கையெழுத்து தான் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்று கூறுவார்கள்; ஆனால் அதெல்லாம் பொய். எந்த மருத்துவரின் கையெழுத்தாவது புரிந்திருக்கிறதா அல்லது நமக்குப் புரியக்கூடாது என்பதற்காகவே இப்படி எழுதுகிறார்களா... இப்படியெல்லாம் உங்களுக்குத் தோன்றியிருக்கலாம். இனிமேல் உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம்.

மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துச் சீட்டில் உள்ள மருந்துகளின் பெயர்களை அறிந்து கொள்ளும் புதிய அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்த உள்ளது.
அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், 2022 டிசம்பர் 19-ம் தேதி நடத்திய `கூகுள் ஃபார் இந்தியா’ என்ற வருடாந்தர நிகழ்வில், கூகுளின் புதிய அம்சங்கள் குறித்து அறிவித்துள்ளது.
அதில், மருத்துவர்களின் மருந்துச்சீட்டை அறிந்து கொள்ளும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) மற்றும் மெஷின் லேர்னிங் (Machine Learning) மாடல் குறித்து வேலை செய்து வருவதாக அறிவித்துள்ளது.
இந்தப் புதிய அம்சம் ஆராய்ச்சியில் இருப்பதால், இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தவில்லை. ஒருவேளை இவை பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில், மருந்துச்சீட்டை புகைப்படம் எடுத்தோ அல்லது கேலரியில் உள்ள புகைப்படத்தை எடுத்தோ, அதை கூகுள் ஆப்பில் பதிவிடும் போது, என்னென்ன மாத்திரை மருந்துகள் எழுதப்பட்டுள்ளன என்பதைக் காட்டும்.

`இந்தத் தொழில்நுட்பம் கையெழுத்தில் உள்ள மருத்துவ ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றும். இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கூகுள் லென்ஸில் உருவாக்கப்படும். இது நிஜ உலகின் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, இந்த சிஸ்டத்தில் முடிக்கப்பட வேண்டிய அதிக வேலைகள் உள்ளன' என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே கூகுள் லென்ஸை பயன்படுத்தி, என்ன வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். மொழிபெயர்ப்பு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.