சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

மடக்கலாம் சுழற்றலாம்!

போன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
போன்கள்

அசத்தலாய் அடுத்த தலைமுறை போன்கள்

த்தே வருடங்களில் உலகத்தைத் தலைகீழாகப் புரட்டி போட்டிருக்கிறது ஸ்மார்ட்போன்களின் அபார வளர்ச்சி. இன்றெல்லாம் ஒரு வருடத்திற்குள் ஸ்மார்ட்போன்கள் அவுட்டேட் ஆகிவிடுகின்றன.

அப்படி பாப்-அப் செல்ஃபி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், 50x ஜூம் கேமரா வரிசையில் அடுத்த முக்கிய மாற்றமாகக் காணப்படுவது போல்டபிள் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்கள்தான். இன்று ஒரு ஸ்மார்ட்போனின் மிக முக்கிய அங்கமாக இருப்பது டிஸ்ப்ளேதான். இதனால் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் முடிந்த அளவு பெரிய டிஸ்ப்ளேக்களை கையடக்க வடிவத்தில் கொடுக்கவேண்டும் என சில வருடங்களாகவே தீவிரமாக முயற்சி செய்துவருகின்றன. இப்படித்தான் முன்புறம் செல்ஃபி கேமராவுக்கு மட்டும் இடம்விட்டு நாட்ச், பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேக்கள் பிரபலமாகின. இன்று பெரும்பாலானவர்கள் இதுபோன்ற டிஸ்ப்ளே கொண்ட போனைத்தான் வைத்திருக்கிறார்கள். இப்படி செல்ஃபி கேமரா இருப்பதுகூட முழு டிஸ்ப்ளே அனுபவத்திற்குத் தொந்தரவுதான் என அடுத்து பாப்-அப் செல்பி தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்தன ஒன்ப்ளஸ் போன்ற சில நிறுவனங்கள். போட்டோ எடுக்கும்போது மட்டும் போனிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தது இந்த பாப்-அப் செல்ஃபி கேமரா. இதுவும் போதாது என இப்போது இருக்கிற இடம் தெரியாமல் டிஸ்ப்ளேவுக்குப் பின் ஒளிந்துகொள்ளும் அண்டர்-டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவதில் ஒப்போ, ஷாவ்மி போன்ற நிறுவனங்கள் ஆர்வம் காட்டிவருகின்றன.

மடக்கலாம் சுழற்றலாம்!

இந்த விஷயத்தில் ‘ஏன் தேவைக்கேற்ப போனை மடக்கிவைத்துக்கொள்ளக் கூடாது?!’ எனச் சில நிறுவனங்கள் மாற்றி யோசித்ததன் விளைவுதான் போல்டபிள் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்கள். சில ஆண்டுகளுக்கு முன்பே மாதிரிகளை உலகத்துக்குக் காட்சிப்படுத்தின சில நிறுவனங்கள். ஆனால் எதுவும் பயன்பாட்டுக்கு வரும் அளவுக்கு முழு வடிவம் பெறவில்லை. சந்தைக்குப் பெரிய எதிர்பார்ப்புடன் வந்த முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் என்றால் அது சாம்சங்கின் கேலக்ஸி Z போல்டுதான். மடக்கினால் வெளிப்புறத்தில் ஒரு டிஸ்ப்ளே இருக்கும். அப்படியே திருப்பினால் சாதாரண ஸ்மார்ட்போனைப் போன்றதொரு பின்புறம் இருக்கும். வெளியே ஒரு டிஸ்ப்ளே இருப்பதால் இதை சாதாரண போன்போலப் பயன்படுத்திக்கொள்ள முடியும். கைக்கு அடக்கமாகவும் இருக்கும். பெரிய திரை தேவைப்படும் பட்சத்தில் இதை அப்படியே விரித்துக்கொள்ளலாம். உள்ளே பெரிய மினி டேப்லெட் அளவிலான பெரிய டிஸ்ப்ளே இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் மொத்தம் ஆறு கேமராக்கள். முன்புறமாக ஒன்று, பின்புறம் மூன்று மற்றும் உட்புறமாக இரண்டு என ஸ்மார்ட்போனின் அனைத்துப் பக்கங்களிலும் கேமராக்கள் உண்டு. இதனால் மடக்கிப் பயன்படுத் தினாலும் சரி, விரித்துப் பயன்படுத்தினாலும் சரி கேமரா ஒரு பிரச்னையாக இருக்காது.

மடக்கலாம் சுழற்றலாம்!

ஒரு நாளைக்கு 100 தடவைக்கு மேல் இதை மடக்க வேண்டியிருக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு இதன் மடக்கும் வடிவமைப்பை இறுதி செய்தது சாம்சங்.

ஆனால் இப்படிப் பார்த்துப் பார்த்து கேலக்ஸி Z போல்டை வடிவமைத்த சாம்சங் சந்தித்த முதல் பந்தே பவுன்சர்தான். பிரமாண்ட அறிமுக விழாவில் அறிமுகப்படுத்திய சில நாள்களில் உலகமெங்கும் இருக்கும் கேட்ஜெட் விமர்ச கர்களுக்கு இந்தப் போனை அனுப்பிவைத்தது சாம்சங். போனைப் பெற்ற பலருக்கும் இரண்டு, மூன்று நாள்களிலேயே டிஸ்ப்ளே செயலிழந்துபோனது. காரணம், இந்த போல்டபிள் டிஸ்ப்ளேவைப் பாதுகாக்க மேலே பிளாஸ்டிக் லேயர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. பலரும் இது எப்போதும் போல பேக்கிங்கிற்காக கொடுக்கப்பட்டது என மொத்தமாகக் கிழித்துவிடப் பார்த்திருக்கின்றனர். ஆனால், அது இந்தப் போனின் முக்கியப் பகுதி. மதிப்பீட்டாளர்களின் விமர்சனங்களுக்குப் பின் இந்தச் சிக்கலுக்குத் தீர்வுகாணப்பட்டு விற்பனைக்கு வந்தது. போல்டபிள் போன்களுக்கு பிள்ளையார் சுழி போட்டுவைத்த இந்தப் போனின் அடுத்த மாடலான கேலக்ஸி Z போல்ட் 2-வும் சமீபத்தில் அறிமுகமானது. இது விமர்சகர்கள் இடையே நல்ல பெயரை வாங்கியிருக்கிறது.

மடக்கலாம் சுழற்றலாம்!

இது இல்லாமல் கேலக்ஸி Z ஃபிளப் என்ற ஃபிளப் போன் ஒன்றையும் இந்த வருடம் அறிமுகம் செய்தது சாம்சங். நோக்கியா ஃபிளிப் போன்கள் நினைவிருக்கிறதா, அதேபோன்ற வடிவில் முழுவதுமாக டச் டிஸ்ப்ளே இருந்தால் எப்படியிருக்கும் என யோசித்துப்பாருங்கள். அதுதான் கேலக்ஸி Z ஃபிளப். இதேபோன்று மோட்டோரோலாவும் Razr என்ற ஃப்ளிப் போனை இந்த வருடத்தின் தொடக்கத்தில் அறிமுகம் செய்தது. மைக்ரோசாப்ட் இதில் கொஞ்சம் வித்யாசமாக டூயல் டிஸ்ப்ளே போனை(Surface Duo) அறிமுகம் செய்தது. புத்தகம் போல இதைத் திறந்து பயன்படுத்திக்கொள்ளலாம். இரு பக்கமும் டிஸ்ப்ளே இருக்கும். 360 டிகிரி உங்களால் சுழற்றமுடியும். மேலும் ஹுவாவே, ஷாவ்மி போன்ற நிறுவனங்களும் தத்தமது போல்டபிள் போன்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தின.

இதுபோன்ற போல்டபிள் போன்களால் பயன்கள் ஏராளம். கீ-போர்டுக்கு அதிகம் இடம் கிடைக்கும் என்பதால் மினி லேப்டாப் /டேப்லெட் போல இருக்கின்றன இவை. கேமிங், ஸ்ட்ரீமிங் போன்ற பொழுதுபோக்கு விஷயங்களுக்கும் தரமான போனாக இவை இருக்கின்றன.

மடக்கலாம் சுழற்றலாம்!

அதே நேரத்தில் போல்டபிள் டிஸ்ப்ளேவில் சிக்கல்களும் உண்டு. முதல் விஷயம் பலம். மடக்கக்கூடிய OLED டிஸ்ப்ளேக்கள் சாதாரண டிஸ்ப்ளேக்களைவிட மிகவும் மெல்லியதாக இருக்கும். இதனால் இவை சேதமடைந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். டெம்பர் கிளாஸ் எதுவும் ஒட்டமுடியாது. இதனால் நீண்ட நாள்கள் இவை நீடிக்குமா என்பதும் இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அடுத்தது விலை. விலையுயர்ந்த ஐபோன்களைவிட இந்தப் போன்களின் விலை அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் வந்த கேலக்ஸி Z ப்ளிப் விலைதான் கொஞ்சம் குறைவு என்றார்கள். அதன் இந்திய விலை 1,08,999 ரூபாய். இந்த விலையிலும் போல்டபிள் போன்களை வாட்டர்ப்ரூப்பாக நிறுவனங்களால் வடிவமைக்கப்படவில்லை. இன்னும் சில விஷயங்களும் போல்டபிள் டிஸ்ப்ளே வடிவமைப்பின் காரணமாக மிஸ் ஆகிறது.

மென்பொருள் அளவில் ஆண்ட்ராய்டு 10,11 இரண்டுமே போல்டபிள் போன்களுக்கென பிரத்யேக வசதிகளைக் கொண்டுவந்தன. இந்த போல்டபிள் டிஸ்ப்ளேக்களின் முழுத் திறனையும் பயன்படுத்த நல்ல மென்பொருள் அவசியம். அதற்கான முன்னேற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.

எல்ஜி சில நாள்களுக்கு முன்பு ‘விங்’ என்ற போனை அறிமுகம் செய்தது. இதில் மற்ற நிறுவனங்கள் முயற்சி செய்யாத ஒரு புதிய வடிவத்தை முயற்சி செய்திருக்கிறது எல்ஜி. இதை ‘டபுள் டக்கர்’ பஸ் போல இதை ‘டபுள் டக்கர்’ டிஸ்ப்ளே எனலாம். இரண்டு டிஸ்ப்ளேக்கள் ஒன்றன்மீது ஒன்று எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் மேலுள்ள டிஸ்ப்ளேவை மட்டும் உங்களால் திருப்பி ‘T’ வடிவத்தில் போனைப் பயன்படுத்த முடியும். அதாவது புல் ஸ்க்ரீனில் யூடியூப் பார்த்துக்கொண்டிருக்கும் போது கீழே கமென்ட்ஸுக்குத் தனியாக டிஸ்ப்ளே இருந்தால் எப்படியிருக்கும். அப்படித்தான் இருக்கிறது எல்.ஜி விங் வடிவமைப்பு. படங்களைப் பார்த்தால் இன்னும்கூட தெளிவாக இது புரியும். வீடியோ ஷூட் செய்வது, மல்டி டாஸ்கிங் தொடங்கி கேம் ஆடுவது வரை இந்த T வடிவத்தினால் ஏகப்பட்ட பயன்கள்.

இது வெறும் ஆரம்பம்தான். அனைத்துமே புதிய முயற்சிகள் என்பதால் ஆரம்பத்தில் வெறும் ஆடம்பரத் தயாரிப்புகளாக இவை இருப்பது இயல்புதான். காலம் செல்லச் செல்ல இந்தத் தொழில்நுட்பமும் மெருகேறும், போல்டபிள் போன்கள் அனைவருக்குமானதாக மாறும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். இதுபோன்ற மாற்றங்கள் எப்போதையும்விட இப்போது படுவேகமாகவும் நடக்கிறது. இதனால் இன்னும் ஐந்து வருடங்களில் இவை ஸ்மார்ட்போன்களின் ‘நியூ நார்மல்’ என்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களுக்கு ரெடியா மக்களே?!