Published:Updated:

வாட்ஸ்ஆப் புரட்சியாளர்களே... ஃபார்வர்டு பண்ணாதீங்க... பாழா போகாதீங்க!

வாட்ஸாப்

வதந்திகளைப் பரப்புவதையே குறியாக வைத்து இயங்குகிறவர்களின் இலக்குக்கு, நாம் ஏன் பலியாக வேண்டும். நாம் இரையாவது மட்டுமின்றி நம் உறவினர்களையும், நண்பர்களையும் இந்தக் குழிக்குள் தள்ளி விடுகிறோம் என்பதை ஏன் உணர மறுக்கிறோம்.

Published:Updated:

வாட்ஸ்ஆப் புரட்சியாளர்களே... ஃபார்வர்டு பண்ணாதீங்க... பாழா போகாதீங்க!

வதந்திகளைப் பரப்புவதையே குறியாக வைத்து இயங்குகிறவர்களின் இலக்குக்கு, நாம் ஏன் பலியாக வேண்டும். நாம் இரையாவது மட்டுமின்றி நம் உறவினர்களையும், நண்பர்களையும் இந்தக் குழிக்குள் தள்ளி விடுகிறோம் என்பதை ஏன் உணர மறுக்கிறோம்.

வாட்ஸாப்

காலையில் எழுந்ததுமே, இரண்டு கைகளையும் நன்றாக தேய்த்துவிட்டு, முகத்தில் அப்படியே கைகளை அழுத்தி, அதில் கண் விழித்தது ஒரு காலம். இப்போதெல்லாம் படுக்கையில் இருந்தபடியே, அருகில் கிடக்கும் ஸ்மார்ட் போனை எடுத்து, ஒற்றைவிரலால் சர்சர்ரென்று தேய்த்து, வாட்ஸ்ஆப்பில்தான் ஒவ்வொரு நாளும் கண் விழிக்கிறோம். 'காலையில முழிச்ச மொகமே சரியில்ல' என்றெல்லாம் யாரும் குறைபட்டுக்கொள்வது கிடையாது! பின்னே, நாம் விழிக்கும் முகம் அமெரிக்காவோ, ஆப்பிரிக்காவோ, பாம்போ, பல்லியோ... யாரிடம் குறைபட்டுக் கொள்ளமுடியும்.

சரி, வாட்ஸ்ஆப்பே கதி என்று கிடப்பவர்கள் கிடக்கட்டும். 'தெரியாத்தனமா நம்பர் கொடுத்தது ஒரு குத்தமா' என்கிற ரேஞ்சுக்கு... 'குட் மார்னிங், குட் ஆஃப்டர்நூன், குட் ஈவினிங், குட் நைட், லேட் குட் நைட்' என்றெல்லாம் குடைச்சலைக் கொடுப்பது எந்த அளவுக்கு நியாயம்? கொசுத்தொல்ல தாங்க முடியல நாராயணா?!

ஸ்மார்ட் போன்
ஸ்மார்ட் போன்

ஒரு குட்மார்னிங் மெசேஜுடன் இருந்த தொல்லை, 2 ஜிபி ஃப்ரீ, 3 ஜிபி ஃப்ரீ என ஆளாளுக்கு அள்ளிவிடவே... வீடியோக்களாக மாறிவிட்டன. ஏதாவது ஒரு பாகவதர்/பறவை/நடிகை என்று குட்மார்னிங் கீதம் பாட ஆரம்பித்துவிடுகிறார்.

`சரி பார்த்தது பார்த்தாச்சி. ஒரு பதில் போடலைன்னா சங்கடப்படுவாங்க' என்று கொஞ்சம் இரக்கம் காட்டினால், செத்தாண்டா சேகர். அடுத்தடுத்து பீஸ்ட் தாக்குதல்கள்தான்

வாட்ஸ்ஆப் என்பது தகவல் பரிமாற்றத்துக்குத்தான் என்பதை மறந்து, அது என்னவோ சர்வரோக நிவாரணி கணக்காக ஆளாளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், அதன் ஆபத்தை அறியாமல்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்பதற்காக பல்வேறு வாட்ஸ்அப் குழுக்கள் தொடங்கப்பட்டன. ஆனால், நீதிகேட்டு நடத்தப்பட்ட போராட்டம் பெரும் கலவரமாக உருமாறவே... அத்தகைய குழுக்களில் உறுப்பினர்களாக இருந்தவர்கள், அட்மின்கள் என்று பலரையும் 'கலவரத்தைத் தூண்டியவர்கள்' என்கிற அடிப்படையில் கொத்துக் கொத்தாகக் கைது செய்து வழக்குப் போட்டது காவல்துறை. 'நான் ஃபார்வர்டுதான் செய்தேன்' என்று சொன்னால், அப்படியா, `அதுவும்கூட இபிகோ படி கடுமையான குற்றம்தான். வா வந்து உக்காரு' என்று தூக்கி உள்ளே போடுகிறார்கள்.

`ஒரு புறாவுக்குப் போரா?' என்று விளையாட்டாகக் கேட்கலாம். ஆனால், வாட்ஸ்ஆப் மூலம் சமூகத்தில் நிகழ்ந்து வரும் சீரழிவுகள் பற்றி நாம் பெரிதாகப் பேசுவதில்லை. ஒரு செய்தி, நம்முடைய வாடஸ்ஆப்புக்கோ அல்லது குழுவுக்கோ வருகிறது என்றால், 'ஃபார்வர்டு' பட்டனுக்குத்தான் சட்டென்று கை போகிறது பலருக்கும். 'இன்னிக்கு இத... ஒரு நூறு பேருக்கு ஃபார்வர்டு செய்துட்டா... கடவுள் அருள் கொட்டும்' என்கிற ரேஞ்சுக்குத்தான் இருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி கலவரம்
கள்ளக்குறிச்சி கலவரம்

தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமம் வரையிலும் ஸ்மார்ட் போன்கள் போய்ச் சேர்ந்திருக்கின்றன. கிட்டத்தட்ட அனைவருமே வாட்ஸ்ஆப் பயன்படுத்துகிறோம். செய்தி மட்டுமல்ல, புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தும் அனுப்பலாம். ஏன், பணம்கூட அனுப்பலாம். அதன் பயன்பாடுகள் இன்னும் விரிந்து கொண்டேதான் செல்கின்றன. பல வகையில் நாமும் பயன்பெறுகிறோம். அதேசமயம், தேவையின் நிமித்தம் ஆக்கபூர்வமாக மட்டும்தான் பயன்படுத்துகிறோமா?

பிறந்தநாள் மற்றும் பண்டிகை தினங்களில் வாழ்த்துச் சொல்வது நல்ல பண்பு. நேரில் ஒருவரைச் சந்திக்கும்போது வணக்கம் தெரிவிப்பது நாகரிகம். ஆனால், வாட்ஸ்ஆப் மூலமாக தினமும் வணக்கம் சொல்லிக் கொண்டிருப்பது, சலிப்பைத்தானே ஏற்படுத்தும். முதல் இரண்டு நாள்களுக்கு பதில் வணக்கம் சொல்லத் தோன்றும். அதன் பிறகு, மெசேஜை திறந்து பார்க்கக்கூடத் தோன்றாது. இதில் உள்ள அபாயம் என்னவென்றால், அவர்கள் முக்கியமாக ஏதேனும் ஓர் செய்தியை அனுப்பினாலும்கூட, 'ஓ இது குட்மார்னிங், குட் நைட் பார்ட்டிதானே' என கண்டு கொள்ளாமல் விடுவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.

அடுத்து குடும்பம் குடும்பமாக வாட்ஸ்ஆப் குழுக்கள் முளைத்துக் கிடக்கின்றன. 'என்ன சாம்பார்? எத்தனை மணிக்கு எழுந்திரிச்சே? பையன் உச்சா போயிட்டானா?' என்று ஆரம்பித்து இந்தக் குடும்ப கும்மாளங்கள் சொல்லி மாளாது. அதேசமயம், உருப்படியான கேள்விகளை ஏதாவது கேட்டால், பதிலே இருப்பதில்லை. இது ஒருபுறமென்றால், இன்றைய இளைஞர்கள் உறவினர்கள் வாட்ஸ்ஆப் குழு என்றாலே அஞ்சி நடுங்குகிறார்கள். எப்போதுமே நண்பர்களுடன், அவர்களுடைய விருப்ப எல்லைக்குட்பட்டு சுவாரஸ்யமாக உரையாடவே அவர்கள் விரும்புவார்கள். பொன்மொழிகள், தன்னம்பிக்கை பேச்சுகள் காமெடி மெட்டீரியலாகப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.

அடுத்து, நம்பகத்தன்மையற்ற செய்திகளை எந்த விசாரணையும் இல்லாமல் அனைவருக்கும் பகிரும் செயல், பேரழிவாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு, இனப்பெருமை, தேசியப் பெருமை எனும் மோகங்களில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். நான் இந்தியன்டா... நான் தமிழன்டா... என்று உப்புச் சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் பெருமை கொள்வது, அடுத்த தலைமுறையையும் பாதிக்கும். முன்பெல்லாம் போலிச் செய்திகள் ஒன்றிரண்டுதான் வரும். இப்போது, யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதக்கூடிய சூழல் இருப்பதால், 'தஞ்சையை ஆண்ட ராஜராஜன் எங்க தாத்தா' என்று 'ஆதாரபூர்வ'மாகவே பதிவிடுகிறார்கள். அதென்ன ஆதாரம் என்கிறீர்களா? அவர்கள் சொல்வதுதான் ஆதாரம்.

உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியின் சிறப்புகளையும், தமிழர் வாழ்வியலின் உன்னதங்களையும் அறிந்து பெருமை கொள்வதிலும் பகிர்வதிலும் தவறு இல்லை. ஆனால், `10 லட்சம் ஆண்டுகள் வயதான ஒரு மண்டை ஓடு கிடைத்திருக்கிறது. அதனை ஆராய்ந்து பார்த்தில் அந்த மண்டை ஓடு தமிழனுடையது என்று தெரிய வந்தது... தமிழனென்று சொல்லடா' என்று ஓர் போலியான செய்தியை உருவாக்கி பகிர்ந்தால்? இந்தப் போலிச் செய்தியை எழுதுகிறவர்களுக்கு அது லட்சக்கணக்கான வியூஸை அள்ளுவதில் ஒரு பரவசம். ஆனால், எந்த மறுவிசாரணையும் இல்லாமல், இன்னொருவருக்கு அதை அனுப்புவது குற்றச்செயல் என்பதை கிஞ்சிற்றும் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. நஞ்சு கலந்த உணவை சக உயிருக்குக் கொடுக்க மாட்டோம்தானே... அதுபோன்றே, 'வெரிஃபை' செய்யப்படாத ஃபார்வேர்டு மெசேஜ்களும் நஞ்சானவையே!

போலிச்செய்தியின் தாக்கம்
போலிச்செய்தியின் தாக்கம்

தலைவலி ஏற்படுகிறதென்றால் பல காரணங்கள் இருக்கலாம். மருத்துவரை அணுகிய பிறகே முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், வாட்ஸ்ஆப்பில் குவியல் குவியலாக உட்கார்ந்திருக்கும் 'வாட்ஸ்ஆப் சித்தர்கள்' இஷ்டம்போல அள்ளிவிடுகிறார்கள். சொல்லப்போனால், டாக்டருக்குப் படித்துவிட்டு தொழில்முறை மருத்துவர்களாக இருப்பவர்களே, வாய்க்கு வந்ததையெல்லாம் வாந்தியாக எடுக்கிறார்கள். ஒரு மருத்துவர், 'பலாப்பழம் சாப்பிட்டால் சுகர் குறையும்' என்கிறார் கொஞ்சம்கூட கூசாமல். இதைத் தவிர, ஹீலர்கள், ஃபீலர்கள் என்று `காவியங்களை' படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘தலைவலியா... மூளைக்கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது’ என்று பயத்தைத் தூண்டும் விதத்தில் ஒரு செய்தியை எழுதி அனுப்புகிறார் ஒருவர். இதைப் படித்தவுடன் எந்தக் கேள்வியும் இல்லாமல் பலருக்கும் பகிர்கிறார்கள். ஏதோ, நம் உறவினர்கள்/ நண்பர்களைக் காப்பாற்றுவதாக நினைத்துக் கொள்கிறார்கள் போல. இதுபோன்ற செய்தி தரும் அதிர்ச்சி, பலரையும் உளவியல் ரீதியாக பாதிக்கிறது. இப்படி வரும் மருத்துவக்குறிப்புகளைப் பார்த்து சுய வைத்தியம் செய்கிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இதனால் மோசமான விளைவுகளை எதிர்கொண்டவர்களும் உண்டு. வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்று யூடியூபை பார்த்து, மனைவி மற்றும் குழந்தையின் உயிரைப் பறித்தவர்கள் பற்றிய செய்திகளைக் கேள்விப்படுகிறோம்தானே!

இன்றைக்கு சென்னை மாதிரியான பெருநகரங்களில் மட்டும்தான் 10 ரூபாய் நாணயங்களை வாங்குகிறார்கள். பிற நகரங்கள் மற்றும் கிராமங்களில் 10 ரூபாய் நாணயத்தைத் தொடக்கூட மறுக்கிறார்கள். காரணம், '10 ரூபாய் நாணயங்கள் இனி செல்லாது' என யாரோ மகாபாவி, வாட்ஸ்ஆப்பில் கிளப்பிவிடப்பட்ட புரளிதானே. மத்திய ரிசர்வ் வங்கியே, 'பத்து ரூபாய் நாணயம் செல்லும். அதை வாங்க மறுப்பது தவறு' என்று அறிக்கை வெளியிட்ட பின்னரும் மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை. அந்த அளவுக்கு தவறான தகவல் ஆழப்பதிந்ததிருக்கிறது. வேலை வெட்டியில்லாமல் வதந்திகளைப் பரப்புவதையே குறியாக வைத்து இயங்குகிறவர்களின் இலக்குக்கு நாம் ஏன் பலியாக வேண்டும். நாம் இரையாவது மட்டுமன்றி நம் உறவினர்களையும், நண்பர்களையும் இந்தக் குழிக்குள் தள்ளி விடுகிறோம் என்பதை ஏன் உணர மறுக்கிறோம்.

பத்து ரூபாய் நாணயங்கள்
பத்து ரூபாய் நாணயங்கள்

வாட்ஸ்ஆப் வந்த வேகத்தில் ஃபார்வர்டு செய்யும் அதே ஸ்மார்ட் போனிலேயே கூகுள் இருக்கிறது. என்ன செய்தி வந்தாலும் உண்மைத்தன்மையை தேடி அறிந்து கொள்ளும் வாய்ப்பு அதில் அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும், அதைச் செய்வதற்கு நம்மில் பெரும்பாலானவர்கள் தயாரில்லை. சரி, அந்த வேலை நமக்கு எதுக்கு என்று நினைப்பவர்கள், எதற்காக, ஃபார்வர்டு பட்டனை மட்டும் தட்ட வேண்டும்.

தேடிப்படித்துத் தெரிந்து கொள்ளும் ஆர்வமே இல்லாமல் போய்விட்டதால்தான், நடைமுறை சாத்தியங்களற்ற பொய்கள் நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. இது, நம்முடன் முடிந்துவிடாது, நாளைய தலைமுறைகளையும்தான் ஆட்சி செய்யும். அது கொடுங்கோலாட்சியாக இருக்கும் என்பதுதான் உண்மை... ஜாக்கிரதை!