ஏனென்றால் பாப்-அப் கேமரா, HDR+ டிஸ்ப்ளே, நான்கு ஐந்து கேமராக்கள் என இன்று ஸ்மார்ட்போன்கள் வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. இதனால் தங்கள் டிரேடு-மார்க்காக ஒரு புதிய விஷயத்தை ஸ்மார்ட்போன் உலகுக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற முனைப்பு அனைத்து நிறுவனங்களிடமும் தற்போது இருக்கிறது. இந்த நிறுவனங்கள் கொண்டுவர நினைக்கும் புதுமை ஹார்டுவேரிலும் இருக்கலாம், சாஃப்ட்வேரிலும் இருக்கலாம்.

எல்லா வருடமும் இந்தப் போட்டியால் புதிதாக அறிமுகமாகும் தொழில்நுட்பங்களை எதிர்பார்த்து டெக் ரசிகர்கள் காத்திருப்பர். அதற்காகப் பார்க்க வேண்டும் எனச் சில முக்கிய நிறுவனங்களின் அறிமுக நிகழ்வுகளை டிக் அடித்து வைத்திருப்பர். அப்படியான நிகழ்வுகளில் ஒன்றுதான் வருடாவருடம் நடக்கும் சாம்சங் அறிமுக நிகழ்வு. ஆப்பிள், கூகுள் நிறுவனங்களுக்கு அடுத்து புதிய மொபைல் தொழில்நுட்பங்கள் அதிகம் அறிமுகமாகும் நிகழ்ச்சி இதுதான். கடந்த வருடம்கூட இந்த நிகழ்வில்தான் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஃபோல்ட்டை (Fold) அறிமுகப்படுத்தியிருந்தது சாம்சங். அப்படி இந்த ஆண்டு என்ன ஸ்பெஷல் என்ற மக்களின் காத்திருப்புக்குப் பதில் சொல்லிச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது `Samsung Unpacked Event.' இந்த நிகழ்வின் முக்கிய ஹைலைட்ஸ் என்னவென்று இனி பார்ப்போம்.
கேலக்ஸி Z flip:

சமீபத்தில் மோட்டோரோலா தனது Razr ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருந்தது. ஸ்மார்ட்போன்கள் வருவதற்கு முன்பு மிகவும் பிரபலமாக இருந்த ஃப்ளிப் போன் டிசைனில் இன்றைய நவீன ஸ்மார்ட்போனை இந்த மாடல் மூலம் உருவாக்கியிருந்தது மோட்டோரோலா. இதற்குப் போட்டியாக சாம்சங் களமிறக்கியிருக்கும் மாடல்தான் கேலக்ஸி Z Flip. ஏற்கெனவே இதைப் பற்றிய குட்டி ப்ரோமோ ஒன்று ஆஸ்கர் விருது விழாவின் நடுவே ஒளிபரப்பப்பட்டிருந்தது என்றாலும் இந்த நிகழ்வில்தான் இதுகுறித்த அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டிருக்கிறது. மடக்கிக் குட்டியாக வைத்துக்கொள்ளக்கூடிய இந்த போன் மற்ற ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கலிருந்து பல முன்னேற்றங்கள் கண்டுள்ளது. அதில் முக்கியமான முன்னேற்றம் ஃபோல்டபிள் டிஸ்ப்ளேயில் கிளாஸ் (Glass) கொடுத்தது. இதற்கு முன்பு மடக்கிக்கொள்ள ஏதுவாக இருக்காது என பிளாஸ்டிக்கே இதுபோன்ற டிஸ்ப்ளேக்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால் அவை எளிதில் ஸ்கிராச் ஆகும் வண்ணம் அமைந்தன. ஃபோல்டபிள் டிஸ்ப்ளேக்களுக்கு இன்னும் முறையான டெம்பர் கிளாஸ்களும் வடிவமைக்கப்படவில்லை. இதனால் தற்போது Z Flip கிளாஸ் டிஸ்ப்ளேவுடன் வந்திருப்பது மிகப்பெரிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

ஃபோல்டபிள் டிஸ்ப்ளேக்கள் ஒழுங்காக இயங்க மிகவும் முக்கியமானது ஹிஞ்ச் (hinge). அதுவும் இந்த Z flip-ல் மேம்பட்டிருக்கிறது. 180 டிகிரி வரை எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் இதை மடக்கி வைத்துக்கொள்ளலாம். இதை 2,00,000 தடவை வரை எந்த பிரச்னையும் இன்றி மடக்கலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறது சாம்சங்.
மடக்கி சிறியதாக வைத்துக்கொள்ளும்போது நேரம் மற்றும் நோட்டிஃபிகேஷன்களை காட்ட சிறியதாக ஒரு டிஸ்ப்ளேவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை 'Cover Display' என அழைக்கின்றனர். இதைக் கொண்டு செல்ஃபிகள்கூட எடுக்கலாம். ஆனால் அவுட்புட்டை பார்க்கும் அளவுக்கு பெரியதாக இல்லை இந்த டிஸ்ப்ளே. மற்றபடி சாம்சங்கின் ப்ரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் என்ன வசதிகள் இருக்குமோ அனைத்துமே இதிலும் இருக்கிறது.
இதன் அமெரிக்க விலை $1,380.
இந்திய விலையில் சுமார் 1.1 லட்சம் முதல் 1.25 லட்சம் ரூபாய் வரை இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த வாரம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
இந்த விலையில் இந்தியாவில் இதை யார் வாங்கப்போகிறார்கள் எனக் கேட்பவர்களுக்கு ஒரு குட்டித்தகவல்,
கேலக்ஸி S20 சீரிஸ்
தற்போது சாம்சங்கின் டாப் எண்டு ஸ்மார்ட்போனாக இருக்கும் கேலக்ஸி S10-ன் அடுத்த அப்டேட்டான S20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் இந்த நிகழ்வில் அறிமுகமாகின.

'சரி S8, S9, S10-ன்னு வரிசையாகத்தானே இந்த ஸ்மார்ட்போன்களுக்கு பேர் வச்சுட்டு இருந்தாங்க. அப்புறம் ஏன் திடீர்னு நேரா S20-னு பெயர்' என்ற கேள்வி இந்நேரம் உங்களுக்கு வந்திருக்கும்.
இதற்கு சாம்சங்கின் பதில் என்ன தெரியுமா? கேலக்ஸி போன்களில் ஒரு புதிய தலைமுறையைக் குறிப்பதாக, இது அமையும் என்பதாலேயே நேராக S20 என்று இதற்குப் பெயர் வைத்துள்ளனராம்.

அப்படி என்ன பெரிய மாற்றங்கள் வந்திருக்கின்றன என்று கேட்டால், கேமரா டிபார்ட்மென்ட் பக்கம் கைகாட்டுகிறது சாம்சங். இப்போது ப்ரீமியம் போன்களில் பழகிவிட்ட அதே ட்ரிபிள் கேமரா செட்-அப். ஆனால் S20, S20+ ஆகிய மாடல்கள் 64 MP முதன்மை கேமராவுடனும்; S20 Ultra 108 MP முதன்மை கேமராவுடனும் வெளிவருவது ஸ்பெஷல்! பொதுவாக மிட்-ரேஞ்ச் போன்களில்தான் இது போன்ற அதிகப்படியான மெகாபிக்ஸல் கேமராக்கள் இருக்கும். பெரும்பாலும் சற்றே ஓகேவான கேமரா தரத்தை உயர்த்தி காட்டவே இப்படி அதிக மெகாபிக்ஸல் கேமராக்கள் தங்களிடம் இருப்பதாகக் காட்டும் மொபைல் நிறுவனங்கள். 12 MP கேமராவிலேயே ஆப்பிள், கூகுள், சாம்சங் போன்ற நிறுவனங்கள் அட்டகாசமான புகைப்படத்தரத்தை கொடுத்து வருகின்றன என்பதால் மெகாபிக்ஸலை மட்டும் வைத்து கேமராவின் தரத்தை முடிவுசெய்துவிட முடியாது.
ஆனால், இந்த 64, 108 MP கேமரா அப்படி பெயரளவில் மட்டும் சிறந்த கேமராவாக இருக்காது, செயலிலும் அத்தனை மெகாபிக்ஸல்களுக்கு வேலை இருக்கும் என்கிறது சாம்சங். இதனால் S20, S20+ கேமராக்களில் 30X வரையிலான zoom இருக்கும். இது S20 Ultra-வில் 100x வரை இருக்குமாம். இதை விழாவில் சோதனை செய்துபார்த்தவர்கள், 'உண்மையில் இது வேற லெவல்' என சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். மேலும் 8K ரெகார்டிங், ஒரே நேரத்தில் அனைத்து கேமராக்களிலும் படம்பிடிப்பது எனப் பல புதிய வசதிகள் இந்த S20 சீரிஸில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பேட்டரியைப் பொறுத்தவரை S20 4000mAh பேட்டரியுடனும், S20+ 4,500mAh பேட்டரியுடனும், S20 Ultra 5,000mAh பேட்டரியுடனும் வெளிவரும். இதில் S20 Ultra 45W சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும். மத்த விஷயங்களிலும் உட்சபட்ச ஸ்பெக்ஸ்தான் இந்த S20 சீரிஸில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 5G வேரியன்ட்களும் இந்த விழாவில் அறிமுகமானது.
இந்த S20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வரும் மார்ச் 8, பெண்கள் தினத்தன்று விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் S20 சுமார் 70,000 ரூபாய் விலையில் விற்பனைக்கு வரும், S20 Ultra-வின் விலை லட்சத்தைத் தாண்டும்.
இந்த அதிரடி அறிமுகங்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங்கை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லுமா... நீங்க என்ன நினைக்குறீங்க?