ட்ரிக் டூத் பிரஷை "Mi Electric Tooth Brush T300" என்ற பெயரில் ஷாவ்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. MI Crowdfunding திட்டத்தின் கீழ் இந்த பிரஷை தயாரித்துள்ள ஷாவ்மி நிறுவனம், அதன் விலையை 1,299 ரூபாய் என்று நிர்ணயம் செய்துள்ளது. இந்த பிரஷ் நேரடியாக கடைகளில் விற்பனைக்கு வராது. 1000 யூனிட்களுக்கு நிதி கிடைத்துவிட்டால் மார்ச் 10-ம் தேதி விநியோகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக சந்தையில் விற்கப்படும் பிரஷில் இருக்கும் ஸ்மார்ட் அம்சங்களான ஆப் வசதியும் போனோடு இணைக்கும் வசதி இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த எலக்ட்ரிக் பிரஷில் இல்லாவிட்டாலும் விலையும் டிசைனும் மற்ற அம்சங்களும் நம்மைக் கவர்கின்றன.

Mi Electric Tooth Brush T300
Mi Electric Tooth Brush T300

5 Watt USB C-type சார்ஜருடன் வரும் இந்த பிரஷை ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 நாள்களுக்குப் பயன்படுத்த முடியும். 'மினிமலிஸ்ட்' டிசைனில் வெள்ளை நிறத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களிடையே குழப்பம் வராமலிருக்க மூன்று நிறங்களில் ரிங் பொருத்தி வருகிறது. இக்கருவியிலிருந்து பிரஷை மட்டும் தனியாகக் கழற்றவும் முடியும். நான்கு மாதங்களுக்கு பிரஷ் பகுதியைப் பயன்படுத்தலாம். புதிதாக பிரஷை மட்டும் Mi.com இணையதளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். இந்த பிரஷ் 'IPX-7 Water resistant' என்பதால் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இக்கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் நிமிடத்திற்கு 30,000 அதிர்வுகளை ஏற்படுத்தும் திறன் கொண்டது. இரண்டு மோடுகளில் இதைப் பயன்படுத்த இயலும். ஒன்று டூயல் ப்ரோ பிரஷ்; மற்றொன்று ஈக்யூ க்ளீன் ஆட்டோ டைமர். இரண்டாவது மோடில் ஒவ்வொரு இரண்டு நிமிட மோட்டார் ஓடியபின் 30 நொடிகள் தானாகவே நிற்கும். அந்த நேரத்தில் நாம் பல் துலக்கும் திசையை மாற்றி வைத்துக்கொள்ளலாம். உற்பத்தியில் ஏற்படும் சேதங்களுக்கு ஒரு வருட உத்தரவாதத்தை(Warranty) வழங்குகிறது ஷாவ்மி.

சந்தையில் குவியும் போலி ஷாவ்மி தயாரிப்புகள்... ஒரிஜினலைக் கண்டுபிடிப்பது எப்படி?

Mi Outdoor Bluetooth Speaker (5W)

இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருந்தது ஷாவ்மி. உள்ளங்கை அளவில் இருக்கும் எடைகுறைந்த இந்த ஸ்பீக்கரின் விலை 1,399 ரூபாயாக நிர்ணயித்துள்ளது ஷாவ்மி.

இந்த ப்ளூடூத் ஸ்பீக்கரின் ஒரு பக்கத்தில் பவர் மற்றும் பிளே பட்டனையும் மறுபுறம் வால்யூம் பட்டன்களும் இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு பக்கங்களில் சார்ஜிங் போர்ட், AUX போர்ட் ஆகியவை இருக்கின்றன.

Mi Outdoor Bluetooth Speaker (5W)
Mi Outdoor Bluetooth Speaker (5W)

IPX 5 Water Resistant என்பதால் தண்ணீரால் பாதிப்புகள் ஏற்படாது. குளியலறையில் பாடல்கள் கேட்டு மகிழலாம். இந்த கைக்கடக்கமான ஸ்பீக்கர் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் இயங்கக்கூடியதாக உள்ளது. இதிலுள்ள மைக் மூலம் போன் பேசவும் முடியும். இந்த ஸ்பீக்கர் 2,000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதில் 20 மணி நேரம் வரை தொடர்ந்து பாடல்களை ப்ளே செய்யும்.

அடுத்த கட்டுரைக்கு