Published:Updated:

கேட்ஜெட்ஸ்: வீட்டை தியேட்டராக மாற்ற...

கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம்

ஸ்மார்ட் டிவியில் பல மாடல்கள் வரலாம். ஆனால், டிவியில் இருக்கும் ஸ்பீக்கர்களின் அளவை முடிந்தளவு குறைக்கவே டிவி நிறுவனங்கள் முயற்சிக்கும். அதனால் ஆடியோவில் அவை பெரிதும் கவனம் செலுத்தாது. அதனால்தான் ஆடியோ சிஸ்டம், ஸ்பீக்கர்கள், ஹோம் தியேட்டர்கள் அளவுக்கு இன்று சவுண்ட் பார்களையும் மக்கள் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். அப்படி தற்போது இந்தியச் சந்தையில் சக்கைப் போடு போடும் நான்கு பட்ஜெட் சவுண்ட் பார்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஸெப்ரானிக்ஸ் ஜூக் பார் 9700

தற்போது சந்தையில் இருப்பதிலேயே விலை குறைவான ‘Dolby Atmos’ சவுண்ட்பார் இந்த ஸெப்ரானிக்ஸ் ஜூக் பார் 9700தான். பெரிய திரையரங்குகளில் மட்டும் இருக்கும் இந்த ‘Dolby Atmos’ தொழில்நுட்பத்தை வீட்டுக்குக் கொண்டு வருகிறது இந்த சவுண்ட்பார். சரி ‘Dolby Atmos’ என்றால் என்ன? ஸ்டீரியோ போன்று இதுவும் ஒரு ஆடியோ தொழில்நுட்பம் தானே தவிர, இது தரத்தைக் குறிக்காது. தொடக்க காலத்தில், படங்களுக்கு ஒலி ‘மோனோ’ (mono) தொழில்நுட்பத்தில்தான் வெளிவந்தது. அதாவது ஒரே சவுண்ட் சேனல்தான் பல்வேறு ஸ்பீக்கர்களுக்குச் செல்லும்.

பின்பு ‘ஸ்டீரியோ’ (stereo) தொழில்நுட்பம் வந்தது. இதில் இடது, வலது என இரு சேனல்கள் இருந்தன. வலதுபுற ஸ்பீக்கர்களுக்கு வலது சேனல் ஒலியும், இடதுபுற ஸ்பீக்கர்களுக்கு இடது சேனல் ஒலியும் அனுப்பப்பட்டது. பின்பு Surround தொழில்நுட்பங்கள் வர ஆரம்பித்தன. டிடிஎஸ் (DTS), டால்பி டிஜிட்டல், ஆர்டிஎக்ஸ் (RDX) போன்றவை சில உதாரணங்கள். இதில் வலது, இடது சேனல்கள் சேர்த்து சரவுண்ட் சேனல்கள் இருக்கும். இது இயற்கைச் சத்தங்கள், வாகனச் சத்தங்கள் போன்று காட்சியில் நடக்கும் பல சரவுண்ட் ஒலிகளைக் கொண்டு இருக்கும். இந்தச் சேனல்களில் இருந்து ஆடியோ தியேட்டரின் பின் பக்கம் இருக்கும் சரவுண்ட் ஸ்பீக்கர்களுக்கு லெஃப்ட், ரைட் என அனுப்பப்படும். அது நமக்குக் காட்சி நடக்கும் இடத்தில் இருக்கும் உணர்வைத் தர முயற்சிக்கும்.

கேட்ஜெட்ஸ்: வீட்டை தியேட்டராக மாற்ற...

இதில் மிகவும் அட்வான்ஸ் அட்மாஸ் தொழில்நுட்பம். கிட்டத்தட்ட 64 சேனல்களைக் கொண்டது அட்மாஸ். இவை அனைத்திலும் வேறு வேறு ஒலி இருக்கும். இவை தலைக்கு மேல் இருக்கும் ஸ்பீக்கர்கள், தரையில் இருக்கும் ஸ்பீக்கர்கள் என தியேட்டரின் அனைத்துப் பகுதிகளில் இருக்கும் ஸ்பீக்கர்களுக்கும் அந்த இடத்துக்கான பிரத்யேக சேனல் ஒலியை அனுப்பும். இதனால் ஹெலிகாப்டர் பார்க்கும் சீன் என்றால் ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் தலைக்கு மேலும், தண்ணீர் போகும் சத்தம் காலுக்குக் கீழும் கேட்கும் உணர்வைத் தரும். சரி, இதை எப்படி ஒரு ஒற்றை சவுண்ட் பாரால் செய்ய முடியும்? இந்த ஸெப்ரானிக்ஸ் ஜூக் பார் 9700-ல் இருக்கும் ஸ்பீக்கர்கள் சில மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு ஒலியை மேல்நோக்கி வெளியிடும். இது நம் தலைக்கு மேலிருந்து ஒலி வருவதைப்போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும். இருந்தும் முழுமையான ‘Dolby Atmos’ அனுபவத்தைப் பெற அதற்கேற்ற செட்-அப் இருந்தால்தான் சரியாக இருக்கும். இருந்தும் ஒரு சவுண்ட் பாராக சிறப்பாகவே இருக்கிறது ஜூக் பார் 9700. இதை வாங்குவதற்கு முன்பு Atmos சப்போர்ட்டுக்குத் தேவையான விஷயங்கள் உங்கள் டிவியில் இருக்கிறதா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்துக் கொள்வது நல்லது.

ப்ளஸ்

பெரிய அறையை நிரப்பும் ஆடியோ

இந்த விலையில் டால்பி அட்மாஸ் சப்போர்ட்

மைனஸ்

ஒவ்வொரு முறையும் இன்புட்/ வால்யூமை செட் செய்ய வேண்டும்

விலை:

₹15,999 - 17,999*

ம்யூலோ அரினா 5000 சவுண்ட் பார்

5,000 ரூபாய்க்குக் குறைவான விலையில் அமேசான் சாய்ஸாக இருக்கிறது இந்த ம்யூலோ அரினா 5000 சவுண்ட் பார். இது ஒரு 2.1 சேனல் சவுண்ட் பார். அதாவது இடது ஒரு ஸ்பீக்கரும் வலது ஒரு ஸ்பீக்கரும் சவுண்ட் பாருக்குள் இருக்கும். அதன்மூலம் ஸ்டீரியோ ஆடியோவை நமக்கு வழங்கும். இத்துடன் பேஸ்(bass) சவுண்ட்டுக்காக 25 W சப்-வூஃபர் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இந்த விலையில் சப்-வூஃபர் தருவது இதன் முக்கிய ஹைலைட். புளூடூத், RCA, AUX வழி உங்கள் டிவியை இந்த சவுண்ட் பாருடன் கனெக்ட் செய்யலாம். ரிமோட் ஒன்றும் தருகிறார்கள். ஒரு சிறிய அறைக்கு காம்பேக்ட்டான சவுண்ட் பார் வேண்டும் என நினைப்பவர்கள் இந்த ம்யூலோ சவுண்ட் பாரை டிக் அடிக்கலாம்.

கேட்ஜெட்ஸ்: வீட்டை தியேட்டராக மாற்ற...

ப்ளஸ்:

குறைவான விலை

காம்பேக்ட் டிசைன்

ஆடியோ தரம்

மைனஸ்

பெரிய அறையை நிரப்பும் ஆடியோ அவுட்புட் இல்லை

விலை:

₹3,699 - 4,999*

போட் அவான்டே 1500

கொஞ்சம் விலை அதிகம் என்றாலும், அதற்கான தரத்துடன் வருகிறது போட் அவான்டே 1500 சவுண்ட் பார். தரமான சப்-வூஃபர், ஸ்டைலிஷ் டிசைன் என இந்த விலையில் போட் அவான்டே 1500 சவுண்ட் பாரை டிக் அடிக்க எக்கச்சக்க காரணங்கள் இருக்கின்றன. HDMI (ARC) சப்போர்ட் உண்டு என்பதால், உங்கள் தொலைக்காட்சியை நேரடியாக சவுண்ட் பாருடன் HDMI கேபிள் மூலம் கனெக்ட் செய்ய முடியும். இப்படிச் செய்யும்போது டிவியின் வால்யூமை ஏற்றினாலே சவுண்ட் பாரின் வால்யூமும் ஏறும். அப்படிச் செய்ய முடியவில்லை என்றாலும், தனி ரிமோட் ஒன்றும் கொடுத்திருக்கிறார்கள். ஸ்டீரியோ ஆடியோவுடன் வரும் இது, ஒரு பெரிய அறையை நிரப்பும் அளவுக்குப் பலமான ஆடியோ அவுட்புட்டைத் தருகிறது. பாடல்கள் கேட்பது, படம் பார்ப்பது என அனைத்துக்கும் பொருத்தமாக இருக்கும் இந்த போட் அவான்டே 1500.

கேட்ஜெட்ஸ்: வீட்டை தியேட்டராக மாற்ற...

ப்ளஸ்

தரமான பேஸ் ஆடியோ

ஸ்டைலிஷ் டிசைன்

மைனஸ்

தரமில்லாத ரிமோட்

சர்வீஸ் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது பரவலான குற்றச்சாட்டு

விலை

₹5,999-7,999*

Mi சவுண்ட்பார்

இப்போது சந்தையில் பட்ஜெட் விலையில் மிகவும் பிரபலமாக இருக்கும் சவுண்ட் பார் Mi சவுண்ட் பாராகத்தான் இருக்கும். ஷாவ்மியின் முந்தைய சாதனங்களைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது இது.

fabric ஃபினிஷுடன் பார்க்க செம ஸ்டைலிஷ் ஆக இருக்கிறது. சுமார் 2 கிலோ எடையுள்ள இது வெள்ளை, கறுப்பு என இரு நிறங்களில் வருகிறது. புளூடூத், 3.5 AUX இன்புட், ஃபைபர் ஆப்டிக் இன்புட், co-axial SPDIF இன்புட் மற்றும் சிவப்பு, மஞ்சள் ஆடியோ இன்புட் என மொத்தம் 5 முறைகளில் இந்த சவுண்ட் பார்களைக் கனெக்ட் செய்ய முடியும். இவற்றை செலக்ட் செய்ய தனித் தனி பட்டன்களும் LED லைட்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கிட்டத்தட்ட எந்த டிவியையும் இதனுடன் கனெக்ட் செய்யலாம். HDMI (ARC) வசதி இல்லை, ரிமோட்டும் இல்லை என்பதால் ஒவ்வொரு முறையும் எழுந்து சென்றுதான் வால்யூமை ஏற்றி இறக்க முடியும். மொத்த சவுண்ட் பாரையும் 8 யூனிட்டுகளாகப் பிரித்துவிடலாம். இரண்டு பேஸ் (Bass) யூனிட்கள், இரண்டு dome treble யூனிட்கள், நான்கு பாஸ்ஸிவ் ரேடியேட்டர்கள். இதில் 2 பேஸ் யூனிட்கள் அதிர்வுகளை உணர வைக்கும் பேஸ் சத்தத்தையும், dome treble யூனிட்கள் கண்ணாடி உடைவது போன்ற treble சத்தத்தையும் தரும். இதனால் தனியாக வூஃபர் எதுவும் இல்லாமலேயே இதன் பேஸ் சத்தம் எதிர்பார்த்ததை ஓரளவு நன்றாகவே இருக்கிறது. படம்/சீரிஸ் பார்ப்பதற்கு உகந்த சவுண்ட் பார் இது.

கேட்ஜெட்ஸ்: வீட்டை தியேட்டராக மாற்ற...

ப்ளஸ்

படம் மற்றும் சீரிஸ் பார்ப்பதற்கு ஏற்ற ஆடியோ தரம்

அழகிய டிசைன்

மைனஸ்

ரிமோட் கிடையாது

இசை கேட்பதற்கு உகந்தது இல்லை.

விலை:

₹4,999*