Published:Updated:

'நோக்கியாவின் முதல் ஸ்மார்ட்-டிவி ரெடி!'- இந்தியாவிலேயே தயாராகிறது

நோக்கியா, ஃபிளிப்கார்ட் இடையேயான இந்த கூட்டணி, டிவி சந்தையில் ஒரு தடம் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நோக்கியா
நோக்கியா

ஸ்மார்ட்போன்கள் எல்லாம் வருவதற்கு முன் நல்ல போன் என்றாலே அது நோக்கியா மட்டும்தான் என்ற நிலைதான் இந்தியாவிலிருந்தது. ஆனால் ஏனோ ஸ்மார்ட்போன்கள் வருகைக்கு பின் அந்த இடத்தை நோக்கியாவால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் நோக்கியா களமிறங்கவுள்ளது. இந்தியாவில் இதை ஃபிளிப்கார்ட் நிறுவனம் தயாரித்து விற்கும் என்று நோக்கியா அறிவித்துள்ளது. நோக்கியா, ஃபிளிப்கார்ட் இடையேயான இந்த கூட்டணி, டிவி சந்தையில் ஒரு தடம் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், நாங்கள் இந்த ஸ்மார்ட் டிவியை இந்தியாவிலேயே தயாரிக்கிறோம். இதனால் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகமாகும்" என்று தனது அறிக்கையில் தெரிவித்தது ஃப்ளிப்கார்ட்.

ஃப்ளிப்கார்ட்
ஃப்ளிப்கார்ட்

நோக்கியாவின் ஸ்மார்ட் டிவி பல நவீன செயல்பாடுகளுடன் வெளிவருமாம். அதில் ஒன்று JBL-ன் ஆடியோ தொழில்நுட்பம். அந்த நிறுவனத்தின் உதவியுடன் சிறந்த ஆடியோ தரம் இந்த டிவிகளில் நிறுவப்படும். வீடியோ வேற லெவலாக இருந்தாலும் ஆடியோ தரம் சுமாராக இருப்பதைக் காரணம் காட்டி பல ஸ்மார்ட் டிவிகள் சாதிக்காமல் போயிருப்பதால் சிறப்புக் கவனத்துடன் நோக்கியாவின் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பில் நோக்கியாவின் இந்த ஸ்மார்ட் டிவிகள் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரிவிக்கப்படவில்லை. விலை, அளவு போன்ற விவரங்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

ஸ்மார்ட் டிவி
ஸ்மார்ட் டிவி

ஒன்ப்ளஸ், மோட்டோரொலா போன்ற மொபைல் நிறுவனங்களைத் தொடர்ந்து நோக்கியாவும் மொபைல் டு டிவி பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறது. தனக்கென இருக்கும் பழைய வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்ப்பதற்குத் தயார் ஆகிக்கொண்டிருக்கிறது நோக்கியா. தயாரிப்பிலிருந்து அனைத்துமே ஃபிளிப்கார்ட்டுடையது என்பதால், பெயருக்கான ராயல்டியை மட்டுமே நோக்கியா பெற்றுக்கொள்ளும்.