லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 10 - குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் தரலாமா?

கேட்ஜெட் கிளாஸ் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட் கிளாஸ் ரூம்

#Utility

‘குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் தரலாமா?’ - கேட்ஜெட் கிளாஸ் ரூம் வாசகிகள் பலரும் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகள் கழித்தும் இந்தக் கேள்வி கேட்கப்படும் என நினைக்கிறேன். விரிவாகப் பார்க்கும் முன், அதற்கு ஒன் மார்க் விடை சொல்லிவிடுகிறேன். ‘தந்தே ஆக வேண்டும்’.

வாசகர்கள் கேட்க வேண்டிய கேள்வி, ஸ்மார்ட்போனைக் குழந்தைகளுக்குத் தரலாமா என்பதல்ல; கொடுக்கும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதே. அப்படிக் கேட்பவரே ‘ஸ்மார்ட் வாசகர்’.

தனக்கென ஒரு ஸ்மார்ட்போன் என்பதை இந்தக்கால டீன்ஏஜினர் விடுதலையாகப் பார்க்கிறார்கள். சுற்றியிருக்கும் அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்போது ஒருவர் மட்டும் பயன்படுத்தாமல் போனால் ‘பியர் பிரஷரும்’ அதிகமாகும். அதைவிட முக்கியம், ஸ்மார்ட்போன் நிச்சயம் அன்றாட வாழ்வை எளிமை யாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றக்கூடியது. அதனால் சிறு வயதிலிருந்தே அதை அறிமுகம் செய்து, அதுபற்றித் தெரியப் படுத்துவதுதான் ‘குட் பேரன்டிங்’.

அடிப்படையுடன் தொடங்குவோம்: குழந்தை களுக்கு மொபைலை நாமே அறிமுகம் செய்வது நல்லது. அதனால், அது பற்றிய எந்தச் சந்தேகம் என்றாலும் நம்மிடமே வந்து கேட்பார்கள். நாம் கொடுக்கத் தவறினாலும் வேறு யாரிடமாவது மொபைலை வாங்கிப் பயன்படுத்துவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். தின மும், குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அப்போது மட்டும் பார்க்கலாம் எனத் திட்டமிடுங்கள்.

பொறுப்புடன் சொல்லிக் கொடுங்கள்: மொபைல் என்பது விளையாட்டுப் பொருளல்ல என எடுத்துச் சொல்ல வேண்டும். சாப்பிடவைக்க, தூங்கவைக்க என சிரமமான விஷயங்களைச் செய்து முடிக்க மொபைலை லஞ்சமாகப் பயன்படுத்தாதீர்கள். அவர்கள் மொபைல் பயன்படுத்தும்போது நாமும் கவனமாக இருக்க வேண்டும். மொபைல் கொடுத்தால் நம்மைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றிருப்பது நிச்சயம் குழந்தைக்கு நல்லதல்ல.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 10 - குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் தரலாமா?

எங்கே பயன்படுத்தக் கூடாது? மருத்துவமனை போன்ற இடங்களில் மொபைலை சைலன்ட் மோடில் போடுவோம். குழந்தையிடம் அதை எடுத்துச் சொல்லி, இங்கேயெல்லாம் அவசரத்துக்கு மட்டுமே மொபைல் பயன் படுத்த வேண்டுமென சொல்லுங்கள். அப்போதுதான் அவர்களும் ‘மொபைல் கொடுங்க’ என நச்சரிக்காமல் இருப்பார்கள்.

மொபைலைப் பாதுகாப்போம்: மொபைலை எப்படிச் சுத்தப்படுத்த வேண்டும்; எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள். மொபைலில் எவையெல்லாம் உடையும் பாகங்கள் என்பதைப் படங்கள் மூலம் சொல்லித் தரலாம். மாதம் ஒருமுறை மொபைலை ஆஃப் செய்துவிட்டு, உலர்ந்த துணியால் சுத்தம் செய்யலாம். அப்போது, குழந்தையையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, அவர்களையும் செய்யச் சொல்லலாம். இதன் மூலம், நாம் அருகில் இல்லாதபோதுகூட மொபைலை கவனமாக அவர்கள் பயன்படுத்தக்கூடும்.

வளர்ந்த குழந்தைகளுக்கு: 10-12 வயதைத் தாண்டியதும் மொபைல் வாங்கித் தரலாம். ஆனால், மொபைலைப் பெற்றோர்களும் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்கலாம் என் பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். அவர்கள் சமூக வலைதளங்களிலிருந்தால் அதன் பாஸ்வேர்டு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இவையெல்லாம் அவர்களுக்குத் தெரிந்தே செய்ய வேண்டும்.

விதிமுறைகள்: இரவு 9 மணிக்கு மேல் மொபைல் கிடையாது, பெற்றோருக்குத் தெரியாமல் எந்த `ஆப்'பையும் டெளன்லோடு செய்யக் கூடாது, மணிக்கணக்கில் பேசக் கூடாது என விதி களைக் குழந்தைகளுடன் கலந்தாலோசித்த பின்னர் வகுத்துக் கொள்ளுங்கள்.

மொபைல் என்றாலே கேம்ஸ் ஆடவும், வீடியோ பார்க்கவும் என நினைக்காமல், அதில் அழகாகப் புகைப்படங்கள் எடுக்க ஊக்கப்படுத்துங்கள். அறிவியல் சோதனைகளுக்கு செயலிகள் இருக்கின்றன. அவற்றின் மூலம் சோதனை களைச் செய்ய சொல்லிக் கொடுங்கள்.

ஒரு குழந்தை மொபைலை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதற்கு அக்குழந்தையின் பெற்றோரே காரணம் என்பதை உணருங்கள்.