ஒன்ப்ளஸ் நார்டு CE மொபைல் இந்த வாரம் வெளியாகியிருக்கிறது. இந்த மொபைலைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் ஒரு சின்ன கொசுவர்த்தி சுருள்.
ஒன்ப்ளஸ் நிறுவனம் தங்கள் மொபைல்களை விற்க ஆரம்பித்த போது, Invite முறையில் மட்டும்தான் மொபைல் வாங்கவே முடியும். 'Never Settle' என்கிற அடையாளத்துடன் கெத்தாக வந்தது ஒன்ப்ளஸ். 2014ம் ஆண்டு வெளியான அந்த மொபைலின் ஒரு வரி விமர்சனம் FLAGSHIP KILLER தான். 2016ம் ஆண்டு வெளியான ஒன்ப்ளஸ் 2, அந்த ஆண்டுக்கான FLAGSHIP KILLERஆக வெற்றி நடை போட்டது. ஆண்டுக்கு ஒரு மொபைல் என இருந்த ஒன்ப்ளஸ், ஆண்டுக்கு இரு மொபைல்கள் என தங்கள் ஃபார்முலாவை மாற்றியது. 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒன்ப்ளஸ் 3யும், அதே ஆண்டு நவம்பரில் 3T மொபைலும் வெளியானது. இரண்டு மொபைல்களுக்குமே சிப்செட், பேட்டரி என நுணுக்கமாக சில விஷயங்களை மாற்றியிருந்தார்கள். 6T மொபைலில் முதல்முறையாக In-Display finger Print சென்சாரை அறிமுகம் செய்திருந்தனர்.

2019ம் ஆண்டு ஒன்ப்ளஸ் 7 சீரிஸில் இந்த அணுகுமுறையை சற்று மாற்றியது ஒன்ப்ளஸ். மே மாதம் இரண்டு மொபைல்களை வெளியிட்டது. 3, 3T என்பது ஒரே ஆண்டில் 7, 7PRO, 7T, 7TPRO என நான்கு மொபைல்களாக விரிவடைந்தது. அதன் 6 சீரிஸ் வரை ஓர் அளவு ஒக்கேவாக இருந்த விலை, அதன் பின் ஆப்பிளைப் பின்தொடர்ந்து தாறுமாறாக ஏறியது. விலை ஏறிக்கொண்டே செல்ல, மீண்டும் மிட் பட்ஜெட்டில் களம் இறங்க ஒன்ப்ளஸ் நார்டு என்கிற மொபலை கடந்த ஆண்டு அறிமுக செய்தனர். 12 ஜிபி ரேம் ரூ.30,000 விலை என்பதுதான் அதன் USP.
ஒன்ப்ளஸ் மொபைல்களின் வரலாற்றிலேயே இல்லாதபடி, முதல்முறையாக இரண்டு செல்ஃபி கேமராக்கள் எனக் களம் கண்டது நார்டு. பயங்கர ஹிட். இந்த ஆண்டு ஒன்ப்ளஸ் 9 சீரிஸிலேயே மூன்று மொபைல்கள். 'Hasselblad' கேமரா என ஏக பில்டப்புடன் 9, 9 PROவும் , மிட் பட்ஜெட் என 40,000 ரூபாய்க்கு 9Rம் வெளியானது. முந்தைய மாடல்களைவிட கேமரா பெட்டர் என்றாலும், கொடுத்த பில்டப்பு கொஞ்சம் ஜாஸ்தி என்பதுதான் விமர்சனமாக வந்தது.
தற்போது இந்த மூன்று மொபைல்கள் வெளியாகி மூன்று மாதம் கூட ஆகாத நிலையில், ஒன்ப்ளஸ் நார்டின் அடுத்த மாடலான ஒன்ப்ளஸ் நார்டு CE 5G என்பதை வெளியிட்டிருக்கிறார்கள்.

நார்டு வெர்சஸ் நார்டு CE
CE என்பதற்கு Core Edition என விளக்கம் கொடுத்திருக்கிறது ஒன்ப்ளஸ்.
நார்டு CE பெர்பாமன்ஸ்
2018ல் இருந்து நடந்த தொடர் ஆன்லைன் போராட்டத்தின் பயனாக மீண்டும் 3.5mm ஆடியோ ஜாக்கை இந்த மொபைலில் அனுமதித்திருக்கிறது ஒன்ப்ளஸ். ஆனால், ஒன்ப்ளஸ்ஸில் எப்போதுமிருக்கும் alert sliderஐ நீக்கியிருக்கிறார்கள். ஒன்ப்ளஸ் மொபைலில் அனைவரும் அதிகம் பயன்படுத்தும் ஆப்சன் அது. அதை ஏன் நீக்கினார்கள் எனத் தெரியவில்லை. 'சும்மா கெடந்த அந்த டியூப்லைட்ட எதுக்குடா உடைச்சீங்க' என்பதுதான் மைண்டு வாய்ஸாக இருக்கிறது.
ஆக்ஸிஜன் OS என்பதால், மொபைல் பயன்படுத்த அவ்வளவு ஸ்மூத்தாக இருக்கிறது. ஆண்டிராய்டு 11 வெர்சன் தந்திருக்கிறார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான ஆண்டிராய்டு அப்டேட்டுகளும், மூன்று ஆண்டுகளுக்கான பாதுகாப்பு அப்டேட்டுகளும் உறுதி என்கிறது ஒன்ப்ளஸ். மற்ற மொபைல்களைப் போல், எக்ஸ்டிரா லக்கேஜாக எந்த செயலியையும் நம் தலையில் கட்டவில்லை. நெட்ஃபிளிக்ஸ் மட்டும் இருக்கிறது.

6.44" ஸ்கிரீன் என்பதாலும், எடை குறைவு என்பதாலும், மொபைலை ஒரு கையில் பிடிக்க மிகவும் சுலபமாக இருக்கிறது. பின்பக்கம் பிளாஸ்டிக்கில் தரப்பட்டிருப்பது ப்ரீமியம் ஃபீலை தர மறுத்தாலும், கைகளில் பிடிக்க எளிதாக இருக்கிறது. வழுக்கும் தன்மையோ, கீழே விழுந்தால் சல்லி சல்லியாய் உடையும் பஞ்சாயத்தோ அதில் இல்லை.
எங்களுக்கு ரிவ்யூவுக்கு வந்த மாடல் 12ஜிபி என்பதால், கேமிங்கின் போது எந்தவித பிரச்னையும் தரவில்லை. 90HZ refresh rate டிஸ்பிளே இருப்பதால், சிறப்பாகவே இருக்கிறது.
64 மெகாபிக்ஸல் ப்ரைமரி கேமராவுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா செட்டப் சிறப்பாகவே இருக்கிறது. அல்டிரா ஒய்டுக்கு 8 மெகாபிக்ஸல் கேமரா கொடுத்திருக்கிறார்கள். வெளிச்சத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள், சிறப்பான டீட்டெய்லிங்குடன் கிடைக்கிறது. Depth Effect ஆப்சனும் முந்தைய மாடல்களைப் போலவே இதிலும் பக்கா. ஆனால், குறைவான மங்கிய வெளிச்சத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் ஆவரேஜான அவுட்புட்டையே தருகின்றன. அதே சமயம், வருங்கால தேவைக்காக 5G வசதியும் தரப்பட்டிருக்கிறது.

பிளஸ்
3.5mm ஜாக்
சிறப்பான பெர்பாமன்ஸ்
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய சிறப்பான பேட்டரி
90Hz AMOLED டிஸ்பிளே
இரண்டு ஆண்டுகளுக்கான அப்டேட் உத்திரவாதம்
மைனஸ்
அலெர்ட் ஸ்லைடர் இல்லை
குறைவான வெளிச்ச புகைப்படங்கள் சிறப்பாக இல்லை

விலை
6 GB RAM + 128 GB Internal Memory ~ ரூ.22,999
8 GB RAM + 128 GB Internal Memory ~ ரூ.24,999
12 GB RAM + 256 GB Internal Memory ~ ரூ.27,999
வெர்டிக்ட்
விலை ரூ.22,999 என ஒன்ப்ளஸ் அறிவித்தாலும், 6 ஜிபி மாடல் எப்போது விற்பனைக்கு வரும் என யாருக்கும் தெரியாது. ஆக, இப்போது இருப்பது 8 ஜிபி மற்றும் 12 ஜிபி மாடல்கள் தான். 25,000 கொடுத்து 8 ஜிபி மாடல் வாங்குவதற்கு, இன்னும் ரூ.3000 அதிகம் கொடுத்து 12 ஜிபி மாடல் வாங்குவதுதான் ஸ்மார்ட் சாய்ஸ்.

ரெட்மி நிறுவனம் இதற்குப் போட்டியாக, ரூ.30,000 செக்மெண்ட்டில் mi11X என்னும் மொபைலை வெளியிட்டிருக்கிறது. 120Hz refresh rate, Snapdragon™ 870 சிப்செட் போன்றவை அதில் சிறப்பாக இருந்தாலும், அதிகபட்ச ரேம் 8 ஜிபி தான். அதே போல், அதில் in-Display ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருக்குப் பதிலாக, பழைய மாடல்களின் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் தரப்பட்டிருக்கிறது. சாம்சங்கின் Galaxy S20 FE 5G மாடலோ, ரூ.45,000 செக்மெண்டுக்குச் சென்றுவிடுகிறது. நார்டு CE அதன் பட்ஜெட்டில் சிறப்பானதொரு மொபைல்தான். அதற்கு இணையாக நாம் ஒன்ப்ளஸ் 9R மொபைலை ஒப்பீடு செய்வதுதான் சரியாக இருக்கும். ஆனால், கடந்த ஆண்டு வெளியான நார்டை விடவும் சுமாரான ஸ்பெக்ஸுடன் வந்திருக்கிறது என்பதுதான் அதில் இருக்கும் மிகப்பெரும் பிரச்னை. நார்டு இப்போது அமேசான், ஒன்ப்ளஸ் என எல்லா இடங்களிலும் அவுட் ஆஃப் ஸ்டாக் என்பது தனிக்கதை.
இன்னொன்று, மற்ற ஒன்ப்ளஸ் மொபைல்களைப் போல, நார்டு பல ஆண்டுகள் பாக்கெட்டில் போட்ட கல்லாக இருக்குமா என்பதும் கேள்விக்குறி தான். ஏனெனில் கடந்த ஆண்டு, நார்டு வாங்கியவர்கள் ஓராண்டுக்குள்ளாகவே டிஸ்லைக் பட்டனை அழுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
முடிவாக..?

ஒன்ப்ளஸ் இதுவரை பயன்படுத்தாத மிட் பட்ஜெட் வாடிக்கையாளர்கள், ரூ.30,000க்கும் குறைவான மொபைல் வாங்க விரும்பினால், ஒன்ப்ளஸ் நார்டு CE தேர்வு செய்யலாம். அதன் ஸ்மூத்தான அனுபவம் உங்களை நிச்சயம் கவரும். ஆனால், ஏற்கெனவே ஒன்ப்ளஸ் வைத்திருப்பவர்கள் இன்னும் கொஞ்சம் செலவு செய்து 9R பக்கமோ, இல்லை அடுத்தடுத்து வெளியாகயிருக்கும் ஒன்ப்ளஸ் மொபைல்களுக்காகவோ காத்திருக்கலாம்.