உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், ட்வீட்டரை வாங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஒப்புதல் தெரிவித்திருந்தது.
ஆனால், அதன் பிறகு எலான் மஸ்க் அதிலிருந்து பின்வாங்கினார். இதனால் ட்விட்டர் நிறுவனம் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம், அக்டோபர் 28-க்குள் (இன்று) ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்று கெடு விதித்தது. இது நடக்கவில்லை என்றால் எலான் மஸ்க் சட்டரீதியான வழக்கைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டது.
இதனிடையே ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தின் இறுதிப் பணிகளை இன்று முடிக்கப் போவதாக எலான் மஸ்க் தனது பங்குதாரர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், தனது ட்விட்டர் புரொபைலில் 'Chief Twit' என்றும் மாற்றியுள்ளார். இந்தச் சூழலில் நேற்று, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்திற்குச் சென்ற எலான் மஸ்க் கைக் கழுவப் பயன்படுத்தப்படும் தொட்டி (சிங்க்) ஒன்றை எடுத்துச் செல்லும் வீடியோவை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இது வைரலாகியதையடுத்து எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதாகத் தகவல்கள் கசிந்து வந்தன. இதை உறுதி செய்யும் விதமாக ட்விட்டர் முதலீட்டாளர்களில் ஒருவரான ரோஸ் கெர்பர், எலான் மஸ்க்கின் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகக் கூறினார்.
அதுமட்டுமின்றி முன்பே எதிர்பார்த்தபடி ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், ட்விட்டரின் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் போன்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க், "ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் எனது இந்த ஆர்வம் பணம் சம்பாதிப்பதில் இல்லை. மனிதகுலத்திற்கு உதவுவதற்காகவே சமூக ஊடகத்தளமான ட்விட்டரை வாங்கினேன்" என்று கூறியுள்ளார். தற்போது, இனி இந்தக் கவலையும் இல்லை நிம்மதியாக இருக்கலாம் என்பது போல 'the bird is freed' என்று ட்வீட்டரைக் குறிப்பிட்டு ட்வீட் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.