Published:Updated:

`ஸ்டேட்டஸை மறைக்கலாம்; ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யலாம்!' வரவிருக்கும் வாட்ஸ்அப் அப்டேட்ஸ்

இந்த வசதிகளைக் கூடிய விரைவில் வாட்ஸ்அப்பில் எதிர்பார்க்கலாம்

வாட்ஸ்அப்பை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது புதிதாகச் சில வசதிகள் சேர்க்கப்படுவது வழக்கம். அது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வசதியாகவோ முற்றிலும் புதிய வசதியாகவோ இருக்கலாம். அதுபோல வாட்ஸ்அப்பில் விரைவில் வரப்போகும் சில புதிய வசதிகள் இதோ.

Fingerprint Sensor ( WABetaInfo )

ஃபிங்கர் பிரின்ட் சென்ஸாரைப் பயன்படுத்தலாம்

இப்போது ஆண்டராய்டு ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலானவற்றில் ஃபிங்கர் பிரின்ட் சென்ஸார் இருக்கிறது. இதை வைத்து தற்போது மொபைலை அன்லாக் செய்பவர்களே அதிகம். அதே ஃபிங்கர் பிரின்ட் சென்ஸாரை ஆப்பின் பாதுகாப்புக்கும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது வாட்ஸ்அப். இதன் மூலமாக வாட்ஸ்அப்பின் பாதுகாப்பு அடுத்த கட்டத்துக்குச் செல்லும். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் ஒரு வசதியான இது ஐஓஎஸ்ஸுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டு சில மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது மிச்சம் இருப்பது ஆண்ட்ராய்டு மட்டுமே. அதற்கும் கூடிய விரைவில் இந்த வசதி கொடுக்கப்படவுள்ளது.

வாட்ஸ்அப்

Ranking of contacts

இப்போது அண்மையில் யார் மெசேஜ் செய்தார்களோ அவர்களது பெயரே, Chat-ல் மேலே இருக்கும். இப்போது அதில் மாற்றம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது வாட்ஸ்அப். அதன்படி யாருடன் அதிகமாகச் சாட் செய்கிறோமோ அவர்களது பெயர் முதலாவதாகக் காட்டப்படும்.

'frequently forwarded’ ( WABetaInfo )

ஃபார்வர்டுக்கு கடிவாளம்

இந்தியாவைப் பொறுத்தவரையில் வாட்ஸ்அப்புக்கு பெரும் தலைவலி கொடுப்பது ஃபார்வர்டு மெசேஜ்கள்தாம். போலி செய்திகளைப் பரப்புவதில் இத்தகைய ஃபார்வர்டு மெசேஜ்களுக்குப் பெரிய பங்குண்டு. ஒரு வழியாக அதைப் பல கட்டுப்பாடுகள் மூலமாகக் குறைத்திருக்கிறது வாட்ஸ்அப். இப்போது அதில் மேலும் ஒரு அப்டேட்டை செய்யவுள்ளது. அதன்படி நான்கு தடவைக்கு மேல் ஒரு மெசேஜை அனுப்பும்போது அது அடிக்கடி ஃபார்வர்டு செய்யப்படுகிறது என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் ‘frequently forwarded’ என்ற வார்த்தை அதில் சேர்க்கப்படும். இதனால் அந்த மெசேஜைப் பெறுபவர் அதை மற்றவர்களுக்கு அனுப்புவது குறையும்.

Hide Status

ஸ்டேட்டஸை மறைக்கலாம்

வாட்ஸ்அப் என்பது வெறுமனே சாட் செய்வதற்கான ஆப் என்பதை மாற்றியது அதில் இடையே புதிதாகச் சேர்க்கப்பட்ட வசதிகளில் ஒன்றான ஸ்டேட்டஸ் வசதி. இப்போது வாட்ஸ்அப்பில் இருக்கும் ஒரு முக்கியமான வசதிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. அதில் விளம்பரங்களைக் காட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது ஒருவருடைய ஸ்டேட்டஸை பார்க்க விரும்பவில்லை என்றால் மியூட் செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. அதன் மூலமாக மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் காட்டப்படாது. ஸ்டேட்டஸின் கீழ்ப் பகுதியில் அது இருக்கும், முழுவதுமாக பார்க்க முடியாதபடி மறைக்க முடியாது. இப்போது Hide Status என்ற இந்த வசதியின் மூலமாக ஒரு ஸ்டேட்டஸை முழுவதுமாக மறைத்துவிடலாம். இது தற்போது பீட்டா பதிப்பில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

Status sharing ( WABetaInfo )

ஸ்டேட்டஸை ஷேர் செய்யலாம்

இந்த வசதி கொடுக்கப்பட்டால் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் , ஜிமெயில் எனப் பல தளங்களில் ஷேர் செய்துகொள்ளலாம். டேட்டா ஷேரிங் API மூலமாக ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என அனைத்துக்கும் இது தரப்படும். ஏற்கெனவே வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என அனைத்து தளங்களையும் ஒருங்கிணைக்கும் பணியில் இருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். அதன் ஒரு பகுதியாக இந்த வசதி வாட்ஸ்அப் பயனாளர்களுக்குத் தரப்படவுள்ளது.

Dark Mode ( WABetaInfo )

டார்க் மோடு

மொபைலில் இருக்கும் ஆப்கள் ஒவ்வொன்றாக டார்க் மோடுக்கு மாறி வருகின்றன. இறுதியாக ட்விட்டர் டார்க் மோடுக்கு மாறியது. வாட்ஸ்அப்பும் நீண்ட காலமாக இதைப் பரிசோதித்து வருகிறது. அதைக் கூடிய விரைவில் அனைவருக்கும் கொடுக்கும் முடிவில் இருக்கிறது. ஆனால் இது AMOLED டிஸ்ப்ளேக்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு இது பெருமளவுக்கு உதவலாம். காரணம் முழுமையான கறுப்பு நிறம் திரையின் பயன்பாட்டைக் குறைக்கும் என்பதால் சார்ஜை சேமிக்க உதவும். அதே வேளையில் இது கண்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் வெகுவாகக் குறைக்கும்.

QR code ( WABetaInfo )

QR கோடு ஸ்கேனர்

வாட்ஸ்அப்பின் உள்ளே தனியாக QR code ஸ்கேன் செய்வதற்கான வசதி கொடுக்கப்படவுள்ளது. இதன் மூலமாக ஒருவருடைய தொடர்பு எண்ணை ஸ்கேன் செய்வதன் மூலமாக வாட்ஸ்அப்பில் சேர்த்துக்கொள்ள முடியும். கடந்த நவம்பர் மாதமே இந்த வசதியைப் பற்றிய தகவல் வெளிவந்தாலும் கூட பீட்டா பதிப்பில் இதுவரை சோதனை செய்யப்படவில்லை. QR code மூலமாக ஒருவருடைய தொடர்பு எண்ணை எளிதாக ஷேர் செய்து கொள்ளவும் முடியும்.