
டிஜிட்டல் உலகம்
என்னதான் பழக்கப்பட்ட பொருள் என்றாலும் புதிதாக ஒரு லேப்டாப் நாம் வாங்க வேண்டும் என்றால் கொஞ்சம் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. எந்தச் சிறப்பம்சத்தைக் கவனிப்பது, எந்த விலையில் நமக்கேற்ற லேப்டாப்கள் கிடைக்கும் எனப் பல கேள்விகள் வருவது இயல்புதான். பொதுவாக லேப்டாப் வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், நமக்கான லேப்டாப்பை எப்படித் தேர்ந்தெடுப்பது போன்ற அடிப்படையான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
எதற்காக நமக்கு லேப்டாப் தேவை?
என்னென்ன வேலைகளைச் செய்வதற்காக நமக்கு லேப்டாப் தேவைப்படுகிறது என்ற தெளிவு இருந்தால், அதனைத் தேர்ந்தெடுப்பதும் எளிதாக இருக்கும். பிரவுஸிங் செய்வது, புத்தகம் வாசிப்பது, வீடியோக்கள் மற்றும் அலுவலக வேலைகள் போன்ற அடிப்படைப் பயன்பாடுகளுக்கா, வீடியோ மற்றும் போட்டோ எடிட்டிங் போன்றவற்றுக்காகவா அல்லது கேமிங்குக்கா - எதற்காக முதலில் லேப்டாப் வாங்குகிறோம் என முடிவெடுத்துக் கொள்வது சிறந்தது. என்ன பயன்பாடு என்பது தெரிந்தால்தான் அதற்கேற்ற வசதிகளோடு லேப்டாப்பைத் தேர்ந்தெடுக்க முடியும். அடிப்படைப் பயன்பாடுகளுக்கான லேப்டாப்பை வாங்கிவிட்டு வீடியோ எடிட்டிங் செய்ய முடியவில்லையே என வருத்தப்படக் கூடாது.

இயங்குதளம்: (Operating System)
பொதுவாக லேப்டாப்களில் மூன்று இயங்குதளம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. விண்டோஸ் (Windows), மேக் ஓஎஸ் (Mac OS) மற்றும் க்ரோம் ஓஎஸ் (Chrome OS). ஆப்பிள் நிறுவனத்தில் மேக்புக் லேப்டாப்களில் மட்டும் மேக் ஓஎஸ் பயன்படுத்தப்படுகிறது. அடிப்படை வசதிகளுக்காகவே வடிவமைக்கப்பட்டது க்ரோம் ஓஎஸ், முக்கியமாக அதிகமாக வெஃப் பிரவுஸிங் செய்வோம் என்றால் க்ரோம் ஓஎஸ் சிறப்பான தேர்வாக இருக்கும். இந்த இரண்டும் தவிர்த்து பெரும்பாலான லேப்டாப்களில் விண்டோஸ் இயங்குதளம் தான் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
இயங்குதளங்களைப் பொருத்தவரை பெரிய குழப்பம் எதுவும் இல்லை. ஏற்கனவே ஐபோன், ஐபேட் போன்ற ஆப்பிள் கருவிகளை வைத்திருப்பவர்கள் மேக்புக்கையே பெரும்பாலும் தேர்ந்தெடுப்பார்கள். அடிப்படையான வேலைகளைச் செய்யவும், விலை குறைவாகவும் லேப்டாப் இருக்க வேண்டும் என்பவர்கள் க்ரோம் ஓஎஸ் கொண்ட லேப்டாப்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதைத் தவிர மற்றவற்றுக்கு எல்லாம் விண்டோஸ்தான்.

ப்ராசஸர் (Processor):
லேப்டாப்பில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ப்ராசஸர்தான். நாம் வாங்கப் போகும் லேப்டாப் என்னவெல்லாம் செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கக் கூடிய இடம். பெரும்பாலான லேப்டாப்களில், ஏஎம்டி (AMD) மற்றும் இன்டெல் (INTEL) ஆகிய இரண்டு நிறுவனத்தின் ப்ராசஸர்கள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கும். ப்ராசஸர்களிலும் பல வகைகளை இரண்டு நிறுவனங்களும் வெளியிட்டிருக்கின்றன. குறிப்பிடத்தக்க ப்ராசஸர்கள் என்றால், இன்டெல்லில் Core I3, Core I5, Core I7 மற்றும் AMD-ல் Ryzen 3, Ryzen 5 மற்றும் Ryzen 7 ஆகிய ப்ராசஸர்களை சொல்லலாம். அடிப்படையான வேலைகளைச் செய்ய Core I3 மற்றும் Ryzen 3, வீடியோ மற்றும் போட்டோ எடிட்டிங் போன்ற வேலைகளுக்கு Core I5 மற்றும் Ryzen 5, இன்டென்ஸ் கிராபிக்ஸ் கொண்ட கேம்களுக்கு Core I7 அல்லது Ryzen 7 ஆகிய ப்ராசஸர்களைப் பயன்படுத்தலாம்.
இது தவிர விலை குறைவாகவும், விலை அதிகமாகவும் இருக்கும் லேப்டாப்களுக்கும் வேறு வகையான ப்ராசஸர்களும் பயன்படுத்தப்படுகின்றன. நமது தேவைக்கு ஏற்ப ப்ரசாஸர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
கிராபிக்ஸ் கார்டு (Graphics Card):
AMD மற்றும் Nvidia ஆகிய நிறுவனங்களின் கிராபிக்ஸ் கார்டுகள்தான் பெரும்பாலான லேப்டாப்களில் பயன்படுத்தப்படுகின்றன. அடிப்படை வேலைகளைச் செய்ய Integrated Graphics எனப்படும் அடிப்படையான கிராபிக்ஸ் கார்டே போதுமானது. வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங்குக்கு தனித்துவமான கிராபிக்ஸ் கார்டு மிகவும் அவசியம். AMD ப்ராசஸர் கொண்ட லேப்டாப்களுக்கும் AMD-ன் கிராபிக்ஸ் கார்டுகளும், Intel ப்ராசஸர்கள் கொண்ட லேப்டாப்கள் Nvidia கிராபிக்ஸ் கார்டுகளும் பயன்படுத்துகின்றன. நமது தேவைக்கேற்ப இதனையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
ரேம் (RAM):
குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு வேலைப்பளுவை நம் லேப்டாப்பால் தாங்க முடியும் என நிர்ணயிப்பது ரேம் தான். அடிப்படையாக 4 GB-யில் இருந்து 32 GB வரை ரேம் கொண்ட லேப்டாப்கள் இருக்கின்றன. அடிப்படைத் தேவைகளுக்கு 4 GB RAM போதும்தான். எடிட்டிங் கேமிங் போன்றவற்றுக்கு நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷனுக்கு ஏற்றவாறு 8 GB அல்லது 16 GB RAM தேவைப்படும். நம் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அதனையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 8 GB என்பது சாதாரணமான லேப்டாப் பயனாளருக்குப் போதுமானதாகவே இருக்கும்.

ஸ்டோரேஜ் (Storage):
பொதுவாக லேப்டாப்களில் இரண்டு வகையான ஸ்டோரேஜ்கள் பயன்படுத்தப்படுகின்றன. SSD (Solid State Drive) மற்றும் HDD (Hard Disk Drive), இவற்றில் SSD என்பது வேகமாகவும் விலை அதிகமாகவும் இருக்கும். HDD ஸ்டோரேஜ் SDD-யை விட கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும், ஆனால் SSD-யை விட விலை குறைவாகவே இருக்கும். டேட்டாவை ஸ்டோர் மட்டுமே செய்யப் போகிறோம் என்பவர்கள் HDD-யையே தேர்ந்தெடுக்கலாம். டேட்டாவை ப்ராசஸ் செய்ய வேண்டும் என்பவர்களுக்கு SSD-யே சிறந்தது.
2 in 1 லேப்டாப்கள்:
லேப்டாப்களை லேப்டாப்பாக மட்டும் இல்லாமல் டேப் ஆகவும் பயன்படுத்தும் வகையில் டச் லேப்டாப்கள் இருக்கின்றன. அப்படியான லேப்டாப்களில் ஸ்கிரீனை மட்டும் தனியாகக் கழற்றி டேப் ஆகவும் உபயோகிக்கலாம்.
லேப்டாப்பில் கவனிக்க வேண்டிய மற்ற விஷயங்கள்:
குறைவான ரேம் கொண்ட லேப்டாப்கள் விலை குறைவாகவும் இருக்கும். அதனை வாங்கும் போது ரேமை அப்கிரேட் செய்யும் வசதி இருக்கிறதா எனப் பார்ப்பது சிறந்தது. ஒரு வேளை வாங்கிய பின்னர் அதிகமாக ரேம் தேவைப்படுகிறது என்றாலும் நம்மால் அப்கிரேடு செய்து கொள்ள முடியும்.
லேப்டாப்பின் கிளாக் ஸ்பீடிலும் ஒரு கண் வைத்துக் கொள்ளலாம். நமது டேட்டா எவ்வளவு நேரத்தில் ப்ராசஸ் ஆக வேண்டும் என்பதை நிர்ணயிப்பதில் க்ளாக் ஸ்பீடுக்கும் கணிசமான பங்குண்டு. எனவே அதனையும் கவனிப்பது நல்லது.
லேப்டாப்களை நாம் வாங்குவதற்குக் காரணமே அதன் போர்டபிலிட்டிதான். எனவே, நாம் எளிதாக எடுத்துச் செல்லும் அளவில் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்வதும் அவசியம். பெரிய லேப்டாப்களை எல்லா இடத்திலும் எளிதாகப் பயன்படுத்த முடியாது.
அதிகமாக வெளியே பயணம் செய்கின்றவர் என்றால், குறைந்தபட்சம் 9 மணி நேர பேட்டரி பேக்கப்பாவது அவசியம். எனவே பேட்டரி எவ்வளவு வேண்டும் என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.