Published:Updated:

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 20 - வாட்ஸ்அப் கால் உஷார்!

கேட்ஜெட் கிளாஸ் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட் கிளாஸ் ரூம்

#Utility

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 20 - வாட்ஸ்அப் கால் உஷார்!

#Utility

Published:Updated:
கேட்ஜெட் கிளாஸ் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட் கிளாஸ் ரூம்

சண்டிகர் நகரைச் சேர்ந்தவர் ரவி. ஃபேஸ்புக்கில் அதிகமாக புகைப்படங்களைப் பகிரும் பழக்கமுடையவர். பெரும்பாலும் அவரது ஜிம் வொர்க் அவுட் படங்கள்தாம். ஃபேஸ்புக்கிலே அவர் மொபைல் எண்ணும் ‘பப்ளிக்’ ஆகவே இருக்கிறது. ஒரு நாள் வெளிநாட்டு எண்ணிலிருந்து அவருக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. தன்னை ‘மஹி’ என அறிமுகம் செய்துகொண்ட அந்தப் பெண், ரவியுடன் சில நாள்கள் சாட் செய்திருக்கிறார். அவர் ஃபிட் ஆன உடம்பைப் பற்றி அதிகம் புகழ்ந்து பேசியது ரவிக்கும் பிடித்திருக்கிறது. ஆனால், அது உண்மையிலே பெண்தானா என்ற சந்தேகம் ரவிக்கு எப்போதும் உண்டு. ஒருநாள் வாட்ஸ்அப் ஆடியோ கால் வந்து அந்தப் பெண் பேச, ரவிக்கு அந்தச் சந்தேகம் போய்விட்டது. எல்லை மீறாமல் அரட்டையைத் தொடர்ந்திருக்கிறார்கள் இருவரும்.

ஒரு நாள் வீடியோ கால் செய்திருக்கிறார் மஹி. ரவியும் எடுத்துவிட, சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெண் உடைகளைக் களையத் தொடங்கியிருக்கிறாள். ரவி ‘என்ன செய்யுற?’ எனக் கேட்க, தனக்கு ரவியைப் பிடிக்குமென பேச்சை மாற்றியிருக்கிறாள் மஹி. ரவி சுதாரித்து அழைப்பை கட் செய்திருக்கிறார். ஆனால், அவர்கள் பேசிய சில நிமிடங் களையும், அந்தப் பெண் உடைகள் களைவதையும் வைத்து ஒரு வீடியோ உருவாக்கப்பட்டிருக்கிறது. அது வேறோர் எண்ணிலிருந்து ரவிக்கு வந்திருக்கிறது. அந்த எண் ரவியிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறது.

ரவி முதலில் தான் எந்தத் தவறும் செய்யவில்லையென மறுத்திருக்கிறார். ஆனால், அடுத்து வந்த இன்னொரு வீடியோ அவருக்கு பயத்தைத் தந்திருக்கிறது. அந்த வீடியோவில் ரவியும் உடைகள் இல்லாமல் இருப்பது போல மார்ஃபிங் செய்திருக்கிறார்கள். ரவி, மஹியுடன் பேசிய சாட்களின் ஸ்க்ரீன்ஷாட்களும் அந்த வீடியோவில் சேர்க்கப்பட்டிருந்தன. ரவியின் ஃபேஸ்புக் மூலம் ஏற்கெனவே அவர் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் எண்களை அவர்கள் எடுத்துவிட்டதாகச் சொல்லி யிருக்கிறார்கள். ரவி பணம் தரவில்லை என்றால் அவர்களுக்கு இந்த வீடியோ அனுப்பப்படும் என மிரட்டியிருக்கிறார்கள்.

30,000 ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட பேரம் 5,000 ரூபாயில் முடிந்திருக்கிறது. சரியென ரவியும் 5,000 ரூபாயை அனுப்ப, அடுத்த நாள் இன்னும் 5 எண்களிலிருந்து மெசேஜ் வந்திருக் கிறது. எல்லோரிடமும் அந்த வீடியோ இருந்திருக்கிறது. எல்லோரும் 5,000 ரூபாய் கேட்டிருக்கிறார்கள். மன நிம்மதியைத் தொலைத்த ரவி, வேறு வழியில்லாமல் காவல் துறை உதவியை நாடியிருக்கிறார். போலீஸும் அந்த நெட்வொர்க் கைப் பிடிக்க முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் என்ன செய்ய? அவர்கள் இயங்குவது வெளிநாட்டிலிருந்து. பிடித்தாலும் இன்னொரு குழுவை வைத்து, புதிதாக சில எண்களுடன் இன்னொரு நாட்டிலிருந்து இதே வேலையைச் செய்ய ஒரு டீம் வந்துவிடும். ரவி வெளியே சொல்லிவிட்டார். சொல்லாமல் எத்தனை பேர் மனநிம்மதியைத் தொலைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

இது ஒரு வழிதான். நம்மை பற்றிய ஏதோ ஒரு விஷயத்தை வைத்து, மார்ஃபிங் செய்து நம்மிடம் மிரட்டி பணம் கறக்க இவர்கள் பல வழிகளை வைத்திருக்கிறார்கள். எந்தத் தவறும் செய்யவில்லை யென்றாலும் மிரட்டலிலே பயந்து போகிறவர்கள்தாம் நம்மில் ஏராளம்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்
கேட்ஜெட் கிளாஸ் ரூம்

என்ன செய்ய வேண்டும் நாம்?

* வாட்ஸ்அப்போ, ஃபேஸ்புக்கோ. முன்பின் தெரியாத எண், நபர்கள் தொடர்பு கொண்டால் தவிர்த்துவிடுங்கள்.

* எந்தக் காரணம் கொண்டும் தெரியாத நபர்களுடன் சாட்டோ, காலோ பேச வேண்டாம்.

* வீடியோ காலிங் ரொம்பவே ரிஸ்க். அதை அவ்வளவு சீக்கிரம் செய்ய வேண்டாம்.

* நம்மை பற்றிய ஒரு ரகசியத்தைக் கொஞ்சம் மெனக்கெட்டால் நம் சமூக வலைதளக் கணக்கிலிருந்தே எடுத்துவிட முடியும். அதை வைத்து யாரேனும் மிரட்டினால் பயப்பட வேண்டாம்.

* எந்தக் காரணம் கொண்டும் மிரட்டலுக்கு பயந்து பணமோ, வேறு எதையுமோ தர வேண்டாம். அப்படிச் செய்தால் பிரச்னை முடியாது. தொடர்கதையாகத்தான் போகும்.

* அப்படி யாராவது மிரட்டினால் முதலில் குடும்ப உறுப்பினர்களிடம் அதை கலந்தாலோசிப்பதே நல்லது. ஒருவேளை நாம் தவறு செய்திருந்தால்கூட அதைக் குடும்பத்திடம் சொல்வது நல்லது. தெரியாத ஒருவனிடம் ஏமாந்துபோவது வாழ்க்கையையே சிக்கல் ஆக்கிவிடும்.

இணையம் பாதுகாப்பானது; ஆனால், அதை நாம் சரியாகப் புரிந்து, பயன்படுத்தினால் மட்டுமே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism