Published:Updated:

பல்லாங்குழி, பரமபதம், ஜல்லிக்கட்டு... ஆன்லைனில் விளையாட அசத்தல் விளையாட்டுகள்!

Dice
Dice ( Photo: Unsplash )

லாக்டெளன் நாம் எதிர்பார்க்காத பல விஷயங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. வீட்டுக்குள்ளே முடங்கி கிடப்பதும், கொரொனா பற்றி பயப்படுவதும் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் ``இதுல என்ன பண்ணலாம் பாருங்கப்பா” என எனர்ஜி ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள் பலர்.

அதில் ஒன்றுதான், காணாமல் போன பல பழைய விளையாட்டுகளுக்கு உயிர் தருவது. ஆனால் சின்ன வித்தியாசம். அந்த விளையாட்டுகளை மொபைலுக்குள் புகுத்தி விட்டனர். ``லூடோ என்னும் தாயத்தைதான சொல்ற” என்பவர்களுக்கு, ``அதுக்கும் மேல ஒரு லிஸ்ட் இருக்குங்க” என்பதே பதில்.

ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

1) பல்லாங்குழி

பல்லாங்குழி
பல்லாங்குழி
Pixabay

பழைய விஷயங்களைப் பற்றி அறியும்போது நமக்கு ஒன்று முக்கியமாகப் புரியும். அது, மக்கள் உலகில் பல மூலையில் வாழ்ந்திருந்தாலும் அவர்களுக்கிடையே பல ஒற்றுமைகள் இருந்திருக்கின்றன. விளையாட்டுகளும் அப்படியே. நாம் இங்கே பல்லாங்குழி என விளையாடியதை ஆப்பிரிக்கர்கள் `மேன்கலா’ என்ற பெயரில் ஆடியிருக்கிறார்கள். ஆனால், விதிகள் என்னவோ ஒன்றுதான். அதனால் பல்லாங்குழி பெயரிலிருக்கும் ஆப்களைவிட மேன்கலா டவுன்லோடு எண்ணிக்கையில் எங்கேயோ இருக்கிறது. ``அதனாலென்ன... எல்லாம் நம்ம கூகுள் தந்த ஆண்ட்ராய்டுதான” என டவுன்லோடு செய்து விளையாடுகிறார்கள் `லாக்டெளன்' வாசிகள். லூடோவுக்கு அடுத்து ஹாட் ஹிட் கேம் மேன்கலாதான். மன்னிக்க, பல்லாங்குழிதான்.

2) பரமபதம்

Representational Image
Representational Image

சுத்தி சுத்தி வந்தா தாயம்... மேல மேல போனா பரமபதம் என 2கே கிட்ஸ் மத்தியில் ஒரு வதந்தி இருக்கிறது. தாயத்தில் எதிரணிதான் நம்மை வெட்டும். பரமபதத்தில் விளையாட்டில் இருக்கும் பாம்பே நம்மை காலி செய்யும். அதனால் வீட்டுக்குள் சண்டை வராது. அதனால் தாயத்தை விட மென் மனதுக்காரர்களுக்கு பரமபதம் செட் ஆகும். `ஏற்றம் இறக்கம் இருந்தாதான் வாழ்க்கை' என்னும் தத்துவத்தை எல்லாம் யாரும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. சுவாரஸ்யத்துக்காக மட்டுமேயாவது ஆடினால் போதும் என்கிறது போன தலைமுறை.. `ஆடிட்டா போச்சு' என்கிறது டெக் தலைமுறை. ப்ளே ஸ்டோரில் இதற்கும் ஏகப்பட்ட ஆப்ஸ் இருக்கின்றன.

3) ஆடு புலி ஆட்டம்

Tigers and Goats
Tigers and Goats

மூளைக்கு வேலை தரும் இன்னொரு வெட்டாட்டம். Tigers and Goats என்ற பெயரிலும் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. மற்ற ஆட்டத்தைவிட இதற்கு கொஞ்சம் நுண்ணறிவு தேவை. வெறும் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி ஆட முடியாது. அதனாலே அதிகப் பேரால் ஆடப்படாத விளையாட்டாக இருக்கிறது. ஆட்டோ ஸ்டேண்டில் தொடங்கி, இப்போது ஆண்ட்ராய்டு மொபைல் வரை கலக்கி வருகிறது இந்த ஆட்டம். ``உங்க தாத்தாவை இதுல ஜெயிக்க 18 பட்டியிலும் ஆளே கிடையாது” என்றெல்லாம் பாட்டிக்கள் இனி மெச்சிக் கொள்ள முடியாது. ``லெட்ஸ் ஸீ கிராண்ட்மா” என இளசுகளும் இப்போது ஆன்லைனில் சவால் விடலாம்.

4) ஜல்லிக்கட்டு

Jallikattu The Game
Jallikattu The Game
Google Play

மற்ற விளையாட்டுகளாவது நிஜத்தில் கால் நீட்டி, தூணில் சாய்ந்து ஆடும் ஆட்டங்கள்தான். ஆனால் ஜல்லிக்கட்டு அப்படியா? கொஞ்சம் ஏமாந்தால் மாடு முட்டும். தப்பிக்க எம்பி குதித்தால் மக்கள் கூட்டம் நம்மை நெருக்கும். இந்த வீர விளையாட்டிலிருந்து வீரத்தை Shift+ delete செய்து, சுவாரஸ்யத்துக்காக மட்டும் கேம் ஆக்கியிருக்கிறார்கள்.

``வாடா ஜல்லிக்கட்டு விளையாடலாம், நீ மாடா இருக்கியா, மனுஷனா இருக்கியா?" எனக் கேட்டால் எப்படியிருக்கும். இந்த ஜல்லிக்கட்டில் கேட்கலாம். இந்த விளையாட்டில் தப்பித்து நழுவும் ஆளாகவும், முட்டும் மாடாகவும் நாம் விளையாடலாம் என்பது ஆன்லைன் வழங்கியிருக்கும் கூடுதல் சுவாரஸ்யம். இதை ஆடவும் ஒரு திறமை வேண்டுமென்றாலும், இந்த மாடு முட்டி நமக்கும் ஒன்றுமாகாது; மொபைலுக்கும் ஒன்றுமாகாது என்பதால் இதை நிஜ ஜல்லிக்கட்டின் பிரதிநிதியாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. இருந்தாலும் ஜல்லிக்கட்டை நினைவுப்படுத்துகிற விஷயமென்பதால் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம், கிரிக்கெட்டில் 12th மேன் என ஒருவர் இருப்பாரே... அப்படி!

இன்னும் கூட சில விளையாட்டுகள் இருக்கலாம். இதில் இல்லாத ஏதேனும் இருந்தால் கமென்ட்டில் சொல்லுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு