Published:Updated:

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 17 - ஜிபே... கூடுதல் கவனம் தேவை!

ஜிபே
பிரீமியம் ஸ்டோரி
News
ஜிபே

இன்ஸ்டாகிராம் மூலம் சேலைகள் விற்கும் தொழிலை சமீபத்தில் தொடங்கியிருந்தார் நெல்லையைச் சேர்ந்த ஒரு பெண்.

ஆன்லைன் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. சென்ற இதழில்தான் ஒரு சைபர் க்ரைம் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் ஜிபே மூலம் நடக்கும் இன்னொரு குற்றத்தைப் பற்றி அறிந்துகொள்வோம்.

இன்ஸ்டாகிராம் மூலம் சேலைகள் விற்கும் தொழிலை சமீபத்தில் தொடங்கியிருந்தார் நெல்லையைச் சேர்ந்த ஒரு பெண். பொறியியல் படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தது அவருக்குப் பிடிக்க வில்லை. இப்படியொரு ஆன்லைன் தொழில் பற்றி சொன்னதும் கணவரும் உதவ, உடனே களமிறங்கி விட்டார். மூன்று மாதங்கள். இப்போது தினமும் 10-க்கும் குறையாமல் சேலைகள் விற்கிறார். எல்லாம் இன்ஸ்டா செயல்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 17 - ஜிபே... கூடுதல் கவனம் தேவை!

இதுதான் ஐடியா. புடவையை இன்ஸ்டா கிராமில் புகைப்படமாக, வீடியோவாகப் போடுவார். வாடிக்கையாளர்கள் தங்களுக் குப் பிடித்த புடவையை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். ஸ்டாக் இருக்கிறதென்றால், பணத்தை ஜிபே மூலம் அனுப்பினால் ஸ்பீடு போஸ்ட்டில் அடுத்த நாள் சேலை நம் வீட்டுக்கு வந்துவிடும்.

எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் ராஜஸ்தானிலிருந்து ஒருவர் வாட்ஸ்அப் செய்தார். ‘அங்க இல்லாத சேலையா?’ என சந்தேகம் வர வேண்டிய இடத்தில் சந்தோஷம் வந்து விட்டது தொழிலதிபருக்கு. 350 ரூபாயை ஜிபே செய்யச் சொன்னார். சிறிது நேரத்தில் வாட்ஸ்அப்பில் ராஜஸ் தான்காரர் இன்னொரு ஸ்க்ரீன்ஷாட் அனுப்பி யிருந்தார்.

அது, 350 ரூபாய்க்குப் பதிலாக 3,500 ரூபாய் அனுப்பிவிட்டதாகத் தகவல் சொன்னது. உடனே தன்னுடைய ஜிபேவை திறந்து பார்க்க அதில் 3,500 என்றிருந் தது. 3,500-ல் 350 ரூபாய் போக 3,150 ரூபாயைத் திருப்பி அனுப்பக் கேட்டார் ராஜஸ்தான்காரர். உடனே நம் தொழிலதிபரும் அனுப்பிவிட்டார். இப்போது இவருக்கு 3,150 ரூபாய் நஷ்டம். எப்படி?

நீங்கள் ஜிபே பயன் படுத்துபவர் என்றால் அதைத் திறந்து பாருங்கள். அதில் ஒருவருக்குப் பணம் அனுப்பும் வசதி மட்டுமல்ல; மெசேஜ் அனுப்பும் வசதியும் உண்டு. ராஜஸ்தான்காரர் 3,500 என மெசேஜ் அனுப்பிவிட்டு, அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து கொஞ்சம் போட்டோஷாப் வேலை செய்து பணம் அனுப்பியது போல மாற்றி விட்டார். அதைப் பார்த்ததும் நம் தொழிலதிபருக்கு பணம் அனுப்பியது போல தெரிந்தது. கூடுதல் பாதுகாப்பாக, ஜிபேவைத் திறந்து பார்த்திருக்கிறார். அதில் 3,500 என்ற மெசேஜை பணம் வந்ததற் கான மெசேஜ் எனத் தவறாகப் புரிந்துகொண்டார்.

எல்லோரும் எல்லா நேரமும் ஏமாந்துவிட மாட்டார்கள். ஆனால், எல்லோரும் ஏதோ ஒரு நேரம் ஏமாந்துபோக வாய்ப்பு உண்டு. அப்போது, நம் மூளை வேலை செய்யாது; நுண்ணுணர்வு வேலை செய்யாது. ‘ச்சே. இப்படியா ஏமாந்தோம்’ என வாழ்நாள் முழுவதும் வருந்தும்படி ஏமாந்திருப்போம். இதற்கு ஆன்லைனில் நிஜ உலகைவிட அதிகம் சாத்தியம். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழிதான் இருக்கிறது. பணம் தொடர்பாக எந்தப் பரிவர்த்தனை என்றாலும், நம் மூளை விழித்துக்கொள்ள வேண்டும். அந்த ப்ராசஸில் நமக்கு முழு தெளிவிருக்கிறதா என யோசிக்க வேண்டும். சின்ன சந்தேகம் என்றாலும், தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். பாஸ்வேர்டு, ஓ.டி.பி போன்ற ரகசிய கடவுச்சொற்களை யார் கேட்டாலும் கொடுக்கக் கூடாது.

3,150 என்பதால் பரவாயில்லை. பெரிய தொகை என்றால் வளர்ந்து வரும் தொழிலதிபருக்கு அது மிகப்பெரிய அடியாக இருந்திருக்கும். வீட்டிலிருந்தபடியே தனக்கான ஓர் எதிர்காலத்தை உருவாக்கியவருக்கு இந்த ஒரு சம்பவம் முற்றுப்புள்ளியாகக்கூட மாறியிருக்கும். யோசித்துப் பார்த்தால் இந்த மோசடி, இணையம்

மூலம் எழுச்சியடைந்திருக்கும் பெண்கள் பலருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். இதிலிருந்து தப்பிக்க இணையத்தின் நுணுக்கங்களில் அன்றாடம் அப்டேட் ஆகிக் கொண்டேயிருக்க வேண்டும்.

இணையம், வளர்ச்சிக்கான வழி காட்டி. அதேசமயம், ஆபத்துசூழ் உலகமும் கூட... உஷாராக இருப்போம் எப்போதும்!