பிரபஞ்ச பேரதிசயங்களை நாசா தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. அந்த வரிசையில் செவ்வாய்க்கிரகத்தில் நீர் இருக்கிறதா, இல்லையா, மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா போன்ற ஆய்வுகளை நாசா நடத்தியுள்ளது. இதற்காக 2003-ல் நாசா தொடங்கியதுதான் `மார்ஸ் ரோவர்ஸ் ஆப்பர்ச்சூனிட்டி' (Mars Rover Opportunity). 2004-ல் பத்திரமாகச் செவ்வாயில் தரையிறங்கிய மார்ஸ் ரோவர்ஸ், அதன் மேற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டது. ஆராய்ச்சியின் காலநிலை 90 நாள்கள் என்று இருந்தபோதும், செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பை சுமார் 15 ஆண்டுகளாக ஆப்பர்ச்சூனிட்டி ஆராய்ந்தது.

இந்நிலையில், சென்னை அண்ணாசாலை, ஜெமினி வளைவில் அமைந்துள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் நாசாவின் மார்ஸ் ரோவர் ஆப்பர்ச்சூனிட்டியின் முழு அளவிலான மாதிரி பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை அமெரிக்கத் துணைத் தூதர் ஜூடித் ரேவின் டிசம்பர் 8-ம் தேதி வியாழக்கிழமையன்று திறந்து வைத்தார்.
2023 ஜனவரியில் இருந்து திங்கள் முதல் வெள்ளி, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்தக் கண்காட்சி பொது மக்களுக்காகத் திறந்திருக்கும். கார்னெல் பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த மாதிரி, முதலில் வாஷிங்டன் டி.சி-யில் உள்ள ஸ்மித்சோனியனின் விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்திலும், அதன்பின் 2020-ல் துபாயின் சர்வதேச கண்காட்சியின்போதும் காட்சிக்கு வைக்கப்பட்டது. தற்போது இந்த மாதிரி சென்னை வந்தடைந்துள்ளது.

செவ்வாய்க்கிரக ஆய்வுகள் குறித்து பல முக்கியமான தகவல்களையும், ஆய்வில் சாதனை படைத்த மார்ஸ் ரோவர் செயல்பாடுகளையும் மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. எனவே, மாணவர்களை அழைத்து வர விரும்பும் பள்ளிகள், இம்மையத்தைத் தொடர்புகொண்டு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். (மின்னஞ்சல்: ChennaiAmCenter@state.gov | தொலைபேசி: 044-2857-4223)
இது குறித்துப் பேசிய அமெரிக்கத் துணைத் தூதர் ஜூடித் ரேவின், ``இன்று, செவ்வாய்க்கிரக ஆய்வில் சாதனை படைத்த மார்ஸ் ரோவரை காண நீங்கள் வந்துள்ளீர்கள். தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், வேளாண் கண்காணிப்பு மற்றும் வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றத்துக்கு வழி வகுத்த, விண்வெளி ஆய்வுக்காக உருவாக்கப்பட்ட தொழில் நுட்பங்கள் நம் அன்றாட வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

உலகத்தை மாற்றியமைப்பதற்கு நமது அமெரிக்க மற்றும் இந்திய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளது. நாசா மற்றும் இஸ்ரோ உட்பட விண்வெளித் துறையில் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து விரிவடையும் என நாங்கள் நம்புகிறோம். செவ்வாய் மற்றும் அதைத் தாண்டிய எதிர்கால பயணங்கள் இதில் அடங்கும்.
நீங்கள் எதைப் படிக்க விரும்புகிறீர்கள், எங்கு வேலை செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குகையில், விண்வெளித் துறையில் உங்களுக்கு முன்னால் இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் ஆராய உங்களைப் போன்ற மாணவர்களை இந்தக் கண்காட்சி ஊக்குவிக்கும். இதன் மூலம் உங்களில் பலர் விண்வெளி கல்வி மற்றும் பணி குறித்து உத்வேகம் பெறுவீர்கள் என நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.