Published:Updated:

டூயல் டிஸ்ப்ளே போன், வயர்லெஸ் இயர்பட்ஸ், விண்டோஸ் 10X... மைக்ரோசாஃப்ட் இஸ் பேக்!

புதிய சாதனங்களின் அணிவகுப்பு மூலம் மொத்த டெக் உலகின் கவனத்தையும் பெற்றுள்ளது மைக்ரோசாஃப்ட்!

Microsoft
Microsoft

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வருடாந்தர சர்ஃபேஸ் நிகழ்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் புதிய சேவைகள் மற்றும் சாதனங்கள் என பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது மைக்ரோசாப்ட். இதில் ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் சர்ஃபேஸ் மொபைல், விண்டோஸ் 10x இயங்குதளம், சர்ஃபேஸ் நியோ, சர்ஃபேஸ் ப்ரோ x , சர்ஃபேஸ் இயர்பட்ஸ் , சர்ஃபேஸ் ப்ரோ 7 மற்றும் சர்ஃபேஸ் லேப்டாப் 3 என இம்முறை களைகட்டியது நிகழ்வு. இந்த அறிவிப்புகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

சர்ஃபேஸ் ப்ரோ X

மைக்ரோசாஃப்டின் புதிய டேப்லெட் சர்ஃபேஸ் ப்ரோ X. இது 13 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளிவருகிறது. சிறிய பெஸல்களுடன் பார்க்க அழகாக இருக்கும் இது விண்டோஸ் 10 மூலம் இயங்கும். இதற்காகக் கிடைக்கும் ஸ்பெஷல் கேஸில் சர்ஃபேஸ் பென்னுக்கு (ஸ்டைலஸ்) பிரத்யேக இடம் இருக்கிறது. இதில் வைக்கும்போது அது தானாக சார்ஜ் ஆகிக்கொள்ளும். மேலும், இது மைக்ரோசாஃப்டின் SQ1 சிப்ஸெட் ப்ராசஸருடன் வரவுள்ளது. இதில் LTE கனெக்டிவிட்டி வசதியும் உள்ளது. இதன் GPU தற்போது 2 teraflops அளவிலான சக்தியில் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. இது எக்ஸ்பாக்ஸ் 1 கிராபிக்ஸுக்கு இணையானது .சர்ஃபேஸ் ப்ரோ X அமெரிக்காவில் 999 டாலருக்கு விற்பனைக்கு வருகிறது. இது வருகின்ற நவம்பர் மாதம் முதல் கிடைக்கத்தொடங்கும்.

சர்ஃபேஸ் இயர்பட்ஸ்

மைக்ரோசாஃப்ட் இயர்பட்ஸ்
மைக்ரோசாஃப்ட் இயர்பட்ஸ்

ஆப்பிள் ஏர்பாட்ஸுக்குப் போட்டியாக மைக்ரோசாஃப்ட் களமிறக்கியிருக்கும் சாதனம்தான் இது. இதன் பேட்டரியானது 24 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும். Omnisonic சவுண்டும் directional dual-array மைக்கும் இதன் சிறப்பம்சம். இந்த இயர்பட்ஸை டெப் செய்வதன் மூலம் பாடல்களை மாற்றும் வசதியும் இதில் உண்டு. இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரும் இந்த இயர்பட்ஸின் விலை $249.

சர்ஃபேஸ் ப்ரோ 7

சர்ஃபேஸ் ப்ரோ 7
சர்ஃபேஸ் ப்ரோ 7

மைக்ரோசாஃப்ட்டின் டேப்லேட் வடிவிலான லேப்டாப் இந்த வருடம் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. முன்பு இருக்கும் சர்ஃபேஸ் கனெக்டருக்குப் பதிலாக USB-C மூலம் சார்ஜ் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இன்டெல் 10th ஜென் ப்ராசஸருடன் வருகிறது. அக்டோபர் 22 அன்று விற்பனைக்கு வரவிருக்கும் இதன் விலை $749.

சர்ஃபேஸ் லேப்டாப் 3

சர்ஃபேஸ் லேப்டாப் 3
சர்ஃபேஸ் லேப்டாப் 3

மைக்ரோசாஃப்டின் அடுத்த சர்ஃபேஸ் லேப்டாப் 13 மற்றும் 15 இன்ச் என இரண்டு அளவில் வரவுள்ளன. இது இன்டெல் 10th ஜென் Quadcore Ice Lake ப்ராஸசருடனும் Iris Plus கிராபிக்ஸுடனும் வருகிறது. இது ஆப்பிளின் மேக்புக் ஏரைவிட மூன்று மடங்கு வேகமானதாக இருக்கும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவிக்கிறது. இதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் AMD நிறுவனத்துடன் இணைந்து Ryzen Surface Edition ப்ராசஸரை உருவாக்கியுள்ளது. இந்த ப்ராசஸர் 15 இன்ச் வேரியன்ட்டுடன் வருகிறது. இதனுடைய டிராக்பாட்டின் அளவானது சர்ஃபேஸ் லேப்டாப்பை 2-வை விட 20% அதிகமானதாக இருக்கும். இதில் 13.5 இன்ச் வேரியன்ட்டின் விலையானது 999 டாலராகவும் 15 இன்ச் வேரியன்ட்டின் விலை 1999 டாலராகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்ஃபேஸ் நியோ

இந்த நிகழ்வின் முதல் வாவ் மொமென்ட் சர்ஃபேஸ் நியோவின் அறிமுகம்தான். மல்டி ஸ்கிரீன் சாதனமான நியோவின் டிஸ்ப்ளே அளவு 9 இன்ச். மேலும், இரண்டு டிஸ்ப்ளேக்களும் 360 டிகிரி ஹிஞ்ச் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் கீபோர்டானது டிஸ்ப்ளேவின் மேல் பகுதியில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மடக்கும்படி இருப்பதால் அதற்கென்றே சிறப்பு வசதிகள் பல இத்துடன் வரும். இதற்கான மென்பொருள் சப்போர்ட் எப்படி என்று கேட்கிறீர்களா? அதுதான் அடுத்த அறிவிப்பு.

விண்டோஸ் 10X

இது சர்ஃபேஸ் நியோ போன்ற மல்டி ஸ்கிரீன் சாதனங்களுக்கென பிரேத்யேக வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ஃட்டின் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் அடுத்த அப்டேட்டாக விண்டோஸ் 10X அறிவிக்கப்பட்டது. இது விரைவில் அனைத்து சாதனங்களுக்கும் கிடைக்கத்தொடங்கும்.

சர்ஃபேஸ் டூயோ

இந்த நிகழ்வின் கடைசி அறிவிப்புதான் யாரும் எதிர்பாராதது. மடக்கும் வசதியுடன்கூடிய மொபைல் வடிவிலான டேப்லெட்டின் அறிவிப்புதான் அது. இது ஆண்ட்ராய்டில் இயங்கும் என்பது கூடுதல் சர்ப்ரைஸ். இது முன்பு கூறிய சர்ஃபேஸ் நியோ போன்றே இருந்தாலும் அளவில் சிறியதாக இருக்கும். மேலும், இது ஆண்ட்ராய்டு மூலம் இயங்குவதால் கூகுள் ப்ளே ஸ்டோரை பயன்படுத்த முடியும். சாதாரண மொபைல்போல இயங்கும். இதன் இரண்டு டிஸ்ப்ளேகளும் 5.6 இன்ச் அளவில் இருக்கின்றன. இதுவும் 360 டிகிரி ஹிஞ்சால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது . முன் இல்லாத வகையில் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் 10 என இரண்டையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இது. இதுவும் சர்ஃபேஸ் நியோவும் 2020 நவம்பரில் விற்பனைக்கு வரும்.

Vikatan

எப்போதும்போல் சாதாரணமாக சின்னச் சின்ன அறிவிப்புகளுடன் இந்த வருட நிகழ்வும் முடிந்துவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பல அதிரடி அறிவிப்புகளுடன் 'ஐ எம் பேக்' எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது மைக்ரோசாஃப்ட்.