கேமிங் மான்ஸ்டர், ஒன்ப்ளஸுக்கு போட்டி, சீன நிறுவனங்களுக்கு மாற்று... ROG போன் III என்ன ஸ்பெஷல்?

நல்ல பேட்டரி, வேற லெவல் பர்ஃபாமன்ஸ், கேமிங்கிற்கென ஸ்பெஷல் வசதிகள் எனக் கலக்கிய ROG போன் II-ன் அடுத்த வெர்ஷன் இந்த ROG போன் III.
சில தினங்களுக்கு முன்தான் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போன்களில் ஒன்றான ஒன்ப்ளஸ் நார்டு அறிமுகமானது. 24,999 ரூபாய்க்கு அறிமுகமான இந்த போன் இந்திய டெக் ரசிகர்களிடம் பெரும் பேசுபொருளானது. இதற்கு நடுவில் சத்தமே இல்லாமல் அறிமுகமாகியிருக்கிறது அசுஸின் ROG போன் III. கேமிங்கிற்கு பெயர் பெற்றவை அசுஸின் பிரபல 'Republic Of Gamers' ரக சாதனங்கள்.

சமீபகாலமாக இந்தப் பெயரில் கேமிங் போன்களையும் அறிமுகம் செய்துவருகிறது அசுஸ் நிறுவனம். கடந்த வருடம் இப்படி அறிமுகம் செய்யப்பட்ட ROG போன் II மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. நல்ல பேட்டரி, வேற லெவல் பர்ஃபாமன்ஸ், கேமிங்கிற்கென ஸ்பெஷல் வசதிகள் எனக் கலக்கிய அந்தப் போனின் அடுத்த வெர்ஷன் தற்போது ரெடி. இந்த ROG போன் III-ல் என்ன ஸ்பெஷல்?
மற்ற பிரீமியம் போன்கள் போல அல்லாமல் மேலும் கீழும் சிறிய பேஸல்கள் உள்ளன. 'இந்த விலையில் ஃபுல் டிஸ்ப்ளே இல்லாமல் எப்படி பாஸ்?' எனக் கேட்பவர்களுக்குப் பதில் வைத்திருக்கிறது அசுஸ். இதற்குப் பின் ஒரு காரணம் இருக்கிறதாம். பொதுவாக கேம் ஆடும்போது போனை நாம் முன்பக்கமாக இரண்டு கைகள் கொண்டும் பிடித்துக்கொள்வது வழக்கம். முன்பக்கம் முழுவதுமே டிஸ்ப்ளே இருந்தால் இப்படிப் பிடிக்கும்போது தவறுதலாக அது 'டச்' என எடுத்துக்கொள்ளப்படலாம். இதைத் தவிர்த்து கேமிங்கின்போது நல்ல கிரிப் கிடைக்கவே இதைச் செய்திருக்கிறார்கள். இதில் கூடுதல் அனுகூலம். இரண்டு ஸ்பீக்கர்களுமே முன்பக்கமே வைத்திருக்கிறார்கள். இது முழுமையான கேமிங் அனுபவத்தைத் தருகிறது. வண்ணமிகு பின்புற டிசைன் பற்றி நான் விளக்குவதைவிட நீங்களே பார்த்துவிடுவது சிறந்தது.

அலர்ட்: ஸ்பெக்ஸ்ல மட்டுமல்ல மொத்தமாகவே கொஞ்சம் வெயிட்டான போன்தான். எடை- 240 கிராம்!
சாதாரண போன்களிலேயே இன்று ரீ-ஃப்ரெஷ் ரேட் அதிகமாக (120 Hz வரை) கொடுக்க ஆரம்பித்துவிட்டன நிறுவனங்கள். அதனால் அசுஸ் இன்னும் ஒரு படி மேலே சென்று 144 Hz டிஸ்ப்ளே கொடுத்திருக்கிறார்கள். அதாவது, ஒரு விநாடிக்கு 144 தடவைகள் வரை இந்த டிஸ்ப்ளேவால் ரீ-ஃப்ரெஷ் ஆக முடியும். HDR 10+ சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள். அதிகபட்ச பிரைட்னெஸ் 1000 nits. கேமிங் பிரியர்களுக்கு மட்டுமல்ல அனைத்துப் பயன்பாடுகளுக்குமே பக்கா டிஸ்ப்ளே இது.

2.5D Corning Gorilla Glass 6 பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். ஒன்ப்ளஸ் போன்கள் போல முன்புறம் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
குவால்கம் ஸ்னாப்டிராகன் 865+ புராசஸருடன் வெளிவரும் முதல் போன் இதுதான். தற்போது பிரீமியம் போன்கள் பயன்படுத்தும் ஸ்னாப்டிராகன் 865 புராசஸரின் overclocked வெர்ஷன் இது. 8GB, 12GB என இரண்டு RAM(LPDDR5) வேரியன்ட்களிலும், 256 GB இரண்டு ஸ்டோரேஜ் (UFS 3.1) வேரியன்ட்களிலும் கிடைக்கிறது ROG போன் III.

இது இல்லாமல் மேம்பட்ட கூலிங் மெக்கானிசம் கொடுத்திருக்கிறார்கள் (6x larger heatsink, redesigned Copper 3D vapor chamber, and a larger graphite film). இது எந்த சூழலிலும் போனை சூடாகாமல் பார்த்துக்கொள்ளும். ஹை-கிராபிக்ஸ் கேமிங்கில் பிரச்னையே இருக்காது. மேலும் கேமிங்கிற்கு உதவும் வகையில் 'Air Triggers 3' என்ற அல்ட்ரா-சோனிக் சென்சாரும் கொடுத்திருக்கிறார்கள். இது PUBG போன்ற கேம்களில் பெருமளவில் உதவும். மற்ற சாதனங்கள் ஏதேனும் கனெக்ட் செய்யக் கூடுதலாக ஒரு USB-C போர்ட்டும் கொடுத்திருக்கிறார்கள், குறிப்பாக, லேண்ட்ஸ்கேப் மோடில் பயன்படுத்தும்போது இது பயனுள்ளதாக இருக்கும்.

ட்ரிபிள் கேமரா செட்-அப் கொடுத்திருக்கிறார்கள். 64MP (f/1.8, சோனி IMX686 சென்சார்) மெயின் கேமரா, 13MP (f/2.5, 125-degree FOV) அல்ட்ரா-வைடு கேமரா, 5MP மேக்ரோ கேமரா என நல்ல கேமரா ஸ்பெக்ஸ்தான். ROG போன் II போல இதுவும் கேமரா டிபார்ட்மென்ட்டில் குறைகள் வைக்காதென நம்பலாம். மெயின் கேமராவில் 8K வீடியோ ரெகார்டிங் சப்போர்ட் இருக்கிறது. முன்பக்கம் 24 MP செல்ஃபி கேமரா கொடுத்திருக்கிறார்கள்.
6,000mAh பேட்டரி கொடுத்திருக்கிறார்கள். இப்படியான ஒரு போனுக்கு அது அவசியமும்கூட. 30W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்திருக்கிறார்கள். இதனால் பேட்டரியைப் பொறுத்தவரையில் எந்தக் குறையும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு குறையாக ஹெட்போன் ஜாக் இல்லாததைச் சொல்லலாம். என்னதான் ஒயர்லெஸ் இயர்போன்கள் பல வந்துவிட்டாலும் ஆடியோவில் எந்த ஒரு தாமதமும் இல்லாமல் Pubg, COD போன்ற கேம்கள் ஆட ஒயர்டு இயர்போன்ஸ்தான் பெஸ்ட். இதற்கு ஒரு தீர்வு வைத்திருக்கிறார்கள். அது AeroActive Cooler 3. போனுடன் தரப்படும் இதைக் கூலராகப் பயன்படுத்தலாம். 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைக் குறைக்கும் இதில் ஹெட்போன் ஜாக்கும் இருக்கும்.
ROG போன் III ஸ்பெக்ஸ்:
அளவு: 171 x 78 x 9.85 மிமீ
எடை: 240 கிராம்
டிஸ்ப்ளே: 6.59-இன்ச் Full-HD+ AMOLED (144 Hz, 1080 x 2340 pixels)
புராசஸர்: ஸ்னாப்டிராகன் 865+
RAM: 8GB/ 12GB LPDDR5
ஸ்டோரேஜ்: 128GB/ 256GB UFS3.1
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பின்பக்க கேமரா: 64MP (f/1.8, சோனி IMX686 சென்சார்) மெயின் கேமரா, 13MP (f/2.5, 125-degree FOV) அல்ட்ரா-வைடு கேமரா, 5MP மேக்ரோ கேமரா
முன்பக்க கேமரா: 24MP செல்ஃபி கேமரா
பேட்டரி: 6000 mAh
சார்ஜிங்: 30W ஃபாஸ்ட் சார்ஜிங்
மற்ற சப்போர்ட்: 5G, Bluetooth 5.1, Wi-Fi 6
ஆகஸ்ட் 6 ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது ROG போன் III.
இந்த விலையில் ஒன்ப்ளஸ் 8 ப்ரோ, Mi 10 போன்ற போனகளுடன் போட்டிப்போடுகிறது ROG போன் III. கடந்த வருட 37,999 விலையிலிருந்து நல்ல ஒரு உயர்வையும் கண்டிருக்கிறது. ஆனால், முதல் பார்வையில் விலைக்கு ஏற்ற வசதிகளை அசுஸ் எடுத்துவந்திருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. கேமிங் பிரியர்கள் பட்ஜெட் செட்டானால் கண்ணை மூடிவிட்டு ROG போன் III-யை டிக் அடித்துவிடலாம். மற்றவர்களுக்கும் இது நல்ல சாய்ஸாகவே தெரிகிறது. முக்கியமாகப் பலரும் சீன தயாரிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்ற முடிவுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு இந்த விலையில் சிறந்த மாற்று ROG போன் III. அசுஸ் ஒரு தைவான் நிறுவனம். ஆனால், இந்த ஏரியாவில் ஒன்ப்ளஸுக்கு இருக்கும் ஆதிக்கத்தை மொத்தமாக காலி செய்யும் அளவுக்கு இந்த போன் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
இந்த போன் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றும் சந்தேகங்களை கமென்ட்டில் பதிவிடுங்கள்!