Published:Updated:

iOS டு MacOS... புதிய ஆப்பிள் ஓஎஸ் வெர்ஷன்களில் என்ன ஸ்பெஷல்?! #WWDC2020

கியூபர்டினோவில் இருக்கும் ஆப்பிளின் தலைமையகத்தில், மக்கள் நிறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கத்தில் நடக்கும் இந்த ஆப்பிள் டெவலப்பர் மாநாடு இந்த வருடம் கொரோனாவின் காரணமாக ஆன்லைன் ஈவென்ட்டாக நடந்துகொண்டிருக்கிறது.

டெக் உலகைப் பொறுத்தவரையில் இது புதிய வரவுகளுக்கான சீசன். பல மாற்றங்களும் முன்னெடுப்புகளும் அறிமுகப்படுத்தப்படும் நேரம் இது. இதில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுவது ஆப்பிளின் WWDC டெவலப்பர் மாநாடு. iOS டு MacOS... ஆப்பிள் சாதனங்களின் ஓஎஸ்களில் என்ன என்னவெல்லாம் மாறப்போகிறது, என்ன வசதிகள் புதிய வெர்ஷனில் இருக்கும் என்பதை அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்வு. ஐந்து நாள்கள் உலகமெங்கும் இருக்கும் ஆப் டெவலப்பர்கள் ஆப்பிள் நிறுவனத்துடன் கலந்துரையாடுவார்கள், புதிய மாற்றங்களுக்குத் தயாராவார்கள். ஆனால், இதன் முக்கிய பகுதி என்பது முதல் நாள் நடக்கும் அறிமுக விழாதான்.

Tim Cook  | WWDC 2020
Tim Cook | WWDC 2020
Brooks Kraft | Apple

ஆப்பிள் சாதனங்களில் வரப்போகும் புதிய அப்டேட்களை (மென்பொருள் அளவில்) உலகிற்கு முதல்முறையாக இதில் ஆப்பிள் காட்டும். கியூபர்டினோவில் இருக்கும் ஆப்பிளின் தலைமையகத்தில், மக்கள் நிறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கத்தில் நடக்கும் இந்த விழா இந்த வருடம் கொரோனாவின் காரணமாக ஆன்லைன் ஈவென்ட்டானது. டெக் விழாக்களிலேயே எப்போதும் ஆப்பிளின் விழாக்கள் தனித்துத் தெரியும், லைவ் ஈவென்ட்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை ஆப்பிள் ஈவென்ட்களை பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். லைவ் இல்லையென்று ஆகிவிட்டபோது என்ன செய்யப்போகிறார்கள் எனப் பார்த்தால் இந்த முறையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கத்தில் தொடங்கி ஒவ்வொரு அறிமுகத்திற்கும் ஒவ்வொரு இடம் என ஆப்பிள் தலைமையகத்தைச் சுற்றிக்காட்டுகிறார்கள். சரி விஷயத்திற்கு வருவோம். முதலில் ஐபோன் இயங்குதளமான iOS-ன் அடுத்த வெர்ஷனான iOS 14 அறிமுகப்படுத்தப்பட்டது.

iOS 14
Widgets முதல் சார் கீ வரை... iOS 14-ல் என்ன ஸ்பெஷல்
iOS 14
iOS 14
Apple

எப்போதும் போல பல வசதிகள் ஏற்கெனவே ஆண்ட்ராய்டில் இருப்பதுதான். "இதெல்லாம் நாங்க பார்த்துப் பல வருஷம் ஆச்சுப்பா" என ஆண்ட்ராய்டு ரசிகர்கள் கடந்துபோகும் சில வசதிகள்தான். ஹோம் ஸ்க்ரீனில் இனி ஆண்ட்ராய்டில் இருப்பது போல Widgets வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் ஹோம் ஸ்க்ரீன் வெறும் ஆப்களால் மட்டும் நிறைந்திருக்காது. வானிலை, ஃபிட்னஸ், டிஜிட்டல் வெல்பீயிங் போன்ற தேவையான தகவல்களையும் அங்கு வைத்துக்கொள்ள முடியும்.

Widgets
Widgets
Apple

'App Library' என்ற வசதியும் iOS-க்கு வருகிறது. ஆப்பின் செயல்பாட்டை வைத்து அவற்றை வகைப்படுத்தி வைத்திருக்கும் இந்த 'App Library'. அதிகப்படியான ஆப்கள் இருக்கும் பட்சத்தில் ஐபோன்களில் அவற்றைத் தேடுவது என்பது சற்றே சிரமமானதாகவே இருந்தது. அதற்கான தீர்வுதான் இந்த 'App Library' வசதி. 'Picture-in-picture' மோடும் iOS 14-க்கு வருகிறது. ப்ரைம், நெட்ஃபளிக்ஸ் போன்ற தளங்களில் வீடியோக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வெளியே வந்தால் வீடியோ ஒரு சிறிய விண்டோவில் ஃப்ளே ஆகிக்கொண்டே இருக்கும்.

App Library iOS 14
App Library iOS 14
Apple

ஆண்ட்ராய்டில் ஏற்கெனவே இருப்பதுதான். ஆனால், இதை Minimize செய்து வைக்கும் வசதியையும் ஆப்பிள் தரப்பில் கொடுத்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

iOS 12-ல் அறிமுகமான 'மீமோஜி' செம ஹிட். அப்படியே உங்கள் முக அசைவுகளுக்கு ஏற்றவாறு அசையும் இந்த கார்ட்டூன்களை வைத்து நம்மூரில் பாடல் வீடியோக்கள் கூட எடுத்திருக்கிறார்கள். இதில் சில முக்கிய அப்டேட்கள் வந்திருக்கின்றன. மென்பொருள் அளவில் இது இன்னும் மேம்பட்டிருக்கிறது. வயது, நிறம் போன்ற விஷயங்களில் இன்னும் அதிக வேரைட்டி இனி இருக்கும். வெட்கப்படுதல் போன்ற புதிய முக பாவனைகளையும் இனி மீமோஜியில் பார்க்கலாம். மாஸ்க்கும் சேர்த்திருக்கிறார்களாம்!

'மீமோஜி'
'மீமோஜி'
Apple

கூகுள் மேப்ஸில் இருப்பது போல் இனி ஆப்பிள் மேப்ஸிலும் 'சைக்கிளிங் மோடு' வருகிறது. சைக்கிள் ரூட்களை காட்டும் இந்த வசதி முதலில் பெரிய நகரங்களுக்கு வந்துசேரும். எலக்ட்ரிக் கார் வைத்திருப்பவர்கள் போகும் வழியில் எங்கு சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கின்றன என இனி ஆப்பிள் மேப்ஸில் பார்த்துக்கொள்ள முடியும்.

'App Clips'
'App Clips'
Apple

iOS 14-ல் 'App Clips' என்ற புதிய வசதியும் வருகிறது. ஆண்ட்ராய்டில் இருக்கும் 'Instant Apps' போன்றதொரு வசதிதான். முழு ஆப்பையும் டவுன்லோடு செய்யாமல் அதன் சிறிய பகுதியை மட்டும் டவுன்லோடு செய்துகொள்ளலாம். டெமோ வெர்ஷன் மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆப் எப்படி இருக்கிறது, என்ன விஷயங்களையெல்லாம் வைத்திருக்கிறது எனப் பார்த்துக்கொள்ள உதவும் இந்த 'App Clips'. iOS 14-ல் ஆப்களின் இந்த குட்டி வெர்ஷன்களில் பேமன்ட் சப்போர்ட் கூட இருக்கும்

இந்த விழாவில் பலரையும் கவர்ந்தது 'டிஜிட்டல் கார் கீ' என்னும் வசதிதான். உங்கள் கார் கீயை இனி உங்கள் ஐபோனில் சேவ் செய்து வைத்துக்கொள்ளலாம். அருகே சென்று NFC மூலம் காரை அன்லாக் செய்ய முடியும். காரின் உள்ளே இருக்கும் NFC பேடில் போனை வைத்தால் போதும் உங்களால் என்ஜினை ஸ்டார்ட் செய்யமுடியும். இதன்மூலம் தேவையென்றால் மற்றவர்களுக்கு இந்த கீயை ஷேர் செய்ய முடியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு 'Driving profile' கூட கொடுக்கலாம். உதாரணத்திற்கு 18 வயதே ஆன மகனுக்கு கார் கீயை கொடுக்கிறீர்கள் என்றால், வேகக் கட்டுப்பாடுகளை நீங்கள் செட் செய்து டிஜிட்டல் கார் கீயை ஷேர் செய்யலாம். விரைவில் வரவிருக்கும் BMW 5 சீரிஸ் காரில் இந்த வசதி இருக்குமாம். iOS 14 மட்டுமல்லாமல் iOS 13-லும் இந்த வசதி சேர்க்கப்படுமாம்.

டிஜிட்டல் கார் கீ | Digital Car Key
டிஜிட்டல் கார் கீ | Digital Car Key
Apple

ப்ரைவசி அப்டேட்களும் வந்திருக்கின்றன. இனி ஏதேனும் ஒரு ஆப் உங்கள் கேமரா மற்றும் மைக்கை அக்சஸ் செய்தால் அதை மேலே 'Notification Light' மூலம் நமக்குச் சொல்லும் ஆப்பிள். iOS 14-ல் ஆப்கள் உங்களிடமிருந்து தேவையற்ற டேட்டாவை எடுப்பது இன்னும் கூட கடினமாகியிருக்கிறது. 'முடிந்தளவு குறைந்த டேட்டாவை சேகரிப்போம், டேட்டா இருந்தால்தானே பாதுகாப்பு பிரச்னைகள் வரும்' என்பதே ஆப்பிளின் புதிய ப்ரைவசி கோட்பாடாக இருக்கிறது.

மொத்தமாக பார்த்தால் iOS இம்முறையும் சில முக்கிய வசதிகளை ஆண்ட்ராய்டிடமே கடன் வாங்கியிருக்கிறது. சமீபத்தில்தான் ஆண்ட்ராய்டு 11 அறிமுகமாகியிருந்தது. அது iOS-லிருந்து பல வசதிகளைக் கடன்வாங்கியிருந்ததைப் பார்க்க முடிந்தது. இந்தக் 'கொடுத்தல் வாங்குதலுக்கு' காரணம் இரண்டு ஓஎஸ்களுமே கிட்டத்தட்ட முழுமையடைந்துவிட்டன. சின்ன சின்ன மாற்றங்களையும், மெருகேற்றல்களையும்தான் செய்துவருகின்றன கூகுளும் ஆப்பிளும்.

அதனால்தான் செயல்பாடு வசதிகளை ஆண்ட்ராய்டிடமிருந்து அப்படியே தூக்குவது ஐஓஎஸ்-க்கும், ஐஓஎஸ் ப்ரைவசி வசதிகளை அப்படியே தூக்குவது ஆண்ட்ராய்டுக்கும் வழக்கமாகிவிட்டது.
iPad OS 14
'Scribble' மேஜிக்
iPad OS 14
iPad OS 14
Apple

ஐபேடுகளுக்கு தனி ஓஎஸ் போன வருடம் அறிவிக்கப்பட்டது. அதன் அடுத்த வெர்ஷனான iPad OS 14-ம் இந்த நிகழ்வில் அறிமுகமானது. iOS 14 போல இதிலும் ஹோம் ஸ்கிரீனில் இனி Widgets வைத்துக்கொள்ளலாம். மேக்புக்களில் இருக்கும் 'Universal Search' வசதி ஐபேடுகளுக்கும் வருகிறது. ஐபேடில் தேவைப்படும் அனைத்தையும் இதைக் கொண்டு எளிதில் தேடமுடியும்.

iPad OS Scribble
iPad OS Scribble
Apple

ஆனால் iPad OS 14-ல் முக்கிய அப்டேட் என்பது 'Scribble' என்னும் வசதிதான். ஐபேட் வைத்திருக்கும் பாதிக்கும் அதிகமானவர்கள் அதில் வரையவும் எழுதவும் ஆப்பிள் பென்சிலும் வாங்கி வைத்திருப்பார்கள். அவர்கள் இனி ஆப்பிள் பென்சில் கொண்டு இன்னும் அதிகமான விஷயங்களை ஐபேடுகளில் செய்ய முடியும். இந்த Scribble உங்கள் கையெழுத்தைக் கண்டறிந்து அதை அப்படியே டெக்ஸ்ட்டாக மாற்றிவிடும். இனி பிரவுசர், ஆப்கள் என எங்கும் நீங்கள் டைப் செய்ய வேண்டியதில்லை, கைப்பட எழுதினால் போதும். ஆங்கிலம் உட்பட சில மொழிகளுக்கு முதலில் சப்போர்ட் இருக்கும். நீங்கள் எழுதுவது என்னவென்று கண்டறிந்து அதற்கேற்ற செயல்களைக் காட்டும் iPad OS 14. அதாவது, நீங்கள் எழுதுவது அட்ரஸ் என்றால் அதை அப்படியே மேப்ஸில் தேட முடியும், போன் நம்பர் என்றால் அப்படியே அழைக்க முடியும்.

WatchOS 7
டேன்ஸ், ஸ்லீப், ஹேண்ட் வாஷ் ட்ராக்கிங்
WatchOS 7
WatchOS 7
Apple

சிறிய அப்டேட்களுடன் வந்திருக்கிறது ஆப்பிள் வாட்ச்களுக்கான WatchOS. முக்கிய அப்டேட் ஆப்பிள் வாட்ச்சில் 'டேன்ஸ் ட்ராக்கிங்' வருகிறது. பிட்னஸ் கேட்ஜெட் எதிலுமே இதுவரை கொடுக்கப்படாத வசதி இது. Gyroscope, accelerometer சென்சார்களின் உதவியுடன் இதயத்துடிப்பையும் கண்காணித்து 'டேன்ஸ் ட்ராக்கிங்' செய்கிறது ஆப்பிள். ஆடும்போது எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகிறது என இதன்மூலம் பார்க்க முடியும். ஸ்லீப் ட்ராக்கிங்கும் ஆப்பிள் வாட்ச்களுக்கு வருகிறது. ஆனால், இந்த வசதியைப் பயன்படுத்தும் அளவுக்கு ஆப்பிள் வாட்ச்களின் பேட்டரி ஒத்துழைக்கவுமா எனத் தெரியவில்லை. இரவும் பயன்படுத்தினால் வாட்ச்சை எப்போது சார்ஜ் செய்வதென்று தெரியவில்லை.

HandWash மானிட்டரிங்
HandWash மானிட்டரிங்
Apple

கொரோனாவின் பின் கை கழுவுதல் என்பது மிக முக்கிய விஷயமாகிவிட்டது. இனி ஆப்பிள் வாட்ச்கள் இதைத் தானாகவே கண்டறிந்து உங்களுக்கு வழிகாட்டும். வாட்ச்சில் இருக்கும் மைக் வைத்து நீங்கள் கை கழுவுவதைக் கண்டறியும் ஆப்பிள் வாட்ச் 20 நொடி டைமர் ஒன்றையும் ஆன் செய்துவிடும். அதற்கு முன்பு கை கழுவுவதை நிறுத்தினால் உங்களுக்கு வாட்ச் எச்சரிக்கை தரும்.

MacOS Big Sur
இறுதியாக MacOS 11 வந்தாச்சு!
MacOS Big Sur
MacOS Big Sur
Apple

சமீபத்தில் ஆப்பிளின் மேக் மற்றும் மேக்புக் கணினிகளுக்கு வந்திருக்கும் மிக முக்கிய அப்டேட் இதுவாகத்தான் இருக்கும். கடந்த சில வருடங்களாக வந்த ஓஎஸ்களின் வெர்ஷன் என்பது 10.X.X என்றே இருந்தன. இந்த MacOS Big Sur தான் MacOS 11. UI அளவிலேயே நிறைய டிசைன் மாற்றங்கள் வந்திருக்கிறது. ஐகான் தொடங்கி மெனுக்கள் வரை அனைத்திலும் சிறு சிறு மாற்றங்கள். இதனால் புதிய டிசைனை பார்த்தால் சில இடங்களில் ஐபேடு பீல் வருகிறது. இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவதற்கு முன் இந்த WWDC-ல் ஆப்பிள் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பைப் பற்றிப் பார்ப்போம்.

Apple Silicon
Apple Silicon
Apple

சில வருடங்களாகவே மேக் மற்றும் மேக்புக் கணினிகள் இன்டெல் சிப்செட்களையே பயன்படுத்திவருகின்றன. இறுதியாக இவற்றிலிருந்து மாறப்போவதாக அறிவித்திருக்கிறது ஆப்பிள். ஆம், இனி மேக் மற்றும் மேக்புக் கணினிகளுக்கு சொந்த சிப்களை பயன்படுத்த முடிவுசெய்துள்ளது ஆப்பிள். ஏற்கெனவே ஐபோன், ஐபேடு போன்ற மற்ற சாதனங்களில் சொந்த சிப்செட்களையே பயன்படுத்திவந்தது ஆப்பிள். இவற்றின் பர்ஃபார்மென்ஸுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இன்றுவரை திணறி வருகின்றன மற்ற நிறுவனங்கள். ஆண்ட்ராய்டு போன்கள் அதிகம் பயன்படுத்தும் குவால்கம் சிப்செட்கள் பர்ஃபார்மென்ஸ் விஷயத்தில் இவற்றின் அருகில் கூட வரமுடியாது. அப்படியிருக்கையில் இந்த மாற்றம் மேக் கணினிகளுக்கு வரும் எனப் பல மாதங்களாகவே தகவல்கள் வந்துகொண்டுதான் இருந்தன. இறுதியாக இதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது ஆப்பிள். சொந்த சிப்புடன் வரும் முதல் மேக்புக் இந்த வருடத்தின் இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Apple Silicon
Apple Silicon
Apple

ஆனால், இந்த ஹார்டுவேர் மாற்றத்துக்கு சாஃப்ட்வேரும் கைகொடுக்க வேண்டும். அதுதான் Mac OS Big Sur. டெவலப்பர்கள் ஏற்கெனவே இன்டெல் Architecture-க்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருக்கும் ஆப்களை சற்றே மாற்றி வடிவமைக்கவேண்டியிருக்கும். இதை எளிதாக்கும் மென்பொருள் கருவிகள் மற்றும் வழிமுறைகள் பற்றியும் இந்த WWDC-ல் விரிவாகப் பேசப்படும். மொத்தமாக இந்த Intel-Apple's Silicon மாற்றங்களுக்கு இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கிறது ஆப்பிள். மேலும், இந்த மாற்றத்தால் iOS, iPad OS ஆப்கள் இனி மேக் கணினிகளிலும் இயங்கும்.

அமேசான், நெட்ஃப்ளிக்ஸுடன் போட்டிபோடுமா ஆப்பிள் டி.வி ப்ளஸ்? #StreamingWars

இதுபோக ஏர்பாட்ஸில் Spatial Audio போன்ற சில புதிய வசதிகள் வருகிறது. Tv OS-ல் அப்டேட்கள் வந்திருக்கிறது. ஆப்பிள் டிவி+ தொடரான 'Foundation' டிரெய்லர் திரையிடப்பட்டது. மொத்தமாக அடுத்த சில வருடங்களுக்கான ஆப்பிளின் திட்டங்கள் என்னென்ன, எங்கெல்லாம் கவனம் செலுத்தப்போகிறது என்பதற்கான ப்ளூபிரிண்ட்தான் இந்த அறிவிப்புகள்.

இனிவரும் காலங்களில் பல முக்கிய மாற்றங்களை ஆப்பிள் சாதனங்களில் பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி!

ஆப்பிளின் புதிய அறிவிப்புகள் பற்றிய உங்கள் கருத்துகளை கமென்ட்களில் பதிவிடுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு