Published:Updated:

டெக் நிறுவனங்களையும் விடாத கொரோனா அச்சம்...ரத்து செய்யப்பட்ட சர்வதேச மொபைல் விழா! #MWC2020

Mobile World Congress
Mobile World Congress

பார்சிலோனாவில் பிப்ரவரி மாதம் 24 முதல் 27 வரை நடைபெறவிருந்த விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய மொபைல் திருவிழா என்றால் அது மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்(MWC). ஆனால், டெக் நிறுவனங்கள் தங்கள் மொபைல்களைக் காட்சிப்படுத்தும் இந்த விழா இந்த ஆண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் கொரோனா வைரஸ். மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் GSMA அமைப்பால் நடத்தப்படும் வருடாந்திர நிகழ்வாகும். இந்த அறிவிப்பிற்கு முக்கியக் காரணம் பல காட்சியாளர்களும் நிறுவனங்களும் இந்த விழாவை விட்டு விலகியதே. இதுகுறித்து GSMA தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ஹஃப்மான் கூறுகையில் ``வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸால் துரதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு விழாவை நடத்த முடியவில்லை. இதனால் திட்டமிட்டபடி பார்சிலோனாவில் பிப்ரவரி மாதம் 24 முதல் 27 வரை நடைபெறவிருந்த விழா ரத்து செய்யப்பட்டுள்ளது" என்றார்.

corona outbreak
corona outbreak

GSMA என்னும் இந்தத் தொழில் வர்த்தக அமைப்பானது 1,200 மொபைல் நிறுவனங்களின் பிரதிநிதியாகத் திகழ்கிறது. மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் என்பது ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் விழாவாக இருக்கிறது. இதில் பார்ட்னர்ஷிப் டீல்கள் மற்றும் புதிய மொபைல் மாடல்களின் அறிமுகம் நடைபெறும். இவ்விழாவால் 492 மில்லியன் யூரோ அளவிற்கு பொருளாதார தாக்கம் இருக்கும். இவற்றோடு 14,100 பகுதி நேர வேலை வாய்ப்புகளும் ஏற்படும் .

Vikatan

மொபைல் வேர்ல்டு காங்கிரஸின் 2020 ஆம் ஆண்டு விழாவில் பல முக்கிய சீன மொபைல் நிறுவனங்கள் பங்குபெறுவதாக இருந்தன. இதன் காரணமாக இந்த மாத தொடக்கத்திலேயே எல்.ஜி நிறுவனம் விழாவிலிருந்து விலகுவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து இசட்டிஇ, எரிக்ஸன், என்விடியா(nvdia), இன்டெல், விவோ, சோனி, அமேசான், என்டிடி ஆகியவையும் விலகின. இந்த வாரம் சிஸ்கோ, நோக்கியா, பிடி, எச்எம்டி ஆகியவையும் விலகுவதாக அறிவித்ததால் விழா ரத்து செய்யப்பட்டது.

GSMA
GSMA

இதுவரை கொரோனா வைரஸால் 40,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1000-க்கும் மேலானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் சீனாவின் ஹுபே மாகாணத்தைச் சுற்றித்தான் ஏற்பட்டுள்ளன. இதுவரை 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் GSMA அமைப்பு விழாவிற்கு வருபவர்களுக்கு வைரஸ் பாதிக்காமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் முக்கியமானது ,விழாவிற்கு வரும் நபர்கள் கைகளை குலுக்கிக்கொள்ளாமல் இருப்பதாகும். இதோடு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான வுகான் பகுதியிலிருந்து மக்கள் வருவதையும் தடை செய்திருந்தது. இவ்வாறு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் காட்சியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விழாவை ஜிஎஸ்எம்ஏ நிறுவனத்தால் நடத்த முடியவில்லை.

அடுத்த கட்டுரைக்கு