லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 16 - அவசரம்... ஜி பே பண்றீங்களா?

கூகுள் பே
பிரீமியம் ஸ்டோரி
News
கூகுள் பே

நடந்தது இதுதான். இணையத்தில் நம் ஃபேஸ்புக் புரொஃபைலை (லாக் செய்யப்படாத அக்கவுன்ட்கள்) அப்படியே காப்பி செய்ய நிறைய வழிகள் உண்டு.

இணையத்தில் நாம் நினைத்திடாத, யோசிக்காத பல விஷயங்களுக்கு வழிகள் உண்டு. உதாரணமாக, வாட்ஸ்அப்பை எடுத்துக் கொள்வோம். இதில் பிரைவஸி காரணங்களுக்காக சில வசதிகள் தந்திருக்கிறார்கள். உங்களுக்கு வரும் மெசேஜ்களை நீங்கள் பார்த்துவிட்டால் ப்ளூ டிக் வரும். இதை ‘settings’ல் மாற்றிக் கொள்ளலாம்.

அப்படிச் செய்துவிட்டால், நீங்கள் மெசேஜைப் படித்தாலும் அனுப்பிய வருக்குக் காட்டாது. அதுபோலவே நீங்கள் அனுப்பும் மெசேஜை அவர் படித்ததும் உங்களுக்குத் தெரியாது. இதுபோல இன்னும் சில வசதிகள் உண்டு. ஆனால், இவற்றையெல்லாம் ஓவர்டேக் செய்யும்படி சில விஷயங் கள் இணையத்தில் இருக்கின்றன.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 16 - அவசரம்... ஜி பே பண்றீங்களா?

என்ன... அதற்கெல்லாம் காசு கேட்பார்கள். பணம் கட்டிவிட்டால், நீங்கள் எப்போது வாட்ஸ்அப்பில் ஆன்லைன் வந்தாலும் பணம் கட்டியவருக்கு அடுத்த நொடி நோட்டிஃபிகேஷன் போகும். ஒரு நாளில் எப்போதெல்லாம் நீங்கள் ஆன்லைன் வந்தீர்கள், எவ்வளவு நேரம் வாட்ஸ்அப்பில் இருந்தீர்கள் என எல்லாவற்றையும் ரிப்போர்ட் ஆகத் தந்துவிடும் இணையதளங்கள் நிறைய உண்டு. அது மட்டுமல்ல... இரண்டு வாட்ஸ்அப் எண்களைத் தந்தால், அந்த இரண்டு எண்களும் வாட்ஸ்அப்பில் சாட் செய்துகொண்ட நேரத்தையும் சொல்லிவிடுவார்கள். இப்படி வாட்ஸ்அப் செயலிக்கு மட்டுமே நிறைய இணையதளங்கள் உண்டு. அதைப் பற்றிச் சொல்லும் முன் ஓர் உண்மைச் சம்பவம்.

சந்திரா, சென்னையில் மென்பொருள் நிறுவன மொன்றில் டீம் லீடர். அவர் படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருந்தவர் கல்பனா. கல்பனா ஃபேஸ்புக்கில் இருக்கிறார். சந்திராவும் அவரும் நண்பர்கள். ஒரு நாள் கல்பனா, சந்திராவிடம் மெசேன்ஜரில் பேசியிருக்கிறார். தன்னிடம் ‘ஜிபே' (Gpay) இல்லையென்றும், அவசரமாக ஓர் எண்ணுக்கு 12,000 ரூபாய் அனுப்ப வேண்டுமென்றும் கேட்டிருக்கிறார். ஊருக்கு வரும்போது பணமாகத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். சந்திராவும் தன் ஆசிரியருக்கு உதவ ஒரு வாய்ப்பு என நினைத்து பணத்தை ‘ஜிபே’ மூலம் அனுப்பியிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் கல்பனாவுக்கு சந்திராவால் மெசேஜ் அனுப்ப முடியவில்லை. பார்த்தால், பிளாக் செய்திருக் கிறார். யாரோ கல்பனாவின் அக்கவுன்ட்டை ஹேக் செய்திருக்கலாம் என நினைத்திருக்கிறார் சந்திரா. நினைவில் கொள்ளுங்கள். சந்திரா ஒரு மென்பொருள் நிறுவனத்தின் டீம் லீடர். அவராலேயே என்ன நடந்திருக்குமென சரியாகக் கணிக்க முடியவில்லை. உஷாராக இருக்கவும் முடியவில்லை. ஏமாந்திருக்கிறார்.

நடந்தது இதுதான். இணையத்தில் நம் ஃபேஸ்புக் புரொஃபைலை (லாக் செய்யப்படாத அக்கவுன்ட்கள்) அப்படியே காப்பி செய்ய நிறைய வழிகள் உண்டு. அதாவது, நம் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டில் இருக்கும் புகைப் படங்கள், வீடியோக்கள், பதிவுகள் என அனைத்தையும் அப்படியே காப்பி செய்து புதிதாக ஒரு அக்கவுன்ட் தயார் செய்து தந்துவிடும். பார்ப்பவர்களுக்கு நம் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்ப்பது போலிருக்கும். இணைய முகவரி எனப்படும் URL மட்டுமே மாறியிருக்கும். ஆனால், அதை யார் கவனிக்கப் போகிறார்கள்?

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 16 - அவசரம்... ஜி பே பண்றீங்களா?

இணையத் திருடர்கள் முதலில் வேறு ஒரு பெயரில் நமக்கு ‘Friend request’ தருவார்கள். உதாரணமாக, காஞ்சனா என வைத்துக் கொள்வோம். அந்த ரெக் வெஸ்ட்டை நாம் ஏற்றதும், சில நாள்களுக்குப் பிறகு அந்தக் கணக்கை ‘கல்பனா’ என மாற்றுவார்கள். நம் நண்பர்களில் ஒருவரைப் போல் அந்த புரொஃபைலை மாற்றுவார்கள். பின்னர், மெசெஞ்சரில் வந்து உரையாடு வார்கள். புரொஃபைலைப் பார்த்தால் அவர் நம் நட்புப் பட்டியலில் இருப்பதாகக் காட்டும். படங்கள் உட்பட அனைத்தும் அப்படியே காப்பி எடுக்கப்பட்டிருக்கும். எப்போதுமே அவசரம் என்றே இந்தத் திருடர்கள் பேசுவார்கள். அதனால் நம் மூளை சரியாக இயங்காமல், அவர்களுக்கு எப்படி உதவலாம் என்றே யோசிக்கும். வேண்டிய தொகை வந்தவுடன் அவர்கள் அக்கவுன்ட்டை மூடி விடுவார்கள்.

இதற்கு என்ன தீர்வு?

இதற்கு மட்டுமல்ல... இப்போது நடக்கும் திருட்டுகள், இனி வரப்போகும் கில்லாடி திருட்டு ஐடியாக்கள் உட்பட எல்லாவற்றுக்கும் எளிமையான ஒரு வழி இருக்கிறது. அது, சமூக வலைதளங்கள் மூலம் யாருக்கும் எப்போதும் பணமோ, தனிப்பட்ட புகைப்படங்களோ அனுப்பாதீர்கள். அப்படி யாரேனும் கேட்டால் அவருக்கு கால் செய்து உறுதி செய்த பின் அனுப்புங்கள். சந்திரா போன்ற மென்பொருள் ஆட்களே ஏமாறும் இடம் இணையம். அதிகம் தெரிந்திடாத நம்மை ஏமாற்றுவது மிக எளிது. கவனமாக இருங்கள்.