Published:Updated:

கேட்ஜெட்ஸ் - 2: - ஆப்பிள் வழியில் சாம்சங்! S21 போன்களில் என்ன ஸ்பெஷல்?

மூன்று போன்களிலும் விலை குறைவானது மட்டுமல்ல; எடை குறைவானதும் இதுதான்.

பிரீமியம் ஸ்டோரி
ந்த ஆண்டு, S21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 3 மாடல்கள் மட்டுமின்றி, மேலும் இரண்டு கேட்ஜெட்களையும் கொண்டு வந்திருக்கிறது சாம்சங்.

பெரும்பாலும் கேமரா, டிஸ்ப்ளே மற்றும் ப்ராசஸர் என்ற மூன்று விஷயங்களில்தான் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்தும். காரணம் இவைதான் அவற்றின் விற்பனையைத் தீர்மானிப்பவை. சாம்சங்கைப் பொறுத்தவரையில் அதன் டிஸ்ப்ளே குவாலிட்டியைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. போட்டி நிறுவனமான ஆப்பிள்கூட தனது ஐபோனுக்கு டிஸ்ப்ளேவை சாம்சங்கிடம் இருந்துதான் வாங்குகிறது. ஆனால், ஆப்பிளிடம் சாம்சங் சறுக்குமிடம் கேமராவும், ப்ராசஸரும்தான்.

கேட்ஜெட்ஸ் - 2:  - ஆப்பிள் வழியில் சாம்சங்! S21 போன்களில் என்ன ஸ்பெஷல்?

S சீரிஸ் ஸ்மார்ட்போனைப் பொறுத்தவரையில் அமெரிக்காவிலும், சீனாவிலும் குவால்காம் ஸ்நாப்டிராகன் புராசஸரைப் பயன்படுத்தும் சாம்சங் நிறுவனம், மற்ற நாடுகளில் அதன் சொந்தத் தயாரிப்பான Exynos புராசஸரைப் பயன்படுத்தி வருகிறது. ஸ்நாப்டிராகன் புராசாஸருடன் ஒப்பிடும்போது Exynos-ன் செயல்திறன் கொஞ்சம் மந்தம்தான். ஆனால் இந்த முறை S- சீரிஸ் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்டுள்ள Exynos 2100 ப்ராசஸர் அந்தக் குறையைச் சரி செய்யும் என்று தெரிகிறது. கேமராவும் இந்த முறை ஐபோனுக்கு நிகராக இருக்கப் போகிறது. 12MP wide + 12MP Ultra wide+ 64MP Telephoto என்ற மூன்று கேமராக்கள் S21 மற்றும் S21+ போன்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

கேட்ஜெட்ஸ் - 2:  - ஆப்பிள் வழியில் சாம்சங்! S21 போன்களில் என்ன ஸ்பெஷல்?

சாம்சங் கேலக்ஸி S21

மூன்று போன்களிலும் விலை குறைவானது மட்டுமல்ல; எடை குறைவானதும் இதுதான். 4000mAh பேட்டரி இருந்தாலும், எடை வெறும் 169 கிராம் மட்டுமே இருப்பது போனின் பின்பக்கம் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ள தால்தான். முன்புறம் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 GB RAM - 128 GB இன்டர்னல் மெமரி வேரியன்ட் 69,999 ரூபாய்க்குக் கிடைக்கும். 6.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த போனில் Dynamic AMOLED 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S21+

S21-க்கும் இந்த போனுக்கும் இடையில் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. டிஸ்ப்ளே மற்றும் பேட்டரியைத் தவிர மற்ற விஷயங்கள் அனைத்தும் ஒன்றுதான். இதில் இருப்பது சற்றே பெரிய 6.7 இன்ச் Dynamic AMOLED டிஸ்ப்ளே. 4800mAh திறன் கொண்ட பேட்டரி கொடுத்திருக்கிறார்கள். 8GB+ 128GB வேரியன்ட் விலை 81,999 ரூபாய்.

சாம்சங் கேலக்ஸி S21 அல்ட்ரா

S சீரிஸில் இருக்கும் மற்ற இரண்டு போன்களுடனும் ஒப்பிடும்போது வசதிகளில் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பது இந்த ஸ்மார்ட்போனில்தான். இதில் முன்பக்கம் மட்டுமல்ல; பின்பக்கமும் கொரில்லா கிளாஸ் பயன்படுத்தப் பட்டுள்ளது. எனவே எடையும் சற்று அதிகம் (227 கிராம்). இதன் கேமரா டிசைன், இதற்கு முன் வேறு சாம்சங் போன்களில் இல்லாதது. 6.8 இன்ச் Dynamic AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் HDR10+ போன்ற வசதிகளும் உண்டு.

கேட்ஜெட்ஸ் - 2:  - ஆப்பிள் வழியில் சாம்சங்! S21 போன்களில் என்ன ஸ்பெஷல்?

இதில் பின்பக்கமாக 108MP Wide +12MP Ultra wide + 10MP Telephoto + 10MP Telephoto என மொத்தம் நான்கு கேமராக்கள் இருக்கின்றன. இதன் மூலமாக அதிகபட்சமாக 8K வீடியோவை எடுக்கலாம், அது மட்டுமின்றி, 30X அளவுக்கு zoom-ம் செய்து கொள்ளலாம். முன்பக்கம் 40 MP கேமரா. முதல் முறையாக நோட் சீரிஸ் போன்களில் மட்டும் இருந்த S-Pen பயன்பாட்டு சப்போர்ட்டை இந்த ஸ்மார்ட்போனுக்குக் கொண்டு வந்துள்ளது சாம்சங். 256GB+12GB RAM மாடலின் விலை 1,05,999 ரூபாய்.

கேட்ஜெட்ஸ் - 2:  - ஆப்பிள் வழியில் சாம்சங்! S21 போன்களில் என்ன ஸ்பெஷல்?

ஆப்பிள் வழியில் சாம்சங்!

இதுவரை கேலக்ஸி ஸ்மார்ட் போன்களுடன் சார்ஜர் மற்றும் இயர்போன் ஆகியவை கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த முறை அவற்றை ஸ்மார்ட்போன் பாக்ஸில் இருந்து நீக்கியிருக்கிறது. கடந்த வருடம் ஐபோன் 12 அறிமுகத்தின் போது ஆப்பிள் இப்படி ஒரு முடிவு எடுத்த போது அதைக் கிண்டல் அடித்தது சாம்சங். ஆனால்... இப்போது?

கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மற்றும் ஸ்மார்ட்டேக்

முந்தைய மாடல் கேலக்ஸி இயர்பட்ஸுடன் ஒப்பிடும்போது, இந்த முறை பல்வேறு மாற்றங்களை கேலக்ஸி பட்ஸ் ப்ரோவில் கொண்டு வந்திருக்கிறது சாம்சங். இதில் உள்ள ANC தொழில்நுட்பம் 99% வெளியில் இருக்கும் ஒலியைத் தடுத்துவிடுமாம். இயர்பட்ஸ் போன்ற குறுகிய கேட்ஜெட்களில் ஹோம் தியேட்டர் எஃபெக்ட் கொண்டு வருவது சிக்கலான விஷயம். அதற்கு ஒரு தீர்வைக் கொண்டு வந்திருக்கிறது சாம்சங். 1mm woofer மற்றும் 6.5mm tweeter ஆகியவை அடங்கிய ஒரு சிறிய ஸ்பீக்கர் அமைப்பின் மூலமாக இந்த கேலக்ஸி பட்ஸ் ப்ரோவில் தரமான இசையைக் கேட்க முடியும். அது மட்டுமில்லாமல், டால்பி நிறுவனத்துடன் இணைந்து தலையின் அசைவுக்கு ஏற்ப 360°ஆடியோவை வழங்கும் தொழில்நுட்பத்தையும் இதில் கொடுத்திருக்கிறது. கேலக்ஸி பட்ஸ் ப்ரோ விலை 15,990 ரூபாய்.

இதோடு பொருள்கள் தொலைந்து போகாமல் இருக்க, அவற்றைக் கண்டுபிடிக்க உதவும் ஸ்மார்ட்டேக் என்ற கேட்ஜெட்டையும் 2,249 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு