
யார் இந்த ஜானி ஐவ்... ஆப்பிளின் வெற்றிக்கு இவரது பங்கு என்ன?
ஜானி ஐவ் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர்தான் இன்றைய டிசைனிங் (கேட்ஜெட்) மாணவர்களின் டெண்டுல்கர். இவர், லண்டனில் பிறந்தவர். 'என்னை டிசைனராக மாற்றியது, பதின்பருவத்தில் கார்களின்மீது எனக்கு ஏற்பட்ட காதல்தான்' என்னும் இவர், 1980-களில் நீயூகாஸ்டில் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்றார். அங்கு படிக்கும்போது அவர் வடிவமைத்த கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் சாதனம், லண்டன் வடிவமைப்பு அருங்காட்சியகத்தில் இடம்பெற்றது. கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் ஐவ், டான்ஜரின் (tangerine) என்னும் வடிவமைப்பு ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கிருந்து பிரிந்து, அப்போது பரபரவென ஓடிக்கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து, 1992-ம் ஆண்டு முதல் இவரும் ஓடத்தொடங்கினர். ஆனால், 1997-ம் ஆண்டு சில காலம் பிரிந்திருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்த பிறகுதான், இவர் யார் என்பது வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தது. அப்போது, ஆப்பிளின் தொழில்துறை வடிவமைப்பின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற ஐவ் வடிவமைத்த அத்தனை சாதனங்களிலும் நேர்த்தியும் ரசனையும் ததும்பியது. அதுமட்டுமல்லாமல், பயன்படுத்தவும் அத்தனை எளிமையாக இருந்தது.
1997-ம் ஆண்டு வடிவமைத்த ஐமேக்தான் இவரது முதல் முக்கிய சம்பவம். கண் கவரும் வண்ணங்களில், வட்ட வடிவிலான விளிம்புகளுடன், பார்த்ததும் வாடிக்கையாளர்களை வாங்கத் தூண்டியது இவரது டிசைன். இதனால் இரண்டு மில்லியன் ஐமேக்குகள் விற்றுத்தீர்ந்தன. 1995-ம் ஆண்டுக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் லாபத்தைப் பெற்றுத்தந்தது இந்த சாதனம்தான். அதற்குப் பின்னும் திறனை அதிகப்படுத்தும் விதத்திலும் வாடிக்கையாளர்கள் எளிதாகப் பயன்படுத்தும் விதத்திலும், பல ஆப்பிள் சாதனங்களைத் திறம்பட வடிவமைத்தார்.

இவரது அடுத்த சிறப்பான, தரமான சம்பவம் 2001-ல் வெளிவந்த ஆப்பிள் ஐபாட் (iPod). ஆப்பிளின் பெயரைப் பிரபலமாக்கியதில் ஐபாடிற்கு மிக முக்கியப் பங்கு உண்டு. இதனுடன் வந்த இயர்போன்கள், தொழில்நுட்பத் துறையிலேயே மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது எனத் தைரியமாகச் சொல்லலாம். அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலேயே இந்த இயர்போன்கள் அமெரிக்க, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் மிகவும் பிரபலமானது.
2003-ம் ஆண்டு வெளியான பவர்புக் G4, அப்போது வெளியானதிலேயே மெல்லிய லேப்டாப்பாக இருந்தது. தொழில்நுட்ப அளவில் பல முக்கிய முன்னேற்றங்கள் இதிலிருந்தாலும், மக்கள் இதை வாங்கியது இவரின் அற்புத டிசைனுக்குதான். இதற்காக, அந்த வருடத்தின் சிறந்த வடிவமைப்பாளராக வடிவமைப்பு அருங்காட்சியத்தால் ஜான் ஐவ் தேர்வுசெய்யப்பட்டார்.

அடுத்ததாக, ஒரு நவீன அலைபேசியை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் களமிறங்கியது. அதை வடிவமைக்கும் பணியும் ஐவ்-வுக்கே கொடுக்கப்பட்டது. அப்படி 2007-ம் ஆண்டு அவர் வடிவமைத்து வெளிவந்த மொபைல்தான் முதல் ஐபோன். இன்று, ஐபோன்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறதென்றால், அதற்கு இவரின் ரிச்சான வடிவமைப்புதான் முழு முதல் காரணம். இன்றும் லுக்கிற்காக மட்டும் ஐபோன் வாங்கும் கூட்டம்தான் அதிகம்.
லேப்டாப்களை ஏற்கெனவே வெளியிட்டிருந்தாலும் உலகத்திலேயே குறைந்த எடை கொண்ட லேப்டாப்பாக 2008-ம் ஆண்டு வெளியானது ஆப்பிளின் மேக்புக் ப்ரோ. இதன் செயல்பாடுகள் நல்ல முறையில் அமையவில்லை என்றாலும் பின்னர் வந்த அனைத்து ஆப்பிள் லேப்டாப்களுக்கும் இதன் வடிவமைப்புதான் முன்மாதிரியாக விளங்கியது.


இதற்குப் பின் 2010-ம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனத்தால் முதல் ஐபேட் அறிமுகமானது. ஐபோனை விட ஐபேடுகள் அளவிலும் செயல்திறனிலும் உயர்ந்தே காணப்பட்டன. இதை அறிமுகப்படுத்தும் விழாவில் ஐவ் பேசுகையில், "ஒரு சாதனம் எப்படி, இப்படி வேலை செய்கிறது என்பது நம் புரிதலையும் தாண்டி இருக்கும்போது... அது மேஜிக் போன்றாகிவிடுகிறது. அந்த மேஜிக்கை இந்த ஐபேடுகளில் உணரலாம்" என்றார். இவர் சொன்ன மேஜிக்கை மக்களும் உணர்ந்தனர். இன்றும் டேப்லெட் என்றால் ஐபேட்தான் மக்களின் முதல் சாய்ஸ்.
அடுத்து, ஆப்பிளின் முதல் ஃபிட்னெஸ் ட்ராக்கராக ஆப்பிள் வாட்ச் 2014-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதை செவ்வக வடிவிலான டிஸ்ப்ளேவும் மாற்றக்கூடிய வகையிலான ஸ்ட்ராப்களும் இருந்தன. ஆனால், அப்போது இதன் போட்டியாக விளங்கிய பெப்பிள் ஸ்டீல் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்சுகளைவிட அதிக விலை கொண்டதாகவும் குறைந்த பேட்டரி திறனைக் கொண்டதாகவும் இது அமைந்தது. இதைச் சவாலாக எடுத்துக்கொண்டு, போட்டியை வெல்ல கடுமையாக உழைத்தார் ஐவ். 2018-ம் ஆண்டு, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4-ஐ வடிவமைத்தார். இதன் பின்பு ஸ்மார்ட் வாட்ச் ராஜ்ஜியத்திலும் ஆப்பிள் ஆட்சி அமைந்தது.


இதற்குப்பின், 2016-ம் ஆண்டு ஏர்பாட்ஸ் அறிமுகமானது. இது, ஆப்பிள் இயர்போனின் வயர்லெஸ் மாடல் போல் தோற்றம் அளித்தது. இதன் வடிவமைப்பு, தோற்றம் மற்றும் எளிய பயன்பாடு ஆகியவற்றால் தொழில்நுட்பத் துறையில் ஆப்பிளின் இன்னொரு மைல்கல்லாக இந்தச் சாதனம் பார்க்கப்பட்டது .
ஆப்பிளில் இவர் செய்த பணிக்காக, பல விருதுகளையும் குவித்திருக்கிறார் ஜானி ஐவ். 2008-க்குள்ளாகவே மதிப்புமிக்க வடிவமைப்பு மற்றும் கலை இயக்க (design and art direction) விருதான ப்ளாக் பென்சிலில் ஆறு, ஐவ்-விடம் இருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு 2012-ல், ஐவ்-வின் வடிவமைப்பு அணி, 50 வருடங்களில் சிறந்த வடிவமைப்பு ஸ்டூடியோவாக அதே வடிவமைப்பு மற்றும் கலை இயக்க அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் பேரரசின் உயர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் (commander of the order), நைட் கமாண்டர் (knight commander) ஆகிய விருதுகள் இதில் அடங்கும்.

இப்படி கம்ப்யூட்டர் தொடங்கி வயர்லெஸ் இயர்போன்ஸ் வரை 30-க்கும் மேலான ஆண்டுகள் ஆப்பிள் நிறுவனத்திற்காக முதன்மை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய ஐவ், இந்த ஆண்டோடு ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விடைபெறப்போவதாக ஆப்பிள் சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கடந்த மாதம் வந்த இந்த அறிவிப்பின்படி, இறுதியாக ஒரு முறை ஆப்பிளுக்கு பிரியாவிடை கொடுத்தார் ஐவ். இப்போது, சொந்தமாக ஒரு வடிவமைப்பு நிறுவனத்தைத் தொடங்கப்போகிறார் அவர். அந்த நிறுவனத்தின் பெயர் Lovefrom. இதுவும் ஸ்டீவ் ஜாப்ஸின் பிரபலமான வரி ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட பெயர்தான். "ஐவ்-வின் சொந்த வடிவமைப்பு நிறுவனத்திற்கு நாங்கள்தான் முதன்மை வாடிக்கையாளராக இருக்கப்போகிறோம்" என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.