Published:Updated:

வாங்கத் தூண்டுகிறதா இந்த T அப்டேட்? #OnePlus7TReview

எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7T?

#OnePlus7TReview

OnePlus7T Review

ஒன்ப்ளஸின் 7 சீரிஸ் நல்ல வெற்றிதானே...கொஞ்சம் கொண்டாடிட்டு ரெஸ்ட் எடுக்கலாமே என்று ஒன்ப்ளஸிடம் சொன்னால் "அதற்கெல்லாம் நேரம் இல்ல பாஸ்" என்னும் விதமாக இன்னும் வேகமாக ஓடத்தொடங்கியிருக்கிறது. கடந்த மாதம் டிவி சந்தையில் தனது Q1 சீரிஸுடன் களமிறங்கியதுதான் 'டாக் ஆஃப் தி டவுன்' என்றாலும் சைலன்ட்டாக ஒன்ப்ளஸ் 7 சீரிஸின் அப்டேட்டாக ஒன்ப்ளஸ் 7T மொபைலையும் அறிமுகப்படுத்தியது. சுமார் இரண்டு வார பயன்பாட்டிற்குப் பிறகு இந்த மொபைல் எப்படி இருக்கிறது என்ற எங்கள் கருத்தை இங்கே காண்போம்.

வடிவமைப்பு

OnePlus7T வடிவமைப்பு
OnePlus7T வடிவமைப்பு

ஒன்ப்ளஸுக்கேயான ப்ரீமியம் matte frosted க்ளாஸ் ஃபினிஷுடன் வருகிறது 7T. ஒரே மைனஸ் என்றால் பின்புறம் இருக்கும் கேமரா தோற்றம். இம்முறை மூன்று கேமராக்களை ஒரு வட்டத்தில் அடக்கியுள்ளது ஒன்ப்ளஸ். இது பழைய மோட்டோ போன்களை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. மற்றபடி நல்ல தரமான போனை பயன்படுத்தும் உணர்வையே தருகிறது. இம்முறையும் வாட்டர்ப்ரூப் சான்றிதழ்கள் எதுவுமே இல்லை. Glacier Blue, Froster Silver என இரு நிறங்களில் கிடைக்கிறது. இதில் நாங்கள் பயன்படுத்திய Glacier Blue வேரியன்ட் பார்க்க நன்றாகவே இருந்தது. 7, 7 ப்ரோவில் இருந்த அதே இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரிண்ட் சென்ஸாரும் இதில் இருக்கிறது.

டிஸ்ப்ளே

OnePlus7T டிஸ்ப்ளே
OnePlus7T டிஸ்ப்ளே

ஒன்ப்ளஸ் 7T-யின் முக்கிய ஹைலைட்களில் ஒன்று டிஸ்ப்ளேதான். ஒன்ப்ளஸ் 7 ப்ரோவில் இருக்கும் அதே 90Hz fluid டிஸ்ப்ளேதான். அதாவது விநாடிக்கு 90 முறை refresh ஆகும் இந்த டிஸ்ப்ளே. இதனால் ஆப்புகளுக்கு மாறுவது, மல்டி டாஸ்கிங் போன்ற அனிமேஷன்கள் மிகவும் ஸ்மூத்தாக இருக்கும். ஒரே வித்தியாசம் பாப்-அப் கேமரா கிடையாது, அதற்குப் பதிலாக செல்ஃபி கேமராவிற்கு சிறிய நாட்ச் இருக்கிறது. இதனால் ஃபுல் டிஸ்ப்ளே அனுபவம் இருக்காது. curved டிஸ்ப்ளேயாக இல்லாமல் வழக்கமான flat டிஸ்ப்ளேயாகவே இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. HDR10+ சப்போர்ட்டுடன் டிஸ்ப்ளே வண்ணங்களில் குளிக்கிறது. படங்கள் தொடங்கி கேமிங் வரை எதிலும் நம்மை ஏமாற்றவில்லை.

ஆடியோ

OnePlus7T ஆடியோ
OnePlus7T ஆடியோ

டால்பி அட்மாஸ் சப்போர்ட்டுடன் வருகிற இந்த மொபைலில் இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருக்கின்றன. சிறப்பான டிஸ்ப்ளேக்கு சற்றும் குறைவில்லாத சிறந்த ஆடியோ இந்த மொபைலில் இருக்கிறது. இதிலும் 3.5mm ஹெட்போன் ஜாக் கிடையாது. ஆனால் இன்று ப்ளூடூத் ஹெட்போன்கள் மிகவும் பிரபலமாகிவிட்டதால் இதைப் பெரிய குறையாக முன்பு போல சொல்லமுடியவில்லை. Noise cancellation சப்போர்ட்டும் இதில் இருக்கிறது.

கேமரா

எப்போதும் இந்த ப்ரீமியம் செக்மென்ட் மொபைல்களுடன் போட்டிப்போடும்போது ஒன்ப்ளஸ் சொதப்புவது கேமராவில்தான். ஆனால் சமீபத்தில் இதில் ஒன்ப்ளஸ் கூடுதல் கவனம் செலுத்துவதாகவே தெரிகிறது. ஒன்ப்ளஸ் 7 ப்ரோ வெளிவரும்போது 'ஓகே' லெவலில் இருந்த கேமரா தரத்தை அடுத்தடுத்த அப்டேட்களில் மெருகேற்றியது. இம்முறை 7Tயிலும் மூன்று கேமராக்கள் இருக்கின்றன. அதன் விவரங்கள்

கேமரா
கேமரா

ஸ்டாண்டர்ட் கேமரா: 48MP, f/1.6, OIS

வைடு-ஆங்கிள்: 13MP, f/2.2, 117-degree FoV

2x டெலிபோட்டோ: 12MP, f/2.2

செல்ஃபி: 16MP, f/2.0

7 ப்ரோவிடம் ஒப்பிடுகையில் 3x டெலிபோட்டோ கேமராவிற்கு பதிலாக 2x டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர பெரிய மாறுதல்கள் இல்லை. தனியாகப் பார்த்தால் புகைப்படங்கள் பார்க்க நன்றாகவே இருக்கின்றன. ஆப்பிள், சாம்சங், கூகுள் போன்ற மற்ற ப்ரீமியம் போன்களின் கேமராவுடன் போட்டிப்போடும்போதுதான் சற்று திணறுகிறது. மற்றபடி கேமரா எப்படி என்று நீங்களே படங்களைப் பார்த்து முடிவுசெய்துகொள்ளுங்கள்!

இம்முறை சிறிய பொருட்களை அருகில் சென்று படம்பிடிக்க 'Macro mode' கொடுக்கப்பட்டுள்ளது. இது பயனுள்ளதாகவே இருக்கிறது. NightScape போன்ற பிற வசதிகளும் இருக்கின்றன.

பர்ஃபார்மன்ஸ்

ஒன்ப்ளஸ் எதனால் இந்த இடத்திற்கு வந்தது என்பதை மறக்கவில்லை. ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் புராசஸருடன் 8GB என ஒரே RAM வேரியன்ட்டுடன் வருகிறது 7T. ஆப்கள் ஓபன் ஆவதெல்லாம் கண்ணிமைக்கும் பொழுதில் நடக்கிறது. இதனால் பெரிய கேம்களை ஹை-கிராபிக்ஸில் ஆடும்போதும் செம ஸ்மூத்தாகவே இருக்கிறது.

128 GB, 256 GB என இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட்டுகளில் வருகிறது 7T. இதிலும் கடந்த 7, 7 ப்ரோ மொபைல்களை போல UFS 3.0 ஸ்டோரேஜுடன் வருகிறது. இந்த UFS 3.0 இருப்பதால் ஃபைல் பரிமாற்றங்களும் படுவேகமாக இருக்கும். சொல்லப்போனால் பர்ஃபாமன்ஸ் விஷயத்தில் தேவைக்கு அதிகமாகவே தருகிறது ஒன்ப்ளஸ். ஆனால் இதனால் சில வருடங்கள் ஆனாலும் மொபைல் பர்ஃபாமன்ஸில் பெருமளவு தொய்வு இருக்காது.

ஓ.எஸ்

வரும்போதே ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வருவது ஒன்ப்ளஸ் 7Tதான். இந்த ஆண்ட்ராய்டு 10 மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆக்சிஜன் ஓ.எஸ் 10-ல் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 1-யே சிறப்பாக இருக்கும் என்றால், இதற்கு மேல் ஒன்ப்ளஸின் எக்ஸ்ட்ரா வசதிகளும் கிடைக்கின்றன. ஸ்கிரீன் ரெக்கார்டர், சிறப்பு கேமிங் மோடு, RAM boost, ஜென் மோடு என பல ஒன்ப்ளஸ் ஸ்பெஷல் வசதிகள் இதில் அடங்கும். மேலும் பெருமளவில் Bloatware (தேவையில்லாத ஆப்கள்) எதுவும் இல்லாமல் கிட்டத்தட்ட ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவத்தையே தருகிறது. பவர்புல் ஹார்ட்வேருக்கு தோள்கொடுக்கும் விதமாக இருக்கிறது இந்த இயங்குதளம் என சொல்லலாம்.

சார்ஜிங்

3800 mAh பேட்டரியுடன் வருகிறது 7T. பெரும்பாலும் இதுவே ஒரு நாளை கடக்க போதுமானதாக இருக்கும். ஆனால் 90Hz டிஸ்ப்ளே சற்றே சார்ஜ் இழுக்கும். அதற்காக டிஸ்ப்ளேவை 60Hz-க்கு செட்டிங்ஸை மாற்றினால் இந்த போனின் சிறப்பை மிஸ் செய்துவிடுவீர்கள். இதைச் சரிக்கட்டவும் ஒரு விஷயத்தைச் சேர்த்திருக்கிறது ஒன்ப்ளஸ். முந்தைய வார்ப் சார்ஜிங்கின் அப்டேட்டாக வார்ப் சார்ஜ் 30T-யுடன் வருகிறது 7T. வார்ப் சார்ஜ் 30-யிலேயே மொபைல் வேகமாக சார்ஜ் ஆகிவிடும் என்றால் இந்த வார்ப் சார்ஜ் 30T-யில் இன்னும் வேகமாக சார்ஜ் ஏறிவிடுகிறது. இதிலும் வயர்லெஸ் சார்ஜிங் இல்லை.

ப்ளஸ்

  • 90Hz டிஸ்ப்ளே

  • பர்ஃபாமன்ஸ்

  • மென்பொருள் அனுபவம்

  • பில்ட் குவாலிட்டி

மைனஸ்

  • வடிவமைப்பு

  • வாட்டர்ப்ரூப் ரேட்டிங், வயர்லெஸ் சார்ஜிங் இல்லாதது

விலை:

8GB+128GB- 37,999.00 ரூபாய்

8GB+256GB- 39,999.00 ரூபாய்

Oneplus 7T
Oneplus 7T

இறுதி கருத்து

37,999 ரூபாய் விலையில் நல்ல வசதிகள்தான் என்றாலும் போட்டி முன்பை போல இல்லை. ROG போன் II கிட்டத்தட்ட இதே விலையில் வெளியாகியிருப்பது இதற்கு பெரும் பின்னடைவுதான். கேமிங் பிரியர்களுக்கு பெர்ஃபெக்ட் போன் அது. ஒன்ப்ளஸ் 7 ப்ரோ விளையும் 44,999 ரூபாய்க்கு குறைந்துவிட்டதால் சற்றே அதிகம் பணம் கொடுத்து அதை வாங்குவதும் நல்ல முடிவாகவே இருக்கும். மற்றபடிக் கொடுக்கும் விலைக்குத் துளியும் குறைவில்லாத ஒரு சாதனத்தையே ஒன்ப்ளஸ் தந்திருக்கிறது. ஆனால் இந்த T அப்டேட்டைதான் வாங்கவேண்டுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை!